கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்தப் பள்ளிக்கு கல்வித்துறை உயரதிகாரியின் அனுமதியோடு விடுப்பு விடப்பட்டது. ஆனால், இந்த விஷயம் தெரியாத, கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், அந்த பள்ளிக்கு ஆய்வுக்கு சென்று, 'இது என்ன உங்க அப்பன் வீட்டு பள்ளியா?' என்று பேசியதோடு, 'இந்தப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்க' என்று கல்வித்துறை அதிகாரிக்கு உத்தரவிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் ஒருபக்கம் வைரலாக, மற்றொருபுறம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஆட்சியருக்கு இந்த விஷயத்தை தெரிவிக்காததே இத்தனைக்கும் காரணம் என தெரியவந்தது. அதன்பிறகே, விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.
Also Read: நாமக்கல்: குடும்பத் தகராறு; கொதிக்கும் எண்ணெயைக் கணவன் தலையில் ஊற்றிய மனைவி!
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள பொரணியில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவர்களின் ஆலோசனைபடி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில், சுகாதாரத்துறையினர் அந்த பள்ளிக்கு சென்று மற்ற ஆசிரியர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், பொரணி அரசு மேல்நிலை பள்ளிக்கு கடந்த செவ்வாய் அன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சண்முகசுந்தரத்திடம் கலெக்டர் கேட்டபோது, அவர் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதனால், கோபமான ஆட்சியர், 'இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?. ஒன்றரை வருடமா வீட்டில் இருந்தீங்க. இப்போது பள்ளிக்கு வருவதற்கு என்ன?' என்கிற ரீதியில் பேசியதாக சொல்லப்படுகிறது.
அதோடு, ஆசிரியர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்த நிலையில், பிற ஆசிரியர்கள் எங்கே என கலெக்டர் கேட்டபோது, 'அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதால் பள்ளிக்கு வரவில்லை' என்று தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார். இதனைதொடர்ந்து, அங்கிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பராசக்தியிடம், 'பள்ளிக்கு விடுமுறை விட அனுமதி அளித்து உத்தரவு ஏதும் வழங்கப்பட்டதா?' என கேட்டார். அப்போது அவர், 'இல்லை' என்று கூறினார். இதனால் கோபமான ஆட்சியர், தனது கவனத்துக்கு கொண்டுவராமலும், கல்வித்துறையின் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக முடிவெடுத்து பள்ளிக்கு விடுமுறை விட்டது ஏன்? என்பது குறித்தும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது ஏன்? என்பது குறித்தும், பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம் மறுநாள் மீடியாவில் செய்தியாக, விவகாரம் பெரிதானது. இந்த நிலையில், ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இதுகுறித்து பள்ளியில் நடந்தது இதுதான் என்று ஒரு விளக்கத்தை சமூகவலைதளங்களில் பரப்பினர். அதில், 'அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம். கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடக்கக் கூடிய நிகழ்வுகள் ஆசிரியர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் கொடுப்பதாக உள்ளது. கரூர் பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரானா தொற்று சனிக்கிழமை (செப்டம்பர் 4 - ஆம் தேதி) உறுதிசெய்யப்பட்டவுடன், உடனடியாக விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை அன்று அந்த பள்ளி ஆசிரியர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளனர். பள்ளி ஆசிரியைக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது, சனிக்கிழமையே கரூர் மாவட்ட கல்வித் துறைக்கு உடனடியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல் தெரிந்ததும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இந்த தகவலை தெரியாமல் மறைத்தது யார்?. கோவிட் பாதித்த செய்தி மாவட்ட ஆட்சியருக்கு முறைப்படி சனிக்கிழமையே தெரிவிக்கப்பட்டிருந்தால், அவர் முடிவு செய்திருப்பாரே?. திங்கள் கிழமை (செப் 06) காலை கூட மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், மாவட்ட கல்வி அலுவலரும் ஒன்றாக இருந்துள்ளார்களே?. ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு டி.இ.ஓ, சி.இ.ஓ என யாரவது ஒருவர் இத்தகவலை சொல்லி ஆலோசனை கேட்டு இருக்கலாமே?.
மெத்தனமாக செயல்பட்டது சி.இ.ஓ, டி.இ.ஓ உட்பட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்தானே?!. அதோடு, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் அவர்களின் அறிவுறுத்தல்படிதான் செவ்வாய்கிழமை (செப் 07) பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதை தெரிவிக்காமல், ஆட்சியரின் அருகில் நின்ற கரூர் மாவட்ட கல்வி அலுவலர் வாய்மூடி மௌனமாக இருந்தது மிக அதிர்ச்சியாக உள்ளது. கரூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரியாமல் தான், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொரணி பள்ளிக்கு விடுமுறை விட்டாரா?. உண்மை செய்தி இப்படி இருக்க, ஏதோ ஆசிரியர்கள் தவறு செய்தது போல மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
இரண்டு அதிகார மோதல்களுக்கு இடையே அப்பாவி ஆசிரியர்களை பலிகடா ஆக்கிவிட வேண்டாம்' என்று பதிவிட, விவகாரம் விறுவிறுப்பானது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த ஆய்வின்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் விடுமுறை அளித்தது குறித்து மட்டுமே எச்சரிக்கை செய்யப்பட்டது. வரும் காலங்களில் கடும் சொற்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். கரூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்துவோம்' என்று தனது செயலுக்கு மன்னிப்பு கோரும்விதமாக பதிவிட, அதன்பிறகே விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய நேரடி நியமன முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கருர் மாவட்ட இணைச் செயலாளர் கோ.இளங்கோ,
"அந்த பள்ளியில் முறைப்படி உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான், அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், அதுதெரியாமல் ஆட்சியர், பள்ளி ஆசிரியர்களை கடுமையான வார்த்தையால் பேசினார். கம்யுனிகேஷன் பிரச்னையால் நடந்த தவறு இது. ஆனால், 'இது உங்க அப்பன் வீட்டு சொத்தா?. ஒன்றரை வருஷமா ஆசிரியர்கள் வீட்டில் இருந்தீங்க'னு ஆட்சியர் வீசிய சூடான வார்த்தைகள், ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் புண்படுத்திவிட்டது. உண்மையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் நாங்க, அவ்வளவு அர்ப்பணிப்போடு பணிபுரிந்து வருகிறோம். அந்த பள்ளி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, கிருமிநாசினி தெளிக்க வந்திருக்காங்க. ஆனா, ஆட்சியர் அப்படி பேசியது, அவர்கள் மனதை எவ்வளவு புண்படுத்தியிருக்கும்?. பள்ளி என்பது யார் வீட்டு சொத்தும் இல்லை.
அது, நம் அனைவரின் சொத்து. கல்வியை வளர்ப்பதில் ஆசிரியர்கள், ஆட்சியர் என எல்லோரும் சேர்ந்துதான் பங்கெடுத்துக்கணும். ஆனால், இதுபோல் பேசுவது எங்கள் உற்சாகத்தை குறைக்கவே செய்யும். ஏற்கனவே, பல அரசுப் பள்ளிகளில் பியூன், துப்புரவு பணியாளர்கள், தோட்டக்காரர்கள். இரவு வாட்ச்மேன் என பல வேலையாள்கள் இல்லாமல், அந்த காலியிடங்களில் புதுநபர்கள் நிரப்பபடாமல் உள்ளது. அந்த விசயங்களையும், நாங்க சொந்த முயற்சியில் மாற்று ஏற்பாடு செய்து, பள்ளிகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறோம். இதுபோன்ற சூழலில், எங்களை தட்டிக்கொடுக்க கூட வேண்டும். எங்க உற்சாகத்தை குறைக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமாரிடம் பேசினோம்.
"அந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. அதை விடுங்கள். வேறு விசயங்கள் குறித்து பேசலாமே" என்றதோடு, முடித்துக்கொண்டார்.
source https://www.vikatan.com/news/controversy/karur-collector-faced-controversy-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக