Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

`துப்பாக்கிச்சூடு நாளில் பணியிலிருந்த உயர் அதிகாரிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை!' - ஹென்றி திபேன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் 28 கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த 22-ம் தேதியுடன் ஆணையத்திற்கு அளிக்கபட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த 23-ம் தேதியில் இருந்தது அடுத்த ஆண்டு 2022, பிப்ரவரி 22-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை 23-ம் தேதி தொடங்கியது.

ஆணையத்தின் முன்பு ஆஜராக வந்த ஹென்றி திபேன்

வரும் 27-ம் தேதி வரை விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம்பட்ட காவலர்கள், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வழக்கறிஞர்கள், என 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையின் முதல் நாளில், மதுரையைச் சேர்ந்த ’மக்கள் கண்காணிப்பக’த்தின் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆணையத்தின் முன்பு ஆஜராகினார். முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நபர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி எழுத்துப்பூர்வமாக எனது வாதங்களை முன் வைத்தேன்.

இதைத்தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக இன்று ஒரு நபர் ஆணையம் முன்பு ஆஜராவதற்கு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 400 பேர் வரை விசாரிக்க வேண்டிய நிலையில் ஆணையம், மேலும் 6 மாதம் கால நீட்டிப்பு கேட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தமிழக அரசும் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. மற்றுமொரு வருத்தம் என்னவென்றால், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்னமும் உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அன்றைய தினத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு அளித்ததாகக் கூறப்படும் தாசில்தார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

ஹென்றி திபேன்

ஒரு மாதத்தில் வெறும் 5 நாட்கள் மட்டுமே விசாரணை ஆணையம் செயல்படுகிறது. 5 நாட்கள் மட்டும் விசாரணை நடத்தப்பட்டால் எப்படி விசாரணையை விரைந்து முடிக்க முடியும்? ஏற்கெனவே மூன்றாண்டைக் கடந்த நிலையில் மேலும் 6 மாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது.

கொரோனா காலகட்டத்திலும்கூட சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்திலோ அல்லது தூத்துக்குடியில் உள்ள முகாம் அலுவலகத்திலோ சாட்சிகள் ஒரு அறையிலும் விசாரணை அதிகாரிகள் ஒரு அறையிலும் அமர்ந்து விசாரணையை நடத்தி முடித்திருக்கலாம். அதற்கும் வழி இல்லையெனில் ஆன்லைன் மூலமாக ’மெய்நிகர் விசாரணை கூடம்’ நடத்தி விசாரணையை மேற்கொண்டிருக்கலாம். ஆணையத்தின் தாமதப் பணிகள் மீது எங்களைப் போன்றோருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான ஹென்றி திபேன்

எனவே, அரசு கூறியுள்ளபடி இன்னும் 6 மாத காலத்திற்குள் முழு விசாரணை நடத்தி துப்பாக்கிச்சூடு கலவரம் தொடர்பான முழு அறிக்கையையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரசுக்கு தர வேண்டும் என்பதே எனது விருப்பம். ’நஷ்ட ஈடு’ நீதி கொடுக்காது, சி.பி.ஐ நீதி தராது. மாறாக துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்களில் குறைந்தபட்சம் சிலராவது இந்நேரம் சிறைக்குச் சென்று இருக்க வேண்டும். எனவே விரைந்து விசாரணையை முடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Also Read: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு சம்மன்! - ஒருநபர் ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை தொடக்கம்



source https://www.vikatan.com/news/judiciary/commission-29th-phase-investigations-starts-in-thoothukudi-henry-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக