பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
‘அங்க என்ன சர்க்கஸா காட்டுறாங்க! அவ்வளவு கூட்டமா இருக்கு!’என்று எங்களூர் பெண்கள்,60 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சிறுவனாக இருந்தபோது பேசியது இன்றும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. இதிலிருந்தே சர்க்கஸ் மேல் எல்லாக்காலத்திலும் ஓர் ஈர்ப்பு இருந்துள்ளதை உணர முடிகிறது.
சர்க்கஸ் என்ற ஆங்கிலச் சொல்லே தமிழிலும் நிலைத்து விட்டது. ’வேடிக்கை விளையாட்டிற்கான வட்டரங்கு’ என்று இதற்குத் தமிழில் பொருள் கூறப்படுகிறது.
60-70 களில், எங்கள் ஊரிலிருந்து 10 கி.மீ., தொலைவிலுள்ள திருத்துறைப் பூண்டியில்,கோடைக்காலத்தில் சர்க்கஸ் நடக்கும்.அப்பொழுது நடைபெறும் சர்கஸ்களில் மிருகங்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். யானை,குதிரை,சிங்கம், புலி ஆகியவற்றின் பயன்பாடு அதிகம். மிருகங்களின் ஓசை பகலிலும் வெளியில் நன்கு கேட்கும். மாலையானதும் கூட்டத்தை இழுக்க, ஸ்பீக்கர் செட்டில் சினிமாப் பாடல்களை அதிக சவுண்டுடன் ஒலிப்பார்கள்.
இரவு நேரத்தில் ஆர்க் லைட் மூலம் வானத்தில் ஒளியைப் பாய்ச்சி, அதனைச் சுற்றி வரச் செய்வார்கள். நாங்கள் எங்கள் ஊரிலிருந்தே அதனைப் பார்த்ததோடு சரி. அப்பொழுதெல்லாம் நினைத்தவுடன் சினிமா, சர்க்கஸ் என்று கிளம்பி விட முடியாது. குடும்பப் பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்காது. அதோடு மட்டுமல்லாது எங்களூரிலிருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள பாண்டி வரை நடந்து சென்றுதான் பஸ் பிடிக்க வேண்டும். இப்பொழுது போல அப்பொழுதெல்லாம் அடிக்கடி பஸ் வசதி கிடையாது. அரைமணி, ஒரு மணி நேர இடைவெளியில்தான் பஸ்கள் வரும். எங்கள் பகுதியில் எஸ்.ஆர். வி.எஸ்(SRVS) பஸ்தான் அப்பொழுது ஃபேமஸ்.
நவீன சர்க்கஸின் வரலாற்றைச் சற்றே கிண்டிப் பார்த்தால், 1770-களில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘பிலிப்ஸ் அஸ்லே’ என்பவரே தற்கால சர்க்கஸிற்கு முன்னோடி என்பது தெரிய வருகிறது.இவரே ‘நவீன சர்க்கஸின் தந்தை’என்றும் போற்றப்படுகிறார். ஆறடி உயரமும், ஆஜானுபாகுவான உருவமும் கொண்ட இவர் இங்கிலாந்தின் குதிரைப் படை வீரரும், ஏழாண்டுப் போரின்(1756-1763)புகழ் பெற்ற மூத்த வீரரும் ஆவார். இவரும், இவர் மனைவி பட்டி யும் சேர்ந்து, வெஸ்ட் மின்ஸ்டர் பாலத்தருகே நடத்திய பயிற்சிப் பள்ளியில், காலையில் பயிற்சி அளித்து விட்டு, மாலையில் சர்க்கஸ் பயிற்சிகளில் ஈடுபடுவாராம்.
1768 ல் இந்தப் பயிற்சிப் பள்ளி நடத்தப்பட்டிருக்கிறது.
ஜிம்னாஸ்டிக், களரி, குதிரைச் சவாரி மற்றும் கோமாளி வேடிக்கை போன்றவற்றிலேயே இவர் அதிக ஈடுபாடு காட்டினாராம். அதனால்தான் நீண்ட நாட்களுக்குக் குதிரையின் மேலிருந்து செய்யும் சாகசங்கள் சர்க்கஸில் தொடர்ந்தன போலும்.
உலகிலேயே மிகப் பழமையான சர்க்கஸ் என்ற பெருமையை,’தி ராயல் ஹன்னி போர்ட்’என்ற அமெரிக்க சர்க்கஸே பெறுகிறது. சுற்றுப்பயண குடும்ப சர்க்கஸாக இது திகழ்ந்துள்ளது.
அப்புறம் 80 களின் ஆரம்பத்தில் சென்னை வந்த பிறகு, சென்னையில் ஒரு சர்க்கஸ் பார்க்கப் போனோம்.பார்களில் விளையாடல், ஐந்தாறு அழகிகள், ஆளுக்கொரு ஒரே சக்கர சைக்கிளில் சர்க்கஸ் கூடார வட்டத்திற்குள் ரவுண்ட் அடித்தது ஆகியவை நன்றாக ஞாபகத்தில் உள்ளன.
அப்பொழுதெல்லாம் சர்க்கஸ் ஜோக்கர்கள் பெரும்பாலும் குட்டையாக இருப்பார்கள். சர்க்கஸ் ஆரம்பமானதும் முதலில் வந்து நம்மை மகிழ்விப்பவர்கள் அவர்களே. பின்பு நிகழ்ச்சிகள் மாறும் இடை வெளியிலும் அவர்களே தங்கள் திறமைகளை நம்மிடம் பறை சாற்றுவார்கள். ’ஜோசப் கிரிமால்டி’ என்ற இங்கிலாந்து நாட்டுக்காரரே சிறந்த சர்க்கஸ் கோமாளியாக இன்றளவும் புகழப்படுகிறார். இவர் 1800 களின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவரைத் தொடர்ந்து பலர் இத்துறையில் சிறப்பான பணியாற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். ’ரொனால்ட் மெக்டொனால்ட்’ என்பவரும் சிறந்த கோமாளியாகத் திகழ்ந்துள்ளார்.
உயிரையே பணயம் வைத்துத்தான் முன்பெல்லாம் சர்க்கஸ்கள் நடத்தப்பட்டு வந்தன. சிங்கம், புலி இவற்றின் கூண்டுக்குள் மனிதர்கள் சென்று அவற்றை அவர்களின் கட்டளைக்குப் பணிய வைத்தல்; திறக்கும் சிங்கத்தின் வாய்க்குள் தலையை விடல்; தொங்கும் பார்களைப் பிடித்துக் கொண்டு இங்கும் அங்கும் தாவுதல்; யானைகளைப் பழக்கிப் பந்தின் மீது நிற்க வைத்தல்; அவற்றை இசைக்கேற்ப நடனம் ஆடச் செய்தல்; பலகையில் கட்டப்பட்ட பெண்ணின் தலையைச் சுற்றி கத்தி வீசுதல்; பீரங்கியிலிருந்து நொடியில் விடுபடும் பந்தாக, மனிதர்களையே பயன்படுத்துதல்; மிக உயரத்தில் கயிற்றில் நடத்தல் என்பன போன்ற மயிர்கூச்செறிய வைக்கும் பலவும் சர்க்கஸில் அடக்கம். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது இத்தொழிலிற்கே முழுமையாகப் பொருந்தும்!
சர்க்கஸின் பெருமை கூடியிருந்த காலக் கட்டங்களில், அது திரைப்படங்களையும் விட்டு வைக்க வில்லை.1963 ல் வெளிவந்த ‘குலமகள் ராதை’ படத்திலும்,1966ல் ரிலீசான ‘பறக்கும் பாவை’ திரைப்படத்திலும் சர்க்கஸ் காட்சிகள் இடம் பெற்றன.இன்னும் பல படங்கள் வந்திருந்தாலும் உதாரணத்திற்காக ‘நடிகர் திலகம்’ படம் ஒன்றையும், ’மக்கள் திலகம்’ சினிமா ஒன்றையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
கதை சர்க்கஸைச் சுற்றியே நகரும்.அதிலும் குலமகள் ராதை படத்தில் வரும் இரண்டு பாடல்கள் சர்க்கஸ்காரர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தன.
‘பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்- அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்!
இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன்-அவன்
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்!’
என்ன அருமையான கற்பனை! எவ்வளவு பொருள் பொதிந்த பாடல்! 58 ஆண்டுகளைக் கடந்து விட்டாலும்,அந்தப் பாடலின் இனிமையும், வளமும் இதயத்தைப் பிசைகிறதே!
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று!
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
உறவுக்கு ஒன்றே ஒன்று!
கணக்கினில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றே ஒன்று!
எல்லாப் பாடல்களிலுமே இழையோடும் தத்துவத்தை என்னென்பது?!
மிகவும் பிரபலமான சர்க்கஸ் கம்பனிகள் என்ற லிஸ்டில் மூன்று கம்பனிகள் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றன.
1.அமெரிக்காவின் ‘வர்காஸ்’ சர்க்கஸ்
2.’சர்க்யூ டு சோலில்’ என்ற கனடா நாட்டின் சர்க்கஸ்
3.’சர்க்யூ மெட்ரானோ’என்பது பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ளது.
மனித உரிமைக்காக உலகம் முழுதும் குரல்கள் வலுத்து ஒலிக்க ஆரம்பித்த பிறகு, ஆபத்தான ஸ்டண்ட்கள் (சண்டைகள்) என்று காரணம் காட்டப்பட்டு பல நிகழ்ச்சிகளைச் சட்டத்தின் மூலம் நிறுத்தி விட்டனர்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்திலுள்ள நார்போல்க் என்றயிடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பீடா(PETA -People for the Ethical Treatment of Animals)என்ற அமைப்பு, சுமார் 6.5 மில்லியன் சப்போர்ட்டர்களுடன் விலங்குகளைப் பாதுகாக்கக் களம் இறங்கியதால், சர்க்கஸ்களிலிருந்து விலங்குகள் விடை பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
எனவே, தற்கால சர்க்கஸ்கள் ஆபத்தான விளையாட்டுக்கள் அதிகமின்றி, கோமாளிகளும் அதிகமில்லாமல், எந்த விலங்குகளும் இன்றி மனிதர்களின் சிறப்பான பயிற்சிகளைக் கொண்டே நடத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. அம்மாதிரியான ஒரு சர்க்கஸைத் தான் இங்கு மெக்லீனில் டைசன்ஸ் கார்னர் பகுதியில் கடந்த 3 ந் தேதி கண்டு களித்தோம்.
நாங்கள் வழக்கமாக நடைப் பயிற்சி மேற்கொள்ளும் டைசன் கார்னர் பகுதியில் அன்று திடீரென நீலம் மற்றும் பிங்க் வண்ண டெண்டில் அதிக ஒளியுள்ள மின் விளக்குகள் பளிச்சிட்டன.
அருகில் சென்று பார்த்தபோதுதான் அது சர்க்கஸ் கூடாரம் என்று தெரிய வந்தது.
வஸ்கியூஸ் சர்க்கஸ் (Circus Hermanos Vazquez)என்ற பெயருடன் நடத்தப்படும் இதன் வெளி டெண்டைப் பார்த்து விட்டு உள்ளே சென்றால், வாவ்! உள் அமைப்பு நம்மை வாய் பிளக்க வைக்கிறது.சுமார் 2000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவுக்குப் பெரிதாகவே அமைக்கப்பட்டுள்ளது.உள்ளே அமர்ந்ததும் ஏதோ பெரிய கட்டிடத்திற்கு உள்ளே அமர்ந்துள்ளது போலவே அவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றுகிறது.கூடாரத்திற்குள்தான் இருக்கிறோம் என்று நம்பவே முடியவில்லை.
இசை மீட்டும் கோஷ்டியினர் உயரமான மேடையில் இருப்பதால், எல்லா சீட்டுகளிலும் இருந்தே அவர்களை நன்கு காண முடிகிறது. உயரமான உச்சியிலிருந்து கயிற்றில் ஒரு கோட் தொங்கிக் கொண்டிருந்தது. அதனை லாவகமாக சர்க்கஸின் கோமாளி போட்டுக் கொண்டார். அவர்தான் இந்த சர்க்கஸின் பிரதான பாத்திரம்.சராசரி உயரமும் சற்றே பருத்த உருவமும் கொண்டிருந்தார்.
குழுவாக வந்து நடனமாடி மகிழ்வித்தார்கள்,பெண்களும் ஆண்களும். அவர்களின் ஆடைகள் பொன் வண்ணத்தில் மின்னின. அதென்னவோ தெரியவில்லை.உலகத்தின் எந்தப் பகுதிக்குப் போனாலும், சிவப்பு ஆடையில் பொன் சரிகை வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளே பெரும்பாலும் மக்களைக் கவர உதவுகின்றன.
ஒரே ஆண் பல பந்துகளை ஒரே நேரத்தில் போட்டுப் பிடித்துச் சாகசம் காட்டினார்.
அவரின் கை வேகம் கண்டு அசந்து போகாமல் இருக்க முடியவில்லை.எவ்வளவு பயிற்சி அதற்கு வேண்டுமென்று எண்ணும்போதே மலைப்பாக இருந்தது!
அடுத்து வந்த பெண்ணின் உடல் பூங்கொடிதான்.மேலிருந்து தொங்கிய வலைக்கயிற்றைப் பிடித்தபடி,மரத்தில் சுற்றிக் கொள்ளும் கொடி போல, அவர் செய்த சாகசங்கள் என்றும் மனதில் நிற்பவை.வலைக் கயிறு மேலும், கீழும் போய் வருவதும், அதில் அவர் சுற்றிக்கொள்வதுமாக,ரம்மியம் காட்டினார்.
நடுவில், அந்த க்ளோன், பார்வையாளர்கள் சிலரையும் வட்டரங்கில் கொண்டு வந்து, அவர்கள் மூலமாகவும் நமக்குச் சிரிப்பை வரவழைத்தார்.
திரைப்படங்கள் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டாலும், சர்க்கஸ்கள் சிறப்புற என்ன காரணம் என்று மனது கொஞ்சம் அசை போட்டது. திரைப்படக் கதாநாயகர்கள், தனியாக ஒரே நேரத்தில் பல பேரைத் தாக்கி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தாலும், மனிதனின் மனம் சிரிப்பையும்,சாகசங்களையுமே அதிகம் விரும்புவதால் சர்க்கஸ்கள் வரவேற்பைப் பெறுகின்றனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது, அதிலும் ‘துலாபாரம்’ போன்ற சோக காவியங்களின் மூலம் ஏழை மக்களின் எதார்த்த வாழ்க்கையைப் பார்க்கும் யாரும், கண்ணீர் சிந்தாமல் தியேட்டரை விட்டு வெளியில் வர முடியாது.
மாலை 7.30 மணிக்கு ஆரம்பித்த சர்க்கஸ், 8.30 மணி வாக்கில் 20 நிமிட இடைவேளை அளித்தது.
அது எப்படி என்றே தெரியவில்லை... பூவுலக மக்களின் ஏகோபித்த சாய்ஸ் பாப் கார்னும், பஞ்சு மிட்டாயுந்தான் போலும்! இடைவேளை விட்டதும், பாப் கார்ன் விற்பவர்களும், பஞ்சு மிட்டாய் விற்பவர்களும் நாம் அமர்ந்திருக்கும் சீட்டுக்கே வந்து விற்கிறார்கள்.
மீண்டும் வந்தமர்ந்ததும் ஓர் இள வயதுப் பெண் பல வண்ண பந்துகள் பலவற்றைத் தூக்கிப் போட்டு பிடிப்பதும், அவற்றை மேஜையில் அடித்துப் பிடிப்பதுமாகத் தன் லாவகத்தைக் காட்டினார்.
வளையங்கள் பலவற்றை ஒன்றாக வான் நோக்கி வீசிய வாலிபர் அவற்றைக் கீழே விழாமல் பிடித்த பக்குவம், அவர் பயிற்சியின் ஆழத்தைக் காட்டியது.
பல வாலிபர்கள் நடனமாடியபடி உடலை வளைத்துச் சாகசங்கள் புரிய, இருவர் மட்டும் கயிற்றைப் பிடித்தபடி மேலும் கீழும் சென்று வந்து அசத்தினார்கள்.
வட்டரங்கின் உள்ளே அந்தக் கூண்டு கொண்டு வரப் பட்டதும், அதிகக் கை தட்டலும்,அதனைத் தொடர்ந்து ஒரு பயம் கலந்த அமைதியும் நிலவ ஆரம்பித்தது.
நம்மூரில் அதனை ‘மரணக் கூண்டு’ என்றே அழைக்கிறார்கள். ஆம்! அந்தக் கூண்டின் உள்ளேதான் இரு சக்கர வாகனத்தில்,அசுர வேகத்தில் மேலும் கீழுமாகவும், பக்கவாட்டிலும் வீரர்கள் பறப்பார்கள். நம்மூரில் அக் கூண்டின் உள்ளே இருவர் மட்டுமே அவ்வாறு செய்து நம்மைப் பயப்படவும், அதிர்ச்சியடைந்து ஆச்சரியப்படவும் வைப்பார்கள்.
இங்கு முதலில் மூன்று பேர் உள்ளே சென்றார்கள். அவர்கள் உள்ளே சுற்றி வர,நான்காவதாக ஒருவரை உள்ளே அனுப்பினார்கள். அவரும் சேர்ந்து சுற்றிச் சாகசம் புரிய,சில நிமிடங்களுக்குப் பிறகு ஐந்தாவதாக ஒருவரையும் உள்ளே அனுப்பினார்கள். கூடாரம் முழுவதும் ‘பின் ட்ராப் சைலன்ஸ்!’ ட்ரும்..ட்ரூம்’ என்ற 5 மோட்டார் சைக்கிள்களின் உறுமல் சப்தம் மட்டுமே அரங்கை நிறைக்க, பார்வையாளர்கள் தங்கள் இருக்கைகளின் நுனிக்கு வந்து நோக்க... அந்தச் சில நிமிடங்கள்…
கூடாரத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் நிமிடங்களாகக் கழிந்தன! ட்ரூம்...ட்ரூம் …
ஓசை மெல்லக் குறைந்து, கூண்டின் கதவு திறக்கப்பட்டதும்தான் அனைவர் முகத்திலும் திருப்தி. ஒவ்வொருவராக வந்து, தாங்கள் அணிந்திருக்கும் ஹெல்மட்டைக் கழற்றிப் பார்வையாளர்களுக்கு வணக்கம் சொன்ன போதுதான் தெரிந்தது…
அந்த ஐவரில் இருவர் பெண்களென்பது! ஓ! ஆண்களுக்கு இணையானவர்கள் பெண்களல்லவா?
அதன்பிறகு வந்த இளைஞர்கள் தங்களின் திறமையைக் காட்டிய விதம் அனைவரையும் வியப்படையச் செய்தது.ரப்பர் மனிதர்களால் கூட அவ்வளவு அழகாக உடலை வளைக்க முடியுமா என்பது சந்தேகமே.
நடு நடுவே கரடி மற்றும் பான்டாக்கள் போன்று வேஷமிட்டு வந்தவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்த குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இறுதியாக,பங்கேற்ற அனைவரும் வட்டரங்கினுள் வந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள, சர்க்கஸ் இனிதே முடிவடைந்தது.
பாப் கார்னும், காட்டன் கேண்டியும்…(அதாங்க நம்மவூரு பஞ்சு மிட்டாய்) சுவைத்தபடி சர்க்கஸ் பார்ப்பதில் வரும் குதூகலம் வேறு எதிலும் நிச்சயம் வராது என்பதே உண்மை!
ஓர் அரசர் புலவர்களுக்கு ஒரு வினோதப் போட்டி வைத்தாராம்.கையிலுள்ள எலுமிச்சம்பழத்தை உயரே தூக்கிப் போட்டு, மீண்டும் கையில் பிடிக்கும் முன்னால் ராமாயணத்தைச் சொல்லி முடிக்க வேண்டுமென்பதுதான் போட்டி! ஒரு புத்திசாலிப் புலவர் எலுமிச்சம்பழத்தை மேலே போட்டு விட்டு,’ராமன் பிறந்தான், ராவணன் இறந்தான்’ என்று கூறிய படியே பழத்தை மட்டுமல்ல... பரிசையும் பிடித்தாராம்!
அதே கதைதான் இங்கும். சர்க்கஸ் தொழிலின் வரலாற்றை ஒரு சில பக்கங்களுக்குள் அடக்க முடியாது என்பதே நிதர்சனம்.
-ரெ.ஆத்மநாதன்,
மெக்லீன்,அமெரிக்கா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-circus
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக