Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

அக்ஷய் குமாரின் `பெல் பாட்டம்': கொரோனா கால மிஷனில் வெற்றி பெறுகிறாரா இந்த இந்தியன் ஜேம்ஸ் பாண்டு?

இந்திரா காந்தியின் ஆட்சியில் நடக்கும் கதையில், பயணிகள் விமானம் ஒன்றைத் தீவிரவாதிகள் கடத்தி சென்றுவிடுகின்றனர். ரா பிரிவின் (RAW) அதிகாரியான அக்ஷய் குமார், தன் டீமுடன் அந்தப் பயணிகளையும் விமானத்தையும் எப்படி மீட்கிறார், தீவிரவாதிகளை எப்படிப் பிடிக்கிறார் என்பதே படத்தின் ஒன்லைன்.

நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படம் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே மறைமுகமாக முட்டல் மோதல்கள் இருந்த வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது. பாகிஸ்தான், இந்தியாவை உடைக்க ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்கியது தொடங்கி, சீக்கிய காலிஸ்தானி பிரிவினைவாதிகளை அவர்கள் வளர்த்துவிட்டதுவரை, பல வரலாற்றுச் சம்பவங்களை இந்தியாவின் பக்கம் நின்று படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஞ்சித் திவாரி.

பெல் பாட்டம்

ரா அதிகாரியாக அதற்குரிய மிடுக்குடன் அக்ஷய் குமார். அவர் பல ஆயிரம் படங்களில் செய்த பாத்திரமே என்பதால் புதிதாகவும் எதுவும் புலப்படவில்லை, குறை சொல்லும்படியும் எதுவுமில்லை. ஸ்டன்ட் தொடங்கி, எமோஷன்கள் வரை எல்லாவற்றையும் சரியான விகிதத்தில் அள்ளித் தெளித்திருக்கிறார். புரோட்டக்கால்படி, அவரின் கதாபாத்திர பெயரை நாம் சொல்ல முடியாது என்பதால் அவரின் கோட் நேம் 'பெல் பாட்டம்'க்குச் சிறப்பாகப் பொருந்திப் போயிருக்கிறார் என்பதை மட்டும் பதிவு செய்துகொள்ளலாம்.

குறிப்பாக, "இந்தியன் ஜேம்ஸ் பாண்டுக்கு பெட்ரோல் அலவன்ஸ்கூட இல்லையா?" என்று அவர் சதாய்க்கும் இடம், பக்கா அக்ஷய் குறும்பு! ஆனால், என்னதான் லாஜிக் பார்க்கக்கூடாது என்றாலும், அக்ஷய் குமாரை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு முயன்று கொண்டிருப்பவர் என்று காட்டியிருப்பது எல்லாம் டூ மச் ஜி!

இந்திரா காந்தியாக ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் லாரா தத்தா. கணீர் குரலில் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் மாஸ் மீட்டரை எகிறச் செய்திருக்கின்றன.

இந்திரா காந்தியாக லாரா தத்தா

முதல் பாதி முழுக்கவே வந்தாலும் வாணி கபூருக்கு டூயட் தவிர வேறு எதுவும் பணியில்லை. அதே சமயம், சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் 'காலா', 'வலிமை' ஹூமா குரேஷிக்கு முக்கியமான பாத்திரம். தலைவாசல் விஜய், சீனியர் நடிகர் அடில் ஹுசைன் உள்ளிட்டவர்களுக்கு அழுத்தமான பாத்திரங்கள். எதிலும் குறையேதும் இல்லை!

நியூ டெல்லி, லண்டன், லாகூர், துபாய் எனப் பல இடங்களில் நகரும் கதையைச் சிரத்தையுடன் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் திரைக்கதை எழுதிய அசீம் அரோராவும், பர்வீஷ் ஷேக்கும். குறிப்பாக அறிமுக இயக்குநர் என்ற சுவடே தெரியாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் திவாரி. கொரோனா முதல் அலையின் லாக்டௌன் முடிந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தபோது, முதன்முதலாக கேமராவுடன் களம் இறங்கியது இந்த 'பெல் பாட்டம்' படைதான்.

பெல் பாட்டம்
குறைந்த பட்ஜெட், லாக்டௌன் சினிமா, ஓடிடி சினிமா என திரையுலகம் மாற்றுப் பாதையில் பயணிக்கும்போது, சமரசம் எதுவுமின்றி, பெரிய பட்ஜெட் படத்தில், 3டி என்னும் பிரமாண்டத்தையும் இழைத்து, டெக்னிக்கலாகக் கவனிக்கத்தக்க ஒரு படைப்பைக் கொடுத்திருக்கும் படக்குழுவுக்குப் பாராட்டுகள்.

குறிப்பாக, ப்ளைட் காட்சிகள் மற்றும் பிரமாண்ட புழுதிப் புயல் காட்சிகளில் சுற்றிச் சுற்றி உழைத்திருக்கும் ராஜிவ் ரவியின் கேமராவுக்கும், சந்தன் அரோராவின் கத்திரிக்கும் ஸ்பெஷல் அப்ளாஸ்!

படத்தில் பல இசையமைப்பாளர்கள் தங்களின் பங்கை ஆற்றியிருந்தாலும் பாடல்கள் சுமார் ரகமே! அதுவும் முதல் பாதியில் டூயட் பாட்டு வேண்டும், சென்டிமென்ட் பாட்டு வேண்டும் என்பதற்காக எல்லாம் ப்ளாஷ்பேக் போவதெல்லாம் நியாயமே இல்லீங்கண்ணா! இதெல்லாம் 10 வருடங்களுக்கு முந்தைய ஸ்க்ரிப்ட் டெம்ப்ளேட் என்பதைப் பாலிவுட் ஏன் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது ஆச்சர்யமே! டேனியல் ஜார்ஜின் பின்னணி இசையில் தீம் மியூசிக் மட்டும் வேகத்தைக் கூட்டியிருக்கிறது.

பெல் பாட்டம்

சுவாரஸ்யமான திரைக்கதைதான் என்றாலும் பல காட்சிகள் அக்ஷய் குமாரின் முந்தைய படங்களான 'பேபி', 'ஏர்லிஃப்ட்' போன்றவற்றை நினைவூட்டுகின்றன. 'பேபி'யில் துருக்கி, 'ஏர்லிஃப்ட்'டில் குவைத் என்றால், இதில் துபாயில் சாகசம் செய்திருக்கிறார்கள். அடுத்து எந்த ஊரில் மிஷன் என்று அக்ஷயிடமே ஜாலி கேள்வி ஒன்று கேட்கலாம் போல! துபாய் அப்பாவிகளின் உயிர்களை மதிக்கும் தேசம் எனப் பல இடங்களில் வாண்டடாக வசனம் வைத்துப் புகழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால், பிரச்னை என்னவென்றால் 'பெல் பாட்டம்' படத்துக்குச் சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், வரலாற்றுச் சான்றுகளின்படி, விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள்தான் காப்பாற்றியுள்ளனர். ஆனால் படத்தில் இந்தியாவின் ரா அதிகாரிகள் விமானத்தைக் காப்பாற்றியதுபோல் கதையை மாற்றியிருக்கிறார்கள். வரலாற்றை மாற்றி எழுத முயல்கிறார்கள் எனக் கண்டித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். வொய் திஸ் செயல் அக்ஷய் ஜி?!

Also Read: ஐஸ்வர்யா ராஜேஷின் `பூமிகா'... பேய் சொல்லும் மெசேஜ் என்னன்னா?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

பெல் பாட்டம்

ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு நல்ல என்டர்டெயினராகக் குறைகளை மறக்க வைக்கிறது இந்த 'பெல் பாட்டம்'. குறிப்பாக, வெதர் ரிப்போர்ட்டை வைத்து விளையாடியிருப்பது, இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட்கள், நாயகனின் அதீத புத்திக்கூர்மை போன்றவை ஒரு பக்கா கமர்சியல் படத்துக்கான மீட்டரில் கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கின்றன.

3டி அனுபவம், பலநாள் கழித்து தியேட்டருக்காக எடுக்கப்பட்ட படத்தைத் தியேட்டரிலேயே பார்க்கலாம் போன்ற காரணங்களுக்காக 'பெல் பாட்டம்' படத்தை நிச்சயம் ரசிக்கலாம்.


source https://cinema.vikatan.com/bollywood/akshay-kumar-bell-bottom-review-straight-from-the-theatres-after-a-long-time

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக