தமிழக நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை போதுமானதாக இல்லை என்று பொதுத்துறையிடம் முறையிட்டிருக்கிறார். இப்போதுள்ள அறையைவிட பெரிய அறையை நிர்வாக வசதிக்காகக் கேட்பவர், நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் அறைக்கு அருகே அறையை எதிர்பார்க்கிறாராம்.
அதைத் தர வேண்டுமானால், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறைகளை காலிசெய்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமாம். `அதைச் செய்தாலும் பரவாயில்லை. எனக்குப் பெரிய அறையைத் தாருங்கள்’ என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு. இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்று குழம்பிபோயிருக்கும் தலைமைச் செயலக உயரதிகாரிகள், முதல்வர் அலுவலகத்துக்கு விஷயத்தைக் கொண்டுபோயிருக்கிறார்கள்.
சென்னை கருணாநிதி நகர், தெற்கு வட்ட தி.மு.க செயலாளர் பி.எஸ்.முருகேசனின் சகோதரர் பி.எஸ்.கோவிந்தராஜ், தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் ஆற்காடு ரோட்டிலுள்ள ஹோட்டலுக்குச் சென்று 2,200 ரூபாய்க்கு டிபன், நான்வெஜ் அயிட்டங்களை வாங்கியிருக்கிறார். ஹோட்டல் உரிமையாளர் பணம் கேட்டதற்கு, ``என்கிட்டயே பணம் கேக்குறியா?” என்று கடை உரிமையாளர் ராமுவை அடித்துத் துவைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
இந்த விவகாரத்தில் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டவர், தற்போது ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டார். ``தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.தனசேகரனின் ஆதரவு இருப்பதால்தான் கோவிந்தராஜ் இப்படி அடாவடியாகச் செயல்படுகிறார்’’ என்று தலைமைக்கு ஒரு குரூப் மெசேஜ் அனுப்பியிருக்கிறது. ``தனசேகரன் பெயரைப் பயன்படுத்தி, பிளாட்பாரக் கடைகளில் கோவிந்தராஜ் மாமூல் வசூலிக்கிறார். பலமுறை புகாரளித்தும் தனசேகரன் உதவியுடன் தப்பித்துவருகிறார்’’ என்று புலம்புகிறார்கள் வணிகர்கள். கண்டுகொள்ளுமா தலைமை?
தமிழகத்தில் ஆம்னி பஸ்களுக்கு பர்மிட் புதுப்பிக்கும் உரிமையாளர்களிடம், `பர்மிட் கட்டணத்துடன், ஏற்கெனவே போன ஆட்சியில கொடுத்த மாதிரி ரெண்டு லட்ச ரூபாயையும் சேர்த்துக் கொடுங்க’ என்று அதிகாரிகள் கேட்கிறார்கள்.
`கொரோனாவால ரெண்டு வருஷமா பஸ் ஓடாம இருந்து, இப்போதான் ஓட ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள பணம் கேட்டா எப்படி? ஒரு ஆறு மாசம் போகட்டும்’ என்று ஆம்னி பஸ் முதலாளிகள் புலம்பியும், அதிகாரிகள் தரப்பு கண்டுகொள்ளவில்லையாம். கையில `காசு... ரோட்டுல பஸ்ஸு...’ என்று அதிகாரிகள் அடம்பிடிப்பதால், ``கடந்த ஆட்சியைப்போல இருக்காது என்று முதல்வர் சொன்னதெல்லாம் பொய்யா?” என்று புலம்புகிறார்கள் ஆம்னி பஸ் முதலாளிகள்.
கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணித் தலைவர் ராஜேஷ்வரன் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார் கணவனை இழந்த 38 வயது பெண் ஒருவர். இது பற்றி மாநிலத் தலைமைக்குத் தகவல் போயிருக்கிறது. தொடர்ந்து மாநில நிர்வாகி ஒருவர், மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிக்கு போன் செய்து அந்த விவகாரத்தைப் பேசி முடிக்கும்படி கூறியிருக்கிறார்.
ஆனால், குமரி மாவட்ட முக்கிய நிர்வாகியோ ``கட்சிப் பிரச்னை, அடிதடி வழக்கு சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கியிருந்தால் நான் பேசலாம். ஆனால், இந்த விவகாரத்தில் நான் பேசவே முடியாது” என்று மறுத்துவிட்டாராம். இதனால், மாநில நிர்வாகியின் முகம் சுருங்கிவிட்டதாம். ஏற்கெனவே பா.ஜ.க-வில் ஆடியோ, வீடியோ என்று பாலியல் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் பாலியல் பஞ்சாயத்து என்றாலே பதறி ஓடுகிறார்கள் பா.ஜ.க தொடர்புடையவர்கள்!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநிலம் முழுவதும் கட்டடம் கட்டும் பணிகளில் ஒப்பந்ததாரர்களிடம் ஆளுங்கட்சி நிர்வாகிகள் 13 சதவிகித கமிஷன் பெற்றுவந்த நிலையில், தற்போதைய தி.மு.க ஆட்சியில் 16 சதவிகிதம் கேட்பதாகப் புலம்பல்கள் எழுந்துள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே இது தொடர்பான பஞ்சாயத்து தொடரும் நிலையில், சமீபத்தில் முக்கிய ஒப்பந்தாரர்கள் சிலர், மூத்த இனிஷியல் அமைச்சர்கள் இருவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ஆனாலும், அமைச்சர்கள் இருவரும் கமிஷன் விஷயத்தில் கறார் காட்டியிருக்கிறார்கள்.
Also Read: `எடப்பாடி பழனிசாமி, பன்னீருக்கு சிக்கல் தொடங்கி ஸ்டாலினின் புது உத்தரவு வரை'- கழுகார் அப்டேட்ஸ்
``நாங்க என்ன எங்களுக்கா கேட்குறோம்... மேல கேட்கச் சொல்றாங்க, கேட்குறோம்’’ என்று சொல்கிறார்களாம். ``முதலமைச்சரோ `பணிகள் தரமாக இருக்க வேண்டும்’ என்கிறார். ஆனால் அமைச்சர்களோ, கமிஷனில் `கறார்’ காட்டுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம்?’’ என்று புலம்பும் ஒப்பந்ததாரர்கள், இந்த விவகாரத்தை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முடிவில் இருக்கிறார்களாம்.
தென் மாவட்டங்களிலிருந்து குமரி எல்லை வழியாக, கேரளாவுக்கு கனிம வளங்களைக் கடத்தியதில் நெல்லையின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவரின் கை ஓங்கியிருந்ததாம். தற்போது குமரி மாவட்ட எல்லையிலுள்ள செக்போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், சமீபத்தில் அந்த மக்கள் பிரதிநிதி குமரி மாவட்ட கலெக்டரையும் எஸ்.பி-யையும் சந்தித்து, தனது லாரிகளை மட்டும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தாராம்.
இந்தத் தகவல் கட்சித் தலைமைக்குத் தெரியவந்ததும், அவரை அழைத்து டோஸ்விட்டிருக்கிறார்கள். கரன்ஸியைப் பார்த்து சீட்டைக் கொடுத்தால் இதுதான் நிலைமை என்று புலம்புகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.
திருத்துறைப்பூண்டியிலுள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உணவகமும், ஃபர்னிச்சர் கடையும் செயல்பட்டுவருகின்றன. கடைகளின் உரிமையாளர் நீண்டகாலமாகவே வாடகை கொடுக்காததால், நீதிமன்றத்தில் ஆணை பெற்று, கடைகளை காலி செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைப்பு காட்டினார்கள். ஆனால், இடையில் என்ன நடந்ததோ... வெளியேற்ற உத்தரவைத் தற்காலிகமாக அதிகாரிகள் நிறுத்திவைத்திருக்கிறார்கள். கேட்டால், புதுக்கோட்டை பிரதிநிதியின் உத்தரவு என்கிறார்கள் அதிகாரிகள். இதையடுத்து, ஜார்ஜ் கோட்டையின் கோயில் பிரதிநிதிக்கு புகார் மனு அனுப்பிய பக்தர்கள், இதென்ன நியாயம் என்று முறையிட்டிருக்கிறார்கள்!
கன்னியாகுமரி முன்னாள் எம்.பி ஹெச்.வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவுதினமான ஆகஸ்ட் 28 அன்று, அகஸ்தீஸ்வரத்திலுள்ள அவரது நினைவிடத்தில் மணிமண்டபத்தையும், உருவச்சிலையையையும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்துவைத்தார்.
அதில் பேசிய தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ-வுமான ரூபி மனோகரன், ``வசந்தகுமார் இருந்திருந்தால் அவர்தான் மாநிலத் தலைவராகியிருப்பார்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேச, அதே மேடையிலிருந்த தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரியின் முகம் வாடிவிட்டதாம். `மாநிலத் தலைவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவரிடம் பேசி சமாதானப்படுத்துங்கள்’ என்று ரூபி மனோகரனிடம் சீனியர்கள் சிலர் சொல்ல, தலைவரைச் சமாதானப்படுத்த படாதபாடுபட்டிருக்கிறார் ரூபி மனோகரன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தி.மு.க மற்றும் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் மாற்றி ஓட்டு போட்டதால், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைப் பிடித்தார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஜெயலெட்சுமி. அவருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் கலகக்குரல் கொடுத்துவந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தி.மு.க-வில் இணைந்துவிட்டார்.
``கட்சிக்குத் துரோகம் செய்த ஜெயலெட்சுமி உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் வலியுறுத்திவரும் நிலையில், ``ஆமாம். அவர் பதவி விலகத்தான் வேண்டும்’’ என்று தி.மு.க கவுன்சிலர்களும் கோரஸ் பாடுகிறார்கள். தன்னைக் கட்சிக்குள் கொண்டுவந்த அமைச்சர் ரகுபதியிடம் முறையிட்டும், பிரச்னை ஓய்ந்தபாடில்லையாம். ``இன்னும் சில தினங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட ஊராட்சியில் மாற்றம் ஏற்படும்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
source https://www.vikatan.com/news/politics/current-politics-update-from-kazhugar-about-ptr-and-others-happenings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக