Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

விநாயகர் சதுர்த்தி: களையிழந்த கொசப்பேட்டை; அடையாளம் காக்கப் போராடும் சிலைத் தொழிலாளர்கள்!

சிங்காரச் சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மிகப்பெரிய வரலாறும், தனித்துவமிக்க அடையாளமும் இருக்கின்றன. சலவைத் தொழிலுக்கு வண்ணாரப்பேட்டை, கால்நடை வளர்ப்புக்கு பல்லாவரம், நெசவுத் தொழிலுக்கு சிந்தாதிரிப்பேட்டை, விகடக் கூத்துக்கு கிண்டி எனச் சென்னையின் சந்து பொந்துகளுக்குக்கூட தனிக்கதை இருக்கிறது. ஆனால், காலச்சக்கரத்தின் அசுர சூழலில் தொழில்நுட்பங்கள் வளர வளர சென்னையின் பூர்வகுடி மக்களுக்கே உரித்தான கைத்தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. அதன் காரணமாகச் சென்னைக்கே உரிய தனித்துவமிக்க தொழில் அடையாளங்களை இன்று நாம் இழந்துவிட்டு, பெயரளவுக்கு `எங்க ஏரியாவில் ஒரு காலத்துல, இந்தத் தொழில்தான் ரொம்ப ஃபேமஸ்!' என்ற முணுமுணுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் வண்ணாரப்பேட்டை போன்ற சென்னையின் சில பகுதிகளில் தங்களின் தொழில் அடையாளத்தைக் காப்பதற்காகச் சென்னையின் பூர்வகுடி மக்கள் நவீனமயமாக்கலுக்கு மத்தியிலும் நலிவடைந்துபோன தங்கள் கைத்தொழிலைச் செய்துவருகின்றனர்.

அந்த வகையில், ஒரு காலத்தில் சென்னையில் சிலைத் தயாரிப்புக்குப் பேர்போன கொசப்பேட்டையில் இன்று சிலைத் தொழிலாளர்கள் சிலர் மட்டும் தங்கள் பகுதியின் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவேண்டி போராடிக்கொண்டிருக்கின்றனர். 'குயவர்கள் பேட்டை' என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட பகுதி, இன்று காலப்போக்கில் மருவி புரசைவாக்கத்துக்கு அருகில் 'கொசப்பேட்டை' என்று குறுகிப்போயிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிலைத் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்துவந்த இன்றைய கொசப்பேட்டையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் களிமண்ணாலான சிலைத் தயாரிப்பை குடிசைத் தொழிலாகச் செய்துவந்தனர்.

கொசப்பேட்டை

ஆனால், காலப்போக்கில் சென்னையின் பரிணாம வளர்ச்சியில் பூர்வகுடிகளின் பெரும்பாலான கைத்தொழில்கள் அழியத் தொடங்கிய நேரத்தில், கொசப்பேட்டை மக்களின் சிலைத் தயாரிப்பு தொழிலும் 1990-களின் இறுதியில் தொய்வைச் சந்தித்தது. களிமண் சிலைத் தயாரிப்பு ஒன்றை மட்டுமே நம்பி வாழ்க்கைச் சக்கரத்தில் தலைமுறை தலைமுறையாகச் சுழன்றுகொண்டிருந்த மக்கள் கூட்டம், ஆட்டோ ஓட்டுவது, தொழிற்சாலைப் பணிக்குச் செல்வது என மாற்றுத் தொழில்களுக்கு மாறினார்கள். 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிலைத் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில், அந்த எண்ணிக்கை அப்படியே 150, 100 எனக் குறைந்துபோனது. இன்று வெறும் 40 குடும்பங்கள் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றன.

சென்னையில் தசரா, கிருஷ்ண ஜயந்தி எனச் சிலைகள் பிரதானமாகக் கருதப்படும் பண்டிகைகள் என்றாலே கொசப்பேட்டைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். அதிலும் குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கொசப்பேட்டைக்கு மிக முக்கியத் தொடர்பும் இருக்கிறது. காரணம், கொசப்பேட்டையின் தெருக்கள் எங்கும் வர்ணங்கள் பூசித் தயாரித்து, நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட விநாயகர் சிலைகள்தான்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்குப் பல மாதங்களுக்கு முன்பே கொசப்பேட்டையின் தெருக்கள் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். இரவு பகலாக வர்ணக் கறை நீங்காத கரங்களுடன் சிலைத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். சென்னையைத் தாண்டி ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கொசப்பேட்டையிலிருந்து ஆர்டரின் பேரில் வகை வகையாக விநாயகர் சிலைகள் அனுப்பிவைக்கப்படும்.

ஆனால், கடந்த சில வருடங்களாக கொசப்பேட்டையின் தெருக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான கோலாகலமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அதற்கு, தமிழக அரசால் விதிக்கப்பட்ட தடையே காரணம் என்கிறார்கள் அந்தப் பகுதி சிலைத் தொழிலாளர்கள். சுற்றுச்சூழலை பாதிக்கும் கலவைகள் கொண்டு சிலைகள் செய்வதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துவிட்டதால், இந்தச் சிலைத் தயாரிப்பு தொழிலைவிட்டு வெளியேறி மாற்றுத் தொழில்களுக்குப் போனவர்கள் அநேகம் பேர்.

கொசப்பேட்டை

இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக சுமார் 40 குடும்பங்கள் மட்டும் பெரிய அளவிலான சிலைகள் செய்வதைத் தவிர்த்துவிட்டு தங்கள் இல்லங்களிலேயே சிறு சிறு பொம்மைகளைச் செய்துவருகின்றனர். குறிப்பாக, விநாயகர், கிருஷ்ணர், ராமர், முருகர் எனப் பல்வேறு கடவுள்களின் பொம்மைகளைக் குடிசைத் தொழிலாகச் செய்துவருகின்றனர்.

அதேபோல், சிலைத் தயாரிப்பின் முக்கிய இடுபொருளான களிமண் போதிய அளவில் கிடைக்காமல்போனது, களிமண் பொம்மைகள் மீதான ஈர்ப்பு நகரத்து மக்களிடையே குறைந்துபோனது எனப் பல்வேறு காரணங்களால் கொசப்பேட்டையில் இன்று மண்பாண்ச்ட சிலைத் தயாரிப்பு தொழில் நலிவடைந்து காணப்படுகிறது. கொசப்பேட்டையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் கடந்த சில வருடங்களாக அப்பகுதி சிலைத் தொழிலாளர்களால் தயாரிக்க முடியாமல் போனாலும், குயவர்கள் பேட்டை என்ற தங்கள் பகுதியின் அடையாளத்தைக் காப்பதற்காக சீஸன் நேரங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து அட்டைகளால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்துவந்தனர்.

Also Read: வெளிமாநிலங்களிலிருந்து விநாயகர் சிலைகள் - அடையாளத்தைக் காக்க வாங்கி விற்கும் கொசப்பேட்டை மக்கள்!

ஆனால், கடந்த ஆண்டு அதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டது கொரோனா பெருந்தொற்று. நோய்ப் பரவலால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளைவைத்து வழிபட, தமிழக அரசு தடைவிதித்ததால் கொசப்பேட்டை பகுதி கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்டது. நீண்டுகொண்டே சென்ற நெடுநீள ஊரடங்கில் சிலைத் தயாரிப்பு தொழில் முடங்கிப்போகவே, அந்தத் தொழிலை மட்டுமே நம்பி தங்கள் வாழ்க்கையை நகர்த்திவந்த 40 குடும்பங்களின் வாழ்வாதாரம் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டது. இந்தநிலையில், இந்த வருடமும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் பண்டிகைக்கால பரபரப்பின்றி அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கிறது கொசப்பேட்டை. கொசப்பேட்டையின் அடையாளமாகக் கருதப்படும் 'ஐந்து லைட்' பகுதி பிரமாண்ட விநாயகர் சிலைகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கொசப்பேட்டை பொம்மைகள்
கமலம்மா பாட்டி

ஆங்கிலேயர் காலம் முதல் கொசப்பேட்டையில் தலைமுறை தலைமுறையாகச் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுவரும் கமலம்மா பாட்டியின் குடும்பத்தினரைச் சந்தித்து கொசப்பேட்டையின் வியாபார நிலை குறித்துக் கேட்டறிந்தோம்.

அச்சிலிருந்து வெளியில் எடுத்த சின்னஞ்சிறிய பிள்ளையார் சிலைகளுக்கு வர்ணம் பூசியபடியே நம்மிடம் பேசினார் 75 வயதான கமலம்மா பாட்டி. ``பிரிட்டிஷ்காரங்க காலத்துல இருந்தே சென்னையில களிமண் பொம்மைகள்னாலே கொசப்பேட்டைதான். குறிப்பாக, சாமி சிலைகளுக்கு இந்த இடம் ரொம்ப ஃபேமஸ். நான் எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்துல இருந்தே இந்தத் தொழில்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன். எங்க குடும்பத்துக்கே இந்தத் தொழில்தான் சோறு போட்டுட்டு இருக்கு. சென்னையில பெரிய விநாயகர் சிலைவெச்சு கொண்டாடுற பழக்கம் ஆரம்பிச்சதுல இருந்தே கொசப்பேட்டையில சிலைத் தொழிலாளர்கள் நாங்களும் பெரிய சிலைகள் தயாரிச்சு சென்னை முழுக்க சப்ளை செய்யத் தொடங்கினோம். அதுக்கு முன்னாடி வரைக்கும் எங்ககிட்ட அதிகபட்ச பெரிய சிலையே ரெண்டு அடிதான். பெரிய விநாயகர் சிலைகளை இங்கே செய்யத் தொடங்கியதும் இந்தப் பகுதி இன்னும் பிரபலமாகிடுச்சு. சென்னையைத் தாண்டி ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரானு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பிவெச்சுட்டு இருந்தோம். எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்துல இந்த கொசப்பேட்டையில மொத்தம் 200 குடும்பங்கள் இந்த தொழில்ல ஈடுபட்டுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ வெறும் 40 குடும்பங்கள் மட்டும்தான் இதைக் குடிசைத் தொழிலா செஞ்சுட்டு இருக்குறோம். எங்களுக்கு இதுதான் முழு நேரத் தொழில். வருஷம் முழுக்கக் களிமண்ணும் கையுமாத்தான் இருப்போம்.

விநாயகர் சதுர்த்தி, தசரா, கிருஷ்ண ஜயந்தினு சில பண்டிகைகளை நம்பித்தான் வாழ்கையை ஓட்டிட்டு இருக்குறோம். விநாயகர் சதுர்த்தி வர்றதுக்கு மூணு, நாலு மாசத்துக்கு முன்னாடியே பிள்ளையார் சிலைகள் செய்ய ஆரம்பிச்சுடுவோம். முன்னெல்லாம் இங்க அதிகபட்சமா 10 அடி வரைக்கும் விநாயகர் சிலைகள் செஞ்சுட்டு இருந்தோம். ஆனா, மாசு கட்டுப்பாடு வாரியம் தடை போட்டதால கடந்த சில வருஷமா இந்த ஏரியாவே களையிழந்து கிடக்கு. நாங்க வெளி மாநிலங்களுக்கு சப்ளை செஞ்ச காலம் மாறி, விநாயகர் சதுர்த்திக்கு வெளி மாநிலங்கள்ல இருந்து பெரிய சிலைகள் வாங்கி மேல காசுவெச்சு வித்துட்டு இருந்தோம்.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

வாங்குற சிலைக்கு வண்டிக்கூலி, ஆள்கூலினு மேல ஒரு 3,000 ரூபா வெச்சு விற்பனை செய்வோம். அதே மாதிரி சின்ன பொம்மைகளைச் சின்னதா லாபம்வெச்சு பொம்மை வியாபாரிங்களுக்குக் கொடுத்துடுவோம். ஆனா, இன்னைக்கு இந்தத் தொழில் ரொம்ப நலிவடைஞ்சு போயிடுச்சு. மக்கள் முன்னே மாதிரி எங்க பொம்மைகளை விரும்புறதில்லை. களிமண் பொம்மைகள் மீதான ஈர்ப்பு குறைஞ்சிருச்சு. பெரும்பாலும் இப்போ எல்லாருமே பீங்கான் பொம்மைகளைத்தான் விரும்புறாங்க. அதேபோல, களிமண் விலையும் ரொம்ப அதிகமாகிட்டதால முன்ன மாதிரி இந்தத் தொழில்ல லாபம் கிடைக்குறதில்லை. இருந்தாலும், வீம்புக்கு இந்தத் தொழில் செஞ்சுட்டு இருக்குறோம்" என்றார் கமலா பாட்டி.

தொடர்ந்து 30 வருடங்களுக்கும் மேலாகச் சிலைத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மோகனிடம் பேசினோம். "போன வருஷம் கொரோனா ஊரடங்கால எங்க வியாபாரம் ரொம்ப மோசமா போச்சு. மாசக்கணக்குல நீண்டுகொண்டே போன ஊரடங்கால செஞ்சுவெச்ச பொம்மைகளெல்லாம் தேங்கி வெடிச்சு வீணாப் போச்சு. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமை ஏற்பட்டுச்சு. அப்ப வயித்தைக் கழுவ காய்கறிக்கடை போட்டு சமாளிச்சிட்டு இருந்தோம். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா எங்க தொழில் மீண்டு வந்துக்கிட்டு இருக்கு.

கொசப்பேட்டை

போன வருஷத்தோட ஒப்பிடும்போது, இந்த வருஷம் கொஞ்சம் பரவாயில்லை. ஆரம்பத்துல இருந்தே ஆர்டர்கள் நல்லாவே வந்துட்டு இருக்கு. இப்பதான் கிருஷ்ண ஜயந்தி வியாபாரம் முடிஞ்சுது. சென்னையில இருக்குற பொம்மை வியாபாரிங்க எல்லாரும் முன்கூட்டியே சொல்லிவெச்சு வாங்கிட்டுப் போனாங்க. இப்ப விநாயகர் சதுர்த்தி விற்பனை நடந்துட்டு இருக்கு. போன வருஷமே அரசாங்கம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடைவிதிச்சதால, இந்த வருஷம் பெரிய சிலைகள் எதையும் நாங்க வாங்கலை. அறிவிப்பு வந்ததுக்குப் பிறகு பார்த்துக்கலாம்னு விட்டுட்டோம். இப்ப சின்னச் சிலைகளை மட்டும்தான் விற்பனை செஞ்சுட்டு இருக்குறோம். இந்தத் தொழில்ல பெருசா லாபமில்லை. இருந்தாலும் இதுதான் எங்களோட அடையாளம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/story-of-chennai-kosapet-statue-workers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக