ராகவா லாரன்சின் 'காஞ்சனா 3' படத்தில் நடித்தவர் ரஷ்ய நடிகை மற்றும் மாடல் அலெக்சாண்ட்ரா ஜாவி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 12:05 மணிக்குக் கோவாவில் அவரின் ஆண் நண்பருடன் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அதே நாளில் ரஷ்யாவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஆனால், இரண்டு தற்கொலைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றது எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
24 நான்கு வயதாகும் அலெக்சாண்ட்ரா மாடலிங் மற்றும் சினிமா வட்டாரத்தில் அல்லி ரி-ஜாவு என அறியப்படுகிறார். 'காஞ்சனா 3' படத்தின் 'காதல் ஒரு விழியில்' பாடல் மூலம் பிரபலமான இவர் கடந்த 2019ம் ஆண்டு ஒரு புகைப்படக் கலைஞர் தன்னை பாலியல் ரீதியாக வற்புறுத்தியதாகக் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்படி புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டாலும் அந்தப் பாலியல் துன்புறுத்தல் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. ஆனால், நடிகையின் தற்கொலைக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துவிட்டனர்.
ஆகஸ்ட் 19 அன்று தன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்ட அலெக்சாண்ட்ராவின் உடல் கோவாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர் ரஷ்யக் குடிமகள் என்பதனால் ரஷ்யத் தூதரகத்திற்குத் தகவல் சொல்லப்பட்டுவிட்டது. அலெக்சாண்ட்ராவின் குடும்பத்தினர் பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்த பின் பிரேதப் பரிசோதனை நடைபெறும். முதல்கட்ட விசாரணையில் தற்கொலை மரணம்தான் எனக் காவல்துறையினர் கூறினாலும் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் உறுதியாகக் கூற முடியும். இதுவரை காவல் துறையினர் நடத்திய சோதனையில் தற்கொலைக்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அலெக்சாண்ட்ரா தனது கடைசி பதிவில், "எல்லோர் வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலர் அதனைப் பயன்படுத்திச் சிறந்த வாழ்கையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்கள் வருங்கால வாழ்கையைக் காண முடியாமல் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/kanchana-3-russian-actress-and-model-alexandra-djavi-found-dead
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக