Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

இப்படி ஒரு கிளைமாக்ஸை இதுவரை கண்டதில்லை! - `மெமரீஸ் ஆஃப் மர்டர்’ வாசகர் விமர்சனம்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு திரைப்படத்தின் முடிவை பார்வையாளர்களிடமே விட்டு விடுவது என்பது புத்திசாலித்தனமான ஒரு யுத்தி.

பல நேரங்களில் அதில் வெற்றியைக் காணலாம். காரணம் பார்வையாளர்களாகிய நமது கற்பனைகள்.

ஒரு விஷயத்தை நேரடியாக நாம் பார்ப்பதை விட, அதை கற்பனை செய்து பார்க்கும் போது பல வண்ணங்களிலும், பல கோணங்களிலும் காட்சிகள் நம் முன் விரியும்.

வாசிப்புகளுக்குக் கூட கற்பனை வலிமை அதிகம். ஒரு திரைப்படத்தில், குறிப்பிட்ட ஒரு காதல் காட்சியைப் பார்க்கிறோம். அது அந்த இயக்குனருக்கு சொந்தமான ஒரு கற்பனை. அதே காதல் காட்சியை எழுத்து வடிவில் நாம் படித்தால், படிக்கும் ஒவ்வொருவரின் கற்பனையிலும் ஒரு இயக்குனர் ஒளிந்து கொண்டிருப்பான்.

Memories Of Murder

இப்படி நமது கற்பனைகளைத் தூண்டி, பல சிந்தனைகளுக்குள் மூழ்கச் செய்யும் திரைப்படங்கள் குறைவே.

அதில் நான் இங்கு பேச விரும்பும் ஒரு திரைப்படம், 2003ம் ஆண்டு Bong Joon Ho இயக்கத்தில் வெளிவந்த தென்கொரிய திரைப்படமான Memories Of Murder.

Cold Case என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். போதுமான ஆதாரங்கள் கிடைக்காது முடிவு பெறாமல் நிற்கும் வழக்குகள்.

உலகில் இப்படி கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், சில வழக்குகள் மட்டும் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும்.

உதாரணமாக 1960ல் அமெரிக்காவை நடுங்க வைத்த Zodiac Killer ஐ சொல்லலாம். போலீசுக்கு தந்தி அடித்து விட்டு பல தொடர் கொலைகளை அரங்கேற்றிய இவனை, இறுதி வரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட ஒரு Cold Case ஐ தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Memories Of Murder.


1986 ம் ஆண்டு, தென்கொரியாவின் Hwaseong மாகாணத்தில் தொடர்ந்து பல இளம் பெண்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு கொலையிலும் எந்த தடயங்களும் இல்லாமல் போக, கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. பல விசாரணைகள் செய்தும், இறுதிவரையில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தான் Memories Of Murder திரைப்படத்தின் கதை.

'Murder Thriller' வகை திரைப்படங்களின் அச்சாணி என்பது, 'அந்த கொலையை யார் செய்திருக்கக் கூடும்?', என்ற கேள்வியை திரைப்படத்தின் இறுதி நிமிடம் வரையில் நகர்த்திச் செல்வதில் தான் இருக்கிறது.

ஆனால் Cold Case வகை திரைப்படங்களில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? எப்படியும் கொலையாளி யார் என்பது இறுதிவரையில் தெரியப்போவதில்லை. இந்தக் கேள்வியுடன் தான் Memories Of Murder திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

Memories Of Murder

ஒரு படத்தின் முதல் காட்சியை வைத்தே அதன் தரத்தை எளிதில் கணித்துவிட முடியும்.

பம்பாய் படத்தின் ஆரம்பக் காட்சியில் அரவிந்த் சாமி, மனிஷாவைப் பார்க்கும் இடம், நான் மிகவும் ரசித்த ஒன்று. திடீரென வரும் காற்று மனிஷாவின் முகத்திரையை கிழித்துச் செல்லும். இதைப் பார்க்கும் அரவிந்த் சாமிக்கு மனிஷாவின் மீது காதல் மலரும்.

சரி, இப்போது நம் திரைப்படத்திற்கு வருவோம்.

Memories Of Murder திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியும் இப்படித்தான். பார்த்த உடன், ஒரு நல்ல அனுபவத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே மேலோங்கியது.

ஆனால் மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த கற்பனையைத் தூண்டும் அந்த காட்சி படத்தில் எது?

முடிவே இல்லாத இந்த கதையின் முடிவுக் காட்சி தான் அது.

இயக்குனர் படத்தை எப்படி முடித்திருப்பார்? என்ற கேள்வி, படம் ஆரம்பித்த முதல் இருபது நிமிடங்களிலேயே என்னை தொற்றிக்கொண்டது. நேராக Climax காட்சியை பார்த்துவிட்டால் என்ன என்று கூட யோசித்தேன்.

ரவா கேசரி சாப்பிடும் போது பற்களின் இடையில் கடிபடும் முந்திரியைப் போன்று, நான் எதிர்பாராத ஒரு Climax காட்சி அது.

ஆறு வருடங்களாக வழக்கை விசாரித்த அந்த காவலன், கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீஸ் வேலையை விட்டிருப்பான்.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, முதல் கொலை நடந்தேறிய அந்த இடத்தின் வழியே, எதேச்சையாக செல்ல நேரிடும். ஓட்டுநரிடம் காரை ஒரு ஓரமாக நிறுத்தச் சொல்வான்.

பெருமூச்சு விட்டபடி, சவம் கிடந்த அந்த குறுகிய கால்வாயை குனிந்து பார்த்துக் கொண்டிருப்பான்.

அப்போது அவ்வழியே வரும் சிறுமி ஒருவளுடன், அவனது உரையாடல் ஆரம்பமாகும்.

'அங்க என்ன பாக்குறீங்க?'

'ஒன்னுமில்ல...சும்மா தான்'.

'இது ரொம்ப வித்தியாசமா இருக்கு'.

'எது?'

'நீங்க இப்படி பாக்குறது?'


'ஏன்?''கொஞ்ச நாளைக்கு முன்ன, இதே இடத்துடல வேற ஒருத்தர் வந்து இப்படி பாத்துட்டு இருந்தாரு'.

Memories Of Murder

இப்போது அவன் முகம் மாறியிருக்கும்.

'அவன் முகத்த பாத்தயா?'

'பாத்தேன்'

'எப்படி இருந்தான்?'

'சாதாரணமா தான் இருந்தாரு'.

அவனுக்குள் இத்தனை வருடங்கள் ஒளிந்து கொண்டிருந்த போலீஸ் புத்தி வெளிவர துடித்துக் கொண்டிருக்கும்.

'அவன் எதுக்கு வந்தான்னு கேட்டையா?'

'ரொம்ப நாளுக்கு முன்ன இங்க ஏதோ வேலை செஞ்சதா சொன்னாரு.'

அவன் ஒருவித மிரட்சி பார்வையுடன், கேமராவை நேராக பார்ப்பதோடு திரைப்படம் முடியும்.


இப்படி ஒரு Disturbing Climax ஐ நான் எந்த ஒரு திரைப்படத்திலும் கண்டதில்லை. அந்த ஐந்து நிமிட காட்சியில், ஆயிரம் கற்பனைக் குதிரைகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.


'The Criminal Always Return To The Scene Of The Crime' என்று எங்கோ படித்திருக்கிறேன்.


கொலையாளி தான் அங்கு வந்திருப்பானோ? அப்படி என்றால் கொலையாளி என்பவன் கொடூரமான முகத்துடன் தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. அவள் சொன்னதைப் போல மிகச் சாதாரணமாக இருக்கலாம்.


இது ஒரு பார்வை.


வந்தவன் ஏன் கொலையாளியாக மட்டுமே இருந்திட வேண்டும்? வழக்கை விசாரித்த வேறொரு காவலராகக் கூட இருக்கலாம் அல்லவா?


இது வேறொரு பார்வை.


இப்படி அங்கு வந்தவன் யார் என்ற கேள்வியோடு திரைப்படம் முடியும். அது யார் என்பதை நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.


இந்தக் காட்சியில் நடிகர் Kang-ho Song, தனது நடிப்பை எந்த ஒரு ஆர்பாட்டமும் இல்லாமல், அவ்வளவு யதார்த்தமாக வெளிப்படுத்தியிருப்பார்.

சட்டென கேமராவை நோக்கி, அதாவது நம்மை நோக்கி, அவர் பார்க்கும் அந்த ஒரு பார்வை தான் Memories Of Murder திரைப்படத்தின் மொத்த சாராம்சமும்.


சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இறுதி காட்சியைக் கூட கமலஹாசனின் கண்களில் Close Up Shot வைத்து முடித்திருப்பார் பாரதிராஜா. ( அது ஹாலிவுட்டில் 1960ல் வெளியான சைக்கோ படத்தில் இருந்து சுட்டது ).


ஆனால் இந்த இரண்டு வெவ்வேறு காட்சிகளில் வரும் பார்வைகளுக்கு வித்தியாசம் உண்டு.

கமலஹாசனின் கண்கள், விடை தெரியாத சில கேள்விகளை தெளிவு படுத்திவிட்டுச் செல்லும்.


Kang-ho Song ன் கண்கள், பல கேள்விகளை நம்மிடம் கேட்டுவிட்டு விடையை ஆராயச் சொல்லும்.


அதாவது நம் கற்பனைகளை தூண்டச் செய்யும்.


-சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-memories-of-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக