Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

`இலுமினாட்டிகளால்தான் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்’- திருமாவளவன் சொல்லும் காரணம் என்ன?

``உலகில் நடக்கும் அனைத்து காலநிலை மாற்றங்களுக்கும் மனிதச் செயல்பாடுகள்தான் முழுமுதற் காரணம் என அறுதியிட்டுச் சொல்கிறது, ஐ.பி.சி.சி-யின் ஆறாவது அறிக்கை. ஐ.நா-வின் ஓர் அங்கமாகச் செயல்படும் இந்த அமைப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் `Climate Change 2021: The Physical Science Basis’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்தினாலும்கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலை, 3° செல்சியஸைத் தொட்டுவிடும் என்று கூறி ஒற்றைவரியில் உலகை அதிரவைத்தது.

காலநிலை ஆபத்து

அதைத் தொடர்ந்து, உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு சுற்றுச்சூழல் அமைப்பும் காலநிலை மாற்றத்துக்கான காரணிகளைக் கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தங்கள் நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்திவருகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டைச் சார்ந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, காலநிலை மாற்றம் குறித்தான தீவிரத்தன்மையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினர். சென்னை மெட்ரோ மேனர் விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி, வி.சி.க எம்.பி திருமாவளவன், எம்.எல்.ஏ-க்கள் தி.வேல்முருகன், ஜவாஹிருல்லா, டி.ஆர்.பி.ராஜா, நாகை மாலி, பேராசிரியர் ஜனகராஜன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பூவுலகின் நண்பர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள்

நிகழ்வைத் தொடங்கிவைத்து பேசிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்,`` ஐ.பி.சி.சி-யின் ஆய்வறிக்கை, 1750-ம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு மனித நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவிக்கிறது. அட்லாண்டிக் கடலிலுள்ள கிரீன்லாந்து, அயர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் வேகமாக உயரும். பனிப்பாறைக்குள் உறைந்திருக்கும் மீத்தேன் வாயுக்கள் வெளியேறும். குளிர்நீர் அதிகரிப்பால் கடல்நீரோட்டத்தின் சுழற்சிமுறை மாறும். தென்கிழக்கு ஆசியாவுக்கான மழை மேகங்கள் உருவாகும். அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றத்தால் இந்தியா பெருமளவு பாதிப்புக்குள்ளாகும்.

பொறியாளர் சுந்தர்ராஜன்

அதிக வெயில், அதிக மழை என இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான் இருக்கும்! இதை கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசாங்கங்கள் காலநிலை குறித்தான சட்டமியற்றுதலிலும், திட்டமியற்றுதலிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

ஜனகராஜன்

அதைத் தொடர்ந்து பேசிய நீரியல் நிபுணர் பேராசிரியர் ஜனகராஜன்,``இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையைக்கொண்டிருக்கும் தமிழ்நாடு, கடல்நீர் மட்ட உயர்வால் பெரும் பேரழிவை எதிர்நோக்கியுள்ளது. 2030 முதல் 2050-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இருக்கும் நாகப்பட்டினம், பிச்சாவரம், வேதாரண்யம், தூத்துகுடி போன்ற இடங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

குறிப்பாக சென்னையின் பெரம்பூர், ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகள் கடலில் மூழ்கி, சென்னையே தனித்தனி தீவுகளாக உருமாறும் நிலை உருவாகியிருக்கிறது. மேலும், காவிரி ஆற்றில் கட்டப்படும் அணைகள், அள்ளிச் சுரண்டப்படும் மணல்களால் கடைமடை டெல்டா மாவட்டங்கள் வண்டல் மண்ணில் வரத்தில்லாமல் நிற்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டங்களாலும் மண்ணுக்கடியில் வெற்றிடங்கள் ஏற்பட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களும் அமிழ்ந்துகொண்டிருக்கின்றன. எனவே, காலச் சூழ்நிலைக்கேற்ப புதிய திட்டங்களையும் தீர்வுகளையும் கொண்டுவர வேண்டும்" என்றார்.

பொறியாளர் சுந்தர்ராஜனும் பேராசிரியர் ஜனகராஜனும் பிரச்னைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விளக்கமாகப் பேசிய பின்னர், அரசியல்கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

கனிமொழி

தி.மு.க மகளிரணிச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, ``பூமித்தாய் என்று சொல்கிறோம், ஒருவேளை 'பூமித் தந்தை' என்று சொல்லப்பட்டிருந்தால் சுரண்டப்படாமல் இருந்திருக்குமோ என்ற எண்ணமே தோன்றுகிறது. முன்பெல்லாம் போர் நடவடிக்கைகளால் மக்கள் அகதிகளாகப் புலம்பெயர்ந்து சென்றார்கள். ஆனால், இனி கடலோரத்தில் வாழும் மக்கள், கடல் அரிப்பால் தங்கள் வாழ்விடங்களை இழந்து சொந்த நாட்டிலேயே காலநிலை அகதிகளாக மாறக்கூடும். டெவலப்மென்ட், வேலைவாய்ப்புகள் முக்கியம்தான். ஆனால் அவற்றைவிட இருத்தியல் முக்கியம், நாம் இனி இருப்போமா என்பது முக்கியம்! மாநில அரசு காலநிலை அவசரத்தை உணர்ந்துகொண்டு செயல்படுகிறது. மத்திய அரசு அதை கவனிக்கிறதா என்பதுதான் இங்கு கேள்விக்குறி” என்றார்.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., ``நானும் ஒரு விவசாயி, 'தானே' புயலின் பாதிப்புகளை நானே நேரடியாகப் பார்த்தேன். என் காட்டின் முந்திரி மரங்கள், சவுக்குத் தோப்புகள் அனைத்தும் அடியோடு சாய்ந்தன. தெற்காசியாவிலேயே மனித இனம் வாழ முடியாத இடமாக எனது ஊரான கடலூர் சிப்காட் பகுதி குறிப்பிடப்படுகிறது. அந்த சிப்காட் பக்கம் சென்றாலே மயக்கம் வரும். அங்குள்ள தென்னை மரத்தின் இளநீரைப் பிளந்து பார்த்தால் அமிலநெடி தலைக்கேறும்! `சுத்திகரிக்கப்பட்ட விஷநீர் இங்கு கிடைக்கும்' என நானே அங்கு வாசகம் எழுதிவைத்தேன். முன்பிருந்த ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போதிருக்கும் அரசு எங்களின் குரலுக்குச் செவி சாய்க்கிறது. நிச்சயம் இதைச் சட்டமன்றத்தில் பேசுவேன்" எனத் தெரிவித்தார்.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,``இந்தியாவுக்கே முன்மாதிரியாக காலநிலை மாற்றத்துக்கென்று ஒரு தனி அமைச்சகத்தைக் கொண்டுவந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. காலநிலை அவசரத்தை உணர்ந்த இந்த அரசு நிச்சயம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்" எனத் தெரிவித்தார்.

அதேபோல், திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி. ராஜா, ``தமிழக முதலமைச்சர் சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென பட்ஜெட்டில் தனியே நிதியும் ஒதுக்கியிருக்கிறார். நிச்சயம் இந்த ஆட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மிகுந்த பொறுப்புணர்வுடனும் செயல்படும்" என்றார்.

இறுதியாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ``மனிதனுக்கு இருக்கும் ஒரே வளம், பூமி! மனிதனின் எல்லாத் தேவைகளையும் பூமிதான் பூர்த்திசெய்கிறது. பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப, மனிதனின் தேவையும் அதிகரிப்பதால் இது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. உண்மையில், இந்த பிரச்னையை எம்.பி., எம்.எல்.ஏக்கள் விவாதிப்பதைவிட, கொள்கையை, சட்டத்தை உருவாக்கக்கூடிய 'ஆளும் வர்க்கத்தினர்' (Ruling class) பேச வேண்டும். இன்றைய புதியமொழியில் சொல்ல வேண்டுமென்றால் 'இலுமினாட்டிஸ்!' உலக கார்ப்பரேட் பெருமுதலாளிகளான இவர்கள், எல்லாவற்றையும் வணிகமயமாக்க வேண்டும், எல்லாவற்றையும் தாங்களே கொடுக்க வேண்டும் என்ற சுரண்டல் சிந்தனையில் செயல்படுகிறார்கள்.

தொல்.திருமாவளவன்

அவர்களுக்குப் பெட்டிக்கடைகள் தேவையில்லை; பெரிய பெரிய ஷாப்பிங் மால்களை உருவாக்கி, அதற்கான மின்சாரம், தண்ணீர் என அனைத்து வளங்களையும் ஓரிடத்துக்குள் குவித்துக்கொள்கிறார்கள். நம்மால் தனியார்மயத்தைத் தடுக்க முடியவில்லை. ஒரு நாட்டின் ஆட்சியைக்கூட அவர்களே தீர்மானிக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்திய அரசாங்கம் சனாதனக் கொள்கையில் இருந்தாலும், கார்ப்பரேட்களின் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்க முடிகிறது.

எனவே, காலநிலை மாற்றத்தைச் சரிசெய்வது என்பது தனிமனிதனின் கையில் இல்லை. ஒட்டுமொத்த உலகநாடுகளும், அதன் பின்னால் இருக்கும் சக்திகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியப்படும்! புதிய பொருளாதாரக் கொள்கை, தனியார்மயக் கொள்கை போன்றவற்றை உலக நாடுகள் கைவிட வேண்டும். காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஐ.நா அமைப்பு ஏற்படுத்த வேண்டும்! இது நம் முன் இருக்கும் சவால்" என திட்டவட்டமாகக் கூறி முடித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பு

காலநிலை மாற்றம் குறித்து, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இவர்களின் குரல் ஓங்கி ஒலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/climate-change-meeting-organized-by-poovulagin-nanbargal-movement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக