பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த், கோவிட்டுக்கு பலியானது மிகவும் வருந்தத்தக்கது. வயதும் அதிகமில்லை 54-தான். கோலிவுட் முழுவதும் கலங்கி நிற்கிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடங்கி இன்று கே.வி.ஆனந்த் வரை எத்தனை பலிகள் திரையுலகிலிருந்து.
இந்நிலையில், அவர் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலவுகின்றன. கே.வி.ஆனந்த் 20 நாள்களுக்கு முன் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கிறார். ஆனாலும், சமீபத்தில் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நெஞ்சுவலி என்று மருத்துவமனை சென்றவர் திரும்பவில்லை. இவருடைய மரணத்துக்கும் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக இருக்கும் என்ற கோணத்தில் செய்திகள் வருகின்றன. இதிலிருக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்.
கோவிட் இரண்டாம் அலையைப் பொறுத்தவரை தொற்று பாதித்த முதல் பத்து நாள்கள் மிகவும் முக்கியமானவை. தொற்றானது நுரையீரல் வரை சென்று பாதிக்கும் நிலையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் மரணத்தைத் தடுக்க முடியும். இந்தத் தொற்றானது நேரடியாக நுரையீரலை பாதிப்பதோடு உடலில் ரத்தத்தில் ரத்த உறைவை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த ரத்த உறைவானது உடலில் இதயம், மூளை என எங்கு வேண்டுமானாலும் சென்று பாதிக்கக்கூடும். இந்த உறைவு இதயத்தைப் பாதிக்கும்போது நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதோடு மாரடைப்பு ஏற்படும். மூளையைப் பாதிக்கும்போது பக்கவாதமாகக்கூட சிலருக்கு நோய்த்தொற்று வெளிப்படுகிறது.
இணை நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் ஆகியவை கொரோனாவுக்கு எதிரான நம்முடைய உடலின் போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்திவிடுகின்றன. அதனால் நோய்த்தொற்று வெகு விரைவில் நுரையீரலை பாதிப்பதுடன் மரணத்தையும் சமீபமாக்கிவிடுகிறது.
தடுப்பூசி எடுத்தும் தொற்று ஏற்பட்டது எப்படி?
இரு தவணை தடுப்பூசிகளும் எடுத்து ஒரு மாதம் நிறைவடைந்த பின்னரே நமக்கு முழுமையான எதிர்ப்பு சக்தி உண்டாகிறது. அதற்குப் பிறகும் கொரோனா நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், அது அதிதீவிர தொற்றாக மாறக்கூடிய வாய்ப்பும் உயிரிழப்பு நிகழ்வதும் மிகவும் அரிது. ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொண்டால் நமக்கு 10% மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும்.
Also Read: ``வெறும் மெஷினை இயக்கிப் பார்த்துட்டு இருக்கோம்!" - செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தின் பரிதாப நிலை
எனக்குத் தெரிந்த ஒரு நபர் இரண்டு தவணை தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டார். இரண்டாவது தவணை போட்டுக்கொண்ட அன்றிலிருந்து அவருக்குக் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஆரம்பித்திருக்கின்றன. அவர் இரண்டாவது ஊசியின் பக்க விளைவு என்று நினைத்துக்கொண்டு 10 நாள்கள் வரை மருத்துவமனைக்குச் செல்லவில்லை.
பத்து நாள்கள் கழித்து கோவிட்-19 என்று கண்டுபிடிக்கப்பட்டபோது அவருடைய நுரையீரலில் 60% நோய்த்தொற்று இருந்தது. அவரைக் காப்பாற்றவும் முடியவில்லை என்பதுதான் சோகம். தடுப்பூசி எடுத்துக்கொண்டால் அதன் பக்கவிளைவுகள் அதிகபட்சம் 72 மணி நேரம் மட்டுமே இருக்கும். 72 மணி நேரத்துக்குப் பிறகு காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது தடுப்பூசியின் எதிர்வினையாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு. அது கோவிட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
தடுப்பூசி ஒவ்வாமையா?
தடுப்பூசி ஒவ்வாமை என்பது தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதல் 24 மணி நேரத்துக்குள் நம் உடலில் உண்டாகக்கூடிய அலர்ஜி என்ற எதிர்வினை. பெரும்பாலானவர்களுக்கு ஊசி செலுத்தப்பட்ட அரை மணிக்குள் ஒவ்வாமை வெளிப்பட்டுவிடும். அதனால்தான் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை 30 நிமிடங்கள் வரை மருத்துவமனையிலேயே காத்திருக்குமாறு செய்கிறோம். கே.வி.ஆனந்த் தடுப்பூசி எடுத்து 20 நாள்கள் ஆகிவிட்டன. 20 நாள்களுக்குப் பிறகு தடுப்பூசியினால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் மூலம் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பே இல்லை எனலாம்.
கோவிட்-19 பாதிப்பு அதிதீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம். தேவையற்ற வதந்திகளைப் பரப்பாமல் இருப்பதும் பெருந்தொற்றுச் சூழலில் நமக்கான சமுதாயக் கடமையாகும்.
- மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா
source https://www.vikatan.com/health/healthy/vaccines-could-not-be-the-reason-for-director-kv-anands-death
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக