Ad

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

AKS - 10 | சென்னையில் வாக்கிங் போகவும் கூகுள் மேப் அவசியமா… சுந்தர் பேச்சை ஏன் காயத்ரி கேட்கவில்லை?

செல்போனில் கூகுள் மேப் இருப்பதாலும், யாரை வேண்டுமானாலும் உடனடியாக அழைத்துப் பேசும் வசதி இருப்பதாலும் பெரும்பாலும் தொடர்பு எண் மற்றும் முகவரிகளை யாரும் மனப்பாடமாக வைத்துக் கொள்வதில்லை. செல்போன் ஆபத்தில் உதவும் நல்ல துணைதான். அதற்காக மனித மூளையை விட்டுவிட்டு முழுமையாக நவீன தொழில்நுட்பத்தை சார்ந்தே இருக்கவும் கூடாது அல்லவா?

பார்ட்டிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் ஏற்கெனவே பேசி வைத்திருந்தது போல தனியாக புனிதாவை தனது அறைக்கு வரச் சொல்கிறான் பரத். காயத்ரி தூங்கியதும் வருவதாக சாடை செய்துவிட்டு செல்கிறாள் புனிதா.

நீண்ட நாட்களுக்கு பிறகு புனிதாவை சந்தித்ததால் காயத்ரி புனிதாவிடம் சிறுவயதில் நடந்த ஊர்க் கதைகளை பேசிக் கொண்டிருக்கிறாள். புனிதாவோ காயத்ரியை தூங்க வைத்துவிட்டு பரத்தின் அறைக்குச் செல்ல காத்திருக்கிறாள். புனிதா வற்புறுத்தியும் தூங்க மறுத்து காயத்ரி பேசிக்கொண்டே இருக்கிறாள். புனிதா தூங்குவது போல் நடித்ததும் அவள் தூங்கிவிட்டதாக நினைத்து பேச்சை நிறுத்திவிட்டு காயத்ரி படுத்துக்கொள்கிறாள். காயத்ரி தூங்க ஆரம்பித்ததும் புனிதா பரத்தின் அறைக்குச் செல்கிறாள்.

AKS - 10 | ஆதலினால் காதல் செய்வீர்

தனக்கும் பரத்துக்கும் இடையே இருக்கும் உறவை புனிதா காயத்ரியிடம் வெளிப்படையாக சொல்ல முடியாததற்கு காரணம் காயத்ரி ஏற்கெனவே முன்முடிவோடு இருந்ததுதான். புனிதா சென்னை வந்து மிகவும் மாறிவிட்டதாகவும் அந்த மாற்றத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தனது பேச்சு, முகபாவனைகளினால் புனிதாவுக்கு உணர்த்தி இருந்தாள் காயத்ரி. மேலும் அவள் இதை தன் வீட்டிலும் சொல்லக்கூடும் என்கிற அச்சமும் புனிதாவுக்கு இருக்கலாம்.

புனிதாவின் வீட்டில் ஆண்களும் தங்கியிருப்பது, புனிதாவின் உடைகள், புனிதா பரத்துக்கு ஊட்டிவிட்டது இவை எல்லாவற்றையும் கண்டு காயத்ரி கோபப்படுகிறாள். ”உன்னை நம்பி வந்தேன் பாரு” என்று கோபமாக காயத்ரியிடம் சொல்வதன் மூலம் தானும் புனிதாவும் ஒன்றல்ல என்று புனிதாவுக்கு உணர்த்துகிறாள் காயத்ரி.

என்ன உடுத்துவது, எதை உண்பது, யாருடன் பழகுவது என்பதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இதன் அடிப்படையில் யாரையும் நாம் ’இவர் இப்படித்தான்’ என வரையறுக்க (Judgemental) முடியாது. அப்படி செய்வதற்கு உரிமையும் இல்லை.

இந்த ஆண்-மைய சமூகம் பெண்களை அடிமையாக வைத்திருக்க பல போலியான கோட்பாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆண், பெண் பேதமின்றி எல்லோருக்குமே பண்பாடு, கலாசாரம் என்கிற பெயரால் பிற்போக்கு மற்றும் பெண்ணடிமைத்தனத்தை தெரிந்தே பின்பற்றுகிறார்கள். தனக்கு கல்வி, வேலைக்கு செல்லும் சுதந்திரம் கிடைக்காத அம்மாக்களும்கூட தங்கள் பிள்ளைகளுக்கு அந்த சுதந்திரம் முழுவதுமாக கிடைக்க வழி செய்வதில்லை. ஆண்-மைய சமூகத்தை எதிர்க்க அஞ்சுகிறார்கள். அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கும் இந்த அச்சத்தின் சிறு பங்கை கடத்துகிறார்கள்.

AKS - 10 | ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரி அப்படி வளர்ந்ததனால்தான் புனிதாவின் சுதந்திரம் அவளுக்கு தவறாகத் தெரிகிறது.தங்கள் கணவர் அல்லது காதலனிடம் தங்களை நல்லவர்கள் என நிறுவ, சுதந்திரமான பெண்களுடன் தங்களை ஒப்புமைப்படுத்தி தான் அவர்களை போல தவறானவள் இல்லை என சொல்லும் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களை மட்டுமே பெண் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்பது பொதுக்கருத்து. ஆனால் தங்களுக்கு கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது தங்களது இயலாமை மற்றும் Survival-க்காக மற்ற பெண்களை இவ்வாறு குறை சொல்பவர்களும் பெண் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள்தான்.

அதிகாலை 4.45 மணிக்கு சுந்தர் காயத்ரியை எழுப்புகிறான். காயத்ரி அவனிடம் 4.30 மணிக்கே அலாரம் வைத்து எழுந்துவிட்டதாக பொய் சொல்கிறாள். சுந்தர் அவளை 5 மணிக்கு தயாராக இருக்கும்படியும் தான் மீண்டும் அழைத்ததும் வாக்கிங் செல்லலாம் என்றும் சொல்கிறான். செல்போனில் சுந்தர் சொல்வதை கேட்டு காயத்ரி மூச்சுப் பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்கிறாள். ஒரு வாரம் கழித்து நடைப்பயிற்சிக்கு செல்லலாம் என்று சுந்தர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காயத்ரி தெருவுக்கு வந்துவிடுகிறாள்.

சுந்தர் மீண்டும் அறிவுரைகளை தொடங்க, அதை கேட்டுக்கொண்டே தெருவில் காண்பவர்களுக்கு எல்லாம் புன்னகையும், குட் மார்னிங்கும் பகிர்கிறாள் காயத்ரி. புதிதாகப் பார்க்கும் யாரிடமும் பேச வேண்டாம் என்றும், பெண்கள் தனியாக நடைபயிற்சிக்கு செல்வது ஆபத்து என்றும் சுந்தர் கூறும்போதே தன்னை கடந்து தனியாக செல்லும் பெண்களை காயத்ரி காண்கிறாள். வீட்டுக்கு திரும்பச் சொல்லும் சுந்தரிடம், இன்னும் சிறிது தூரம் சென்று விட்டு திரும்புவதாக கூறி அவனது இணைப்பை துண்டிக்கிறாள்.

சென்னையின் வீதிகளில் காயத்ரி மகிழ்ச்சியாக நடைபயிற்சி செய்கிறாள். முதன்முறையாக ஒரு நகரத்தில் அதிகாலையில் தனியாக நடப்பது அவளுக்கு வித்தியாசமான உணர்வாக இருக்கிறது. தெரியாத ஊரில் தனியாக நடந்து செல்வதனால் ஏற்படும் மகிழ்ச்சியும், சுதந்திரமும், அவளது ஓட்டத்திலும், நடையிலும் துள்ளலாக வெளிப்படுகிறது.

திரும்பி வரும்போது சுந்தர் எச்சரித்ததுபோல காயத்ரி வழியை மறந்து விடுகிறாள். அருகில் இருப்பவர்களிடம் வழிக் கேட்டு செல்கிறாள். அவளை இரண்டு இளைஞர்கள் திரும்பி பார்த்துவிட்டு செல்வதை கண்டு சுந்தர் போனில் சொன்னதுபோல நகை பறிப்பவர்களாக இருக்கும் என சந்தேகப்பட்டு பயப்படுகிறாள்.

AKS - 10 | ஆதலினால் காதல் செய்வீர்

சென்னையின் தெருக்கள் ஒன்றுபோல இருக்கும் என்கிறான் சுந்தர். காயத்ரிக்கு டேட்டா பேக் முடிந்ததால் கூகுள் மேப் வேலை செய்யவில்லை. புனிதாவும் காயத்ரியின் அழைப்பை எடுக்காததால் அவளுக்கு பயம் ஏற்படுகிறது.

புதிதாக எங்கு சென்றாலும் தங்கி இருக்கும் இடத்தின் முகவரியை மனதில் வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும் செல்போன் பதிவு அல்லது காகிதத்தில் எழுதி வைத்திருப்பது அவசியம். காயத்ரியை பார்க்கும்போது படித்த பெண்ணுக்கு இதுகூட தெரியவில்லையா என்று தோன்றலாம். ஆனால் பெரும்பாலான இளைய தலைமுறையினர் அப்படித்தான் இருக்கிறார்கள்.

காயத்ரி டீக்கடையில் வழி கேட்டுக் கொண்டிருக்கும் போது கடைக்கு இரு பெண்கள் காபி அருந்த வருகிறார்கள். காயத்ரி, ’’இந்த ஊரில் பெண்கள் கூட டீக்கடைக்கு வருவார்களா’’ என்று அவர்களை ஆச்சரியமாக பார்க்கிறாள். சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் இளம்பெண்களுக்கு இன்னமும் டீக்கடையில் சென்று டீ அருந்துவது எட்டாத ஆடம்பரமாகத்தான் இருக்கிறது.

உள்ளூரில் வாழ்ந்த வரைக்கும் டீக்கடையை கடக்கும்போதுகூட திரும்பிப் பார்க்கக்கூடாது என்பதுதான் வீட்டில் சொல்லியிருந்த பாடம். டீக்கடை மட்டுமல்ல, ஆண்கள் கூடும் இடங்களை கவனிக்காமல் வேகமாக கடந்துவிட வேண்டும். முதன்முதலில் டீக்கடையில் டீ குடித்ததெல்லாம் திருமணத்துக்குப் பிறகு அதுவும் வெளியூரில்தான் சாத்தியமாயிற்று.

ஆனால், இதுபோன்ற வறட்டு கௌரவ கட்டுப்பாடுகளை நடுத்தர குடும்பங்கள்தான் பற்றிக் கொண்டிருக்கின்றன. கிராமமோ, நகரமோ உழைக்கும் எளிய பெண்கள் இதுபற்றி எல்லாம் யோசிப்பதில்லை. 5 மணிக்கு தனியாக நடைப்பயிற்சிக்கு செல்லவேண்டாம் என சுந்தர் சொல்கிறான். அதே ஊரில்தான் காய்கறி, மீன், பூ விற்கும் பெண்கள் அதிகாலை 4 மணிக்கே தனியாக சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கி வியாபாரத்தை தொடங்குகிறார்கள்.

வழி மறந்து வீட்டை தேடிக் கொண்டிருக்கும் காயத்ரியை ஒருவர் பின் தொடர்கிறார். காயத்ரி அவரைக் கண்டு பயப்படுவதோடு இந்த எபிசோட் முடிந்திருக்கிறது. அவர் காயத்ரியிடம் நகை பறிக்க தொடர்கிறாரா, அல்லது அவளுக்கு வழி சொல்லி உதவுவாரா, இல்லை சாதாரணமாக கடந்து போகும் ஒருவரை நாம்தான் சந்தேகப்படுகிறோமா? தெரிந்துகொள்ள திங்கள்வரை திக் திக் மனநிலையோடு காத்திருக்கத்தான் வேண்டும்.

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinal-kaadhal-seiveer-digital-series-episode-10-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக