Ad

புதன், 1 செப்டம்பர், 2021

2K கிட்ஸ் பேரன்டிங்: வழிதவறும் பிள்ளைகள்; இந்தக் கால பெற்றோர்கள் தடுமாறுவது எங்கே?

- டே.ரூபன் பிரபு

என் பள்ளிக்கால நண்பன், சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வீட்டுக்கு ஒரே பிள்ளை. எனவே பெற்றோருக்குச் செல்லம். அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவன் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி என, ஏமாற்றம், கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் அவனை வளர்த்தனர் அவன் பெற்றோர். ஐந்தாம் வகுப்புவரை எங்களுடன் படித்தவனை, ஆறாம் வகுப்புக்கு வேறு பெரிய ஆங்கில வழிப் பள்ளியில் சேர்த்தார்கள். அத்துடன் அவன் தொடர்பு எனக்கு அற்றுப்போய்விட்டது.

Parenting

Also Read: ஜென்டில் பேரன்டிங், ஏர்லி லேர்னிங், மான்ட்டிசரி பேரன்டிங்... குழந்தை வளர்ப்பில் எது பெஸ்ட்?

என் இன்னொரு பள்ளிக்கால நண்பனின் குடும்பத்து சொத்துப் பிரச்னை வழக்கை, வழக்கறிஞரான என் மாமா கையாண்டு வந்தார். எனவே, அன்று நீதிமன்றத்துக்கு மாமாவை பார்க்க நானும் நண்பனும் சென்றிருந்தோம். அங்கே நாங்கள் கண்ட காட்சி, அதிர்ச்சி. ஐந்தாம் வகுப்பில் நாங்கள் கடைசியாகப் பார்த்த சுரேஷ், கையில் விலங்கு பூட்டப்பட்டு கை, கால், தலையில் கட்டுகளுடன் நின்றுகொண்டிருந்தான். நாங்கள் பதறிப்போய் அவனிடம் விசாரிக்க, அவனோ ஏதோ பெரிதாய் சாதித்தவன் போல ரவுடி போன்ற பார்வை, பேச்சு என்று எங்களைக் கடந்து சென்றான்.

அந்தக் காவலர்களிடம் அவன் பெற்றோர் எங்கே, வீடு எங்கிருக்கிறது என்று மட்டும் விசாரித்துவிட்டு, அவசர அவசரமாக சுரேஷ் வீட்டுக்கு ஓடினோம். பெரிய வீடு, கதவுகள் திறந்திருந்தன. விசும்பல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஹாலில் சுரேஷின் அம்மா வியர்வையிலும் கண்ணீரிலும் நனைந்தபடி அழுதுகொண்டிருந்தார். நாங்கள் சுரேஷின் பள்ளிக்கால நண்பர்கள் என்றும், கோர்ட்டில் அவனை பார்த்துவிட்டு நேராக வீட்டுக்கு வந்ததாகவும் சொல்லி, எங்களால் ஏதாவது அவருக்கு உதவ முடியுமா என்று கேட்டோம். கிட்டத்தட்ட ஒன்பது வருடக் கதையையும் சொன்னார் சுரேஷ் அம்மா.

``என்னத்த சொல்ல? சீரழிஞ்சு போயிட்டான். நான் வளர்த்ததும் சரியில்ல, அவன் சேர்க்கையும் சரியில்ல. ஒத்தப் புள்ளையினு செல்லம் கொடுத்தோம். ஆனா, அதுவே அவனை பாதை மாத்திடுச்சு. ஒன்பதாவது படிக்கும்போதே தினமும் நூறு ரூபாய் பாக்கெட் மணி வாங்கிட்டுப் போவான். மொபைல்ல புது மாடல் வர வர வாங்கிட்டே இருப்பான். வீட்டுக்குள்ளேயே திருட ஆரம்பிச்சான். அதுக்காக அவனைக் கண்டிக்கிறதைவிட, அது அவங்க அப்பாவுக்குத் தெரியாம பார்த்துக்கிட்டதுதான் நான் பண்ணுன பெரிய தப்பு. காலேஜுல சேந்தவன் சிகரெட், தண்ணினு எல்லா கெட்ட பழக்கமும் பழக ஆரம்பிச்சுட்டான். காலேஜுக்கும் அடிக்கடி லீவு போடுவான். இன்னும் பல கொடுமை பண்ணிட்டான். ஒரு நாள் நான் வெளிய போயிட்டு வீட்டுக்கு வந்தப்போ, ஒரு பொண்ணோட இருந்தான். அதோட, சாதிவெறி பிடிச்சவனாவும் ஆகிட்டான்.

Parenting

அவன் கூடப் படிக்கிறவங்க, தெரிஞ்சவங்க, கல்லூரினு எல்லா பக்கமும் இருந்து அவனை புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க. அவங்கப்பா வெளியூர்ல வேலைபார்க்கிறதால, அவராலயும் அவனை கண்காணிக்கவும், கண்டிக்கவும் முடியல. எல்லாரும் அவனை கெட்டவனா பார்த்தாலும், பெத்தவ நான் அவனை என் மகனாதானே பார்க்க முடியும்? எப்படியாச்சும் அவனை திருத்திடலாம்னு மனசுல நம்பிக்கையைப் பிடிச்சிட்டு இருந்தேன். ஆனா, நேத்து ராத்திரியோட அந்த நம்பிக்கையும் போச்சு.

நைட்டு கை, கால்ல எல்லாம் ரத்தக் காயத்தோட, போதையில வீட்டுக்கு வந்து படுத்தான். என்னடா ஆச்சுனு கேட்டும் பதில் சொல்லல. இன்னைக்குக் காலையில, யாரோ ஒரு பையனோட தலையில பாட்டிலை உடைச்சு, அவன் வயித்துல குத்திட்டான்னு சொல்லி போலீஸ் அவனை இழுத்துட்டுப் போனப்ப... நொறுங்கிப்போயிட்டேன்" என்றவர், ஓவென அழ ஆரம்பித்தார்.

Also Read: பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகான `ஷேர்டு பேரன்டிங்'... பிள்ளைகளின் மனதை பாதிக்குமா?

அக்கம், பக்கம், உறவினர்கள் என அனைவரிடமும் சுரேஷ் ஏற்கெனவே ஏதோ ஒரு பிரச்னை செய்து வைத்திருந்ததால், மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளுக்கு சுரேஷ் அம்மா உதவியின்றி இருந்தார். அவன் அப்பா வெளியூரில் இருந்து வந்துகொண்டிருந்தார். எனவே, என் வழக்கறிஞர் மாமாவின் உதவியை நாடினோம். ஒருவழியாக அவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு போதை மீட்பு மையத்தில் அவனை சேர்த்து, உளவியல் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தோம். மாதம் ஒருமுறை நாங்கள் சென்று சுரேஷை சந்தித்து வருகிறோம்.

பெற்றோரின் செல்லத்தால் சீரழியும் பிள்ளைகள் என்பது புதிய பிரச்னை என்றாலும், காலத்துக்கு ஏற்ப அதற்கான பேரன்டிங் தீர்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மீரா மணிகண்டன், 2கே கிட்ஸ் பேரன்டிங் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்தார்.

செல்லம் கொடுப்பது தவறா..?

``செல்லத்தை அன்பின் வெளிப்பாடாகப் பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால், அதைக் குழந்தைகளின் கம்ஃபர்ட் ஸோனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாத ஒரு பாதுகாப்பு வளையமாக்கும்போது, அந்த வளையம் அவர்களை பலவீனம் ஆக்குகிறது. வெளி உலகை, வித்தியாசமான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது அவர்களுக்கு ஒரு வித பயம் தோன்ற வாய்ப்புள்ளது. எனவே, செல்லமாக வளர்த்தாலும் யதார்த்தங்களைப் பழக்கி வளர்க்க வேண்டும்.

உளவியல் நிபுணர் மீரா மணிகண்டன்

பெற்றோர்கள் குறித்துக்கொள்ள வேண்டியவை?

சில 2கே கிட்ஸின் மாறுபட்ட குணங்களுக்குக் காரணம், 2கே கிட்ஸின் சில பெற்றோரின் வாழ்க்கை முறை. 90'ஸ் கிட்ஸின் பெற்றோர்களைவிட 2கே கிட்ஸின் பெற்றோர்களில் வேலைக்குச் செல்பவர்கள் அதிகம். எனவே, அவர்கள் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் குறைகிறது. அது குழந்தை - பெற்றோருக்கான இடைவெளியை அதிகரிக்க, குழந்தைகள் கேட்ஜெட்ஸ், இணையம், நண்பர்கள் எனத் தஞ்சமடைகிறார்கள். எனவே, பெற்றோர்களால் அதிக நேரம் குழந்தையுடன் செலவழிக்க முடியவில்லை என்றாலும், செலவழிக்க முடிந்த நேரத்தை குவாலிட்டி நேரமாகச் செலவழிக்க வேண்டும்.

ஃப்ரெண்ட்லி பேரன்ட், ஸ்ட்ரிக்ட் பேரன்ட்... எது சரி?

சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல இது இரண்டுமே அவசியம். குழந்தையிடம், குறிப்பாக 2கே கிட்ஸிடம் ஃப்ரெண்ட்லியாக இருக்க வேண்டிய மிக அவசியம் என்றாலும், உரிய நேரங்களில் கண்டிப்பும் அவசியம். இவை இரண்டையும் விட முக்கியமானது... ரோல் மாடல் பேரன்ட்டாக இருப்பது. பெற்றோர் இன்று செய்வதைத்தான் குழந்தைகள் நாளை செய்வார்கள். எனவே, உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.

குழந்தைகளைச் சமாளிக்க முடியவில்லை என்ற புலம்பல் பற்றி..?

குழந்தைகள் எனர்ஜி நிரம்ப இருப்பார்கள். அதற்கு நாம்தான் தீனி போட வேண்டும். அறிவை தூண்டும் விளையாட்டுகள், சிறு சிறு வேலைகள், ஆக்கபூர்வ கைவினை முயற்சிகள் என்று அவர்களது நேரத்தை அமைத்துக்கொடுக்கும்போது, அவர்கள் பெற்றோரை நச்சரிக்க வரமாட்டார்கள். மாறாக, `இந்தா பிடி' என்று மொபைல், ரிமோட்டை அவர்கள் கையில் கொடுத்தால், அதன் விளைவுகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.

Parenting (Representational Image)

Also Read: `பிக்பாஸ்' ஷிவானியின் அம்மா செய்தது சரியா? - டாக்ஸிக் பேரன்டிங் ஆபத்துகள்!

செய்யக் கூடாதது..?

பேரன்ட்டிங்கில், செய்யக் கூடாத விஷயங்கள் எனப் பல உள்ளன. சமுதாய நலனுடன் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றால், சாதி, மத, பொருளாதார பிரிவினைகளைக் குழந்தைகளிடம் புகுத்தாமல் இருப்பது. இந்தப் பிரிவினைகள் காரணமாக நம் குழந்தைகள் சக மனிதர்களை வெறுக்க, ஒதுக்க நாம் காரணமாகக் கூடாது.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தவறவிடும் சில விஷயங்கள், சில குழந்தைகளின் திசையை மாற்றுகின்றன. பிள்ளைகள் வளர்கிறார்கள் என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதே முக்கியம்.''



source https://www.vikatan.com/lifestyle/parenting/psychologist-explains-about-common-modern-day-parenting-mistakes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக