கடந்த ஜூலை மாதம் ரூ.25 உயர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் ரு.25 உயர்வு என உயர்ந்துகொண்டே வந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது மீண்டும் ரூ.25 என உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.875.50-ஆக இருந்தது. தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டிருப்பதால், ரூ.900.50-ஆக உயர்ந்துள்ளது. விரைவில் ரூ.1,000-ஐ தொட்டு, வரலாற்று சாதனை நிகழ்த்தப்படவிருக்கிறது என்கிறார்கள்.
தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்கின்றன. சமையல் எண்ணெய் விலை உயர்ந்துகொண்டேபோவதால் திணறிக்கொண்டிருக்கும் சாமானிய மக்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் மிகுந்த கவலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த மக்களைப் பற்றி மத்திய அரசு என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது?
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துகொண்டேவருவது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம்.
``இந்த விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த விலை உயர்வை கண்டிப்பாகத் தவிர்க்க முடியும். 2014-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயராமல் பார்த்துக்கொண்டார்கள். அந்த நேரத்தில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 109 டாலராக இருந்தது. அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71.51 ரூபாயாக இருந்தது. அதேபோல, டீசல் விலை 57.28 ரூபாயாக இருந்தது.
ஆனால் இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 69 டாலராகக் குறைந்திருக்கிறது. அப்படியென்றால், பெட்ரோலியப் பொருள்களின் விலைகளும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல் விலை 101.84 ரூபாய் என்றும், டீசல் விலை 89.87 ரூபாய் என்றும் உயர்ந்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,000 ரூபாயை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அதன் பயன்கள் விலை குறைப்பின் மூலமாக மக்களுக்குச் சென்றடைய வேண்டும். ஆனால், மத்திய பாஜக அரசு கலால் வரியை உயர்த்துகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு, 22,38,000 கோடி ரூபாய் கலால் வரியாக வசூலித்திருக்கிறது. 22,38,000 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.
‘தேசிய பணமாக்கல் திட்டம்’ மூலமாக ஓர் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் என நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், சமையல் எரிவாயு விலை உயர்வின் மூலமாக எளிதாக 22 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஈட்டிவிடுகிறது. உண்மையிலேயே மக்கள்நலனில் அக்கறையுள்ள அரசாக இருந்தால், இப்படியெல்லாம் செய்வார்களா? பா.ஜ.க ஆட்சியாளர்களுக்கு மக்கள்நலனில் அக்கறை இல்லை.
தற்போது, இந்தியாவில் 23 கோடிப் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள். 12 கோடிப் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. எனவே, இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்துகிறார்கள். இது அப்பட்டமான மக்கள் விரோதச் செயல்.
ஐ.மு.கூட்டணி ஆட்சியில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயராமல் இருப்பதற்கு, அரசு மானியம் வழங்கியது. 2013-14 நிதியாண்டில் 1,47,000 கோடி ரூபாய் மானியமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 7,76,480 கோடி ரூபாய் மானியமாகக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தபோதுகூட பெட்ரோல் விலை 71 ரூபாயாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதனால், அப்போது பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரவில்லை. அந்த மானியத்தை 2020-21 நிதியாண்டில் வெறும்12,221 கோடி ரூபாயாக பாஜக அரசு குறைந்துவிட்டது. அதன் சுமை மக்கள் தலைமீது சுமத்தப்பட்டிருக்கிறது.
விலைவாசி உயர்வால் தனது அரசை மக்கள் வெறுப்பார்களே, கோபப்படுவார்களே என்ற அச்சமெல்லாம் பாஜக-வுக்கு இல்லை. ஏனென்றால், மக்களை மதரீதியாக அணிதிரட்டி, தனது வாக்குவங்கியை அதிகரித்துக்கொள்ளலாம் என்ற தனது வகுப்புவாதத் திட்டத்தின் காரணமாக, மக்கள்நலன் பற்றி அது கவலைப்படுவதில்லை” என்றார் கோபண்ணா.
Also Read: அறிவையும் தேசிய ஒற்றுமையையும் வளர்க்கிறதா சம்ஸ்கிருதம்?! - மோடியின் கூற்றும் நிபுணர்கள் பார்வையும்!
இது குறித்து பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.
``இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதைப் பார்க்க வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளில் சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை 9 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 36 கோடி மக்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மானியம் மற்றும் மானியம் அல்லாத என வித்தியாசம் இல்லாத அளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது என்று இதைப் பார்க்க வேண்டும்.
புதிதாக 9 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் கொடுக்கப்பட்ட பிறகு, கொரோனா காலகட்டத்தில் 8 கோடி குடும்பங்களுக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக இலவசமாக சிலிண்டர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை, சிலிண்டர் விலை உயர்கிறது என்று முழங்கும் எதிர்க்கட்சியினர் வசதியாக மறைத்துவிடுவார்கள்.
ஆறு மாதங்களுக்கு எட்டு கோடி குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் வரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டதால், பல கோடிப் பேர் பயனடைந்திருக்கிறார்கள். அந்த வகையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு கொடுக்கும் மானியம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல மானியம் அல்லாத சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதை முழுமையாக உணர்ந்துகொள்பவர்கள், இதைப் புரிந்துகொண்டு பாராட்டுவார்கள்” என்றார் நாராயணன் திருப்பதி.
source https://www.vikatan.com/government-and-politics/politics/prices-of-petrol-and-gas-cylinder-is-rising-does-not-modi-government-worry-about-laymen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக