Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நெறிமுறைகளை அறிவிக்குமா அரசு?

இந்தியாவில் 29,666 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 566 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்த 48 சுங்கச்சாவடிகள் வழியாக தினமும் சுமார் 65 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. இதன் மூலமாக, தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக்கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதனால், சுங்கச்சாவடிக் கட்டணங்கள் தவறாமல் உயர்த்தப்பட்டுவருகின்றன.

வேல்முருகன் எம்.எல்.ஏ

‘வாகனங்கள் வாங்கும்போது, அனைத்து வாகனங்களுக்கும் ஆயுள் கால சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், எதற்காக சுங்கச்சாவடி வரி?’ என்று அரசியல் கட்சித் தலைவர்களும் வர்த்தகத் துறையினரும் பொதுமக்களும் கேள்வி எழுப்பிவருகிறார்கள். கேள்வி எழுப்புவது மட்டுமல்ல, தமிழ்நாடு உள்பட பல இடங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் தொடர்பாக பெரும் சர்ச்சையும் அடிதடிகளும் நடைபெற்றுள்ளன.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 20-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து துயரத்தில் தவித்த அந்த நேரத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்பதற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனால், ஏற்கெனவே சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு எதிரான கோபத்தில் இருந்த மக்கள் மேலும் கொதிப்படைந்தனர். ஆனாலும், மக்களின் உணர்வை ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை.

சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கான காலம் முடிந்துவிட்ட நெடுஞ்சாலைகளில், சாலை பராமரிப்பு போன்ற பெயர்களில் கட்டண வசூல் தொடர்கிறது. மேலும், முறையான பராமரிப்பு இல்லாத சாலைகளிலும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால், வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 26 சுங்கச்சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டது.

ஒரே நாளில் இரண்டு முறை பயணிப்பதற்கான கட்டணம், 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களின் மாதாந்திரப் பயணக் கட்டணமும், உள்ளூர் வாகனங்களின் பயணக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அப்போது சட்டசபை தேர்தல் நேரம் என்பதால், கட்டண உயர்வு குறித்த தகவல்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சுங்கச்சாவடி

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை தலைவர் என்.ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே, சுங்கக் கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதால் கடும் அதிருப்தியில் இருக்கும் மக்களுக்கு, இந்த புதிய கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வர்த்தகம் மற்றும் தொழில் துறையினரும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழலில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு மக்களின் தலையில் மேலும் சுமையை அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“தற்போது நாட்டில் பெரும்பாலான வாகனங்கள் ‘ஃபாஸ்ட் டேக்’ முறைக்கு வந்துள்ளன. ஃபாஸ்ட் டேக் முறையின் கீழ் வராத வாகனங்களிடமிருந்து இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்குமாறு ஏற்கெனவே மத்திய அரசு கூறியுள்ளது. அப்படியிருக்கும்போது மேலும் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று வாகன உரிமையாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவந்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 1995-ம் ஆண்டு கலைக்கப்பட்டு, தன்னாட்சி அமைப்பாக மாற்றப்பட்டது. அனைத்து மாநிலங்களையும் சாலைகள் மூலமாக இணைப்பது, சாலைகளின் தரத்தை மேம்படுத்துவது என்பது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முக்கியப் பணி. பயணிகள் போக்குவரத்துக்கும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கும் சாலைகளைத் தரமாகக் கட்டமைப்பது ஆணையத்தின் பொறுப்பு. அந்த வகையில், நான்கு வழிச்சாலைகள் மற்றும் ஆறு வழிச்சாலைகளை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. பிறகு, அந்த நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து, அதைத் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்துவிடுகிறது.

பிரதமர் மோடி

சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்கிற ஒரு விதி இருக்கிறது. ஆனால், அந்த விதிமுறையை எந்த ஒப்பந்ததாரரும் மதிப்பதில்லை. மேலும், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில், வாகனங்களில் பயணிப்போருக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் வரை, 50 சதவிகிதக் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளை ஒப்பந்ததாரர்கள் மதிப்பதில்லை.

Also Read: விற்கப்படும் பொதுத்துறை நிறுவன பங்குகள் - எதிர்கால விளைவுகள் என்னென்ன?

ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையே 60 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ-க்கு அப்பால் சுங்கச்சாவடி இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு, புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய விதிமுறைகள் நெடுஞ்சாலைகள் ஆணையத்தாலோ, சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களாலோ பின்பற்றப்படுவதில்லை என்கிற புகார் பரவலாக இருந்துவருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுவருவதால், வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துவருகிறது. எனவே, “சுங்கச்சாவடி கட்டணம் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும், அல்லது, சுங்கச்சாவடி கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை வர்த்தகர்களும் பொதுமக்களும் மத்திய அரசிடம் வலியுறுத்திவருகிறார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பல தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க் கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 48 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. லட்சக்கணக்கான மக்களின் வரிப் பணத்தைப் பன்னாட்டு முதலாளிகளுக்கு மானியமாக வழங்கும் மத்திய அரசு, சில ஆயிரம் கோடிகள் கொடுத்து, தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்காக இயக்கப்படுகிற சுங்கச்சாவடிகள் அனைத்தையும் இழுத்து மூடவேண்டும்.

சுங்கச்சாவடிகளில் தனியார் நிறுவனங்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றன, இந்த சாலையின் மதிப்பீடு என்ன, எவ்வளவு காலம் வசூலிக்கலாம் உள்ளிட்ட அனைத்துக்கும், மத்திய அரசு தெளிவான வரையறைகளை முன்வைக்க வேண்டும். சாலை மதிப்பீட்டு தொகையைவிட கூடுதலாக வசூலித்துள்ள நிறுவனங்களின் உரிமங்களைத் திரும்பப்பெற்று, அந்த நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி, அந்த தொகையை வட்டியுடன் வசூலிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதேபோன்ற கோரிக்கைகளை பா.ம.க நிறுவனர் ராமதாஸும் வலியுறுத்தியிருக்கிறார்.

சுங்கச்சாவடி கட்டண வசூல் தொடர்பாக மத்திய அரசு நெறிமுறைகளை அறிவிக்குமா?



source https://www.vikatan.com/government-and-politics/politics/articles-on-political-parties-oppose-tollgate-fee-hike

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக