Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

பிக்பாஸ் ஷூட்டிங்கில் கமல்ஹாசன்… மாஸ்டர் செஃப்,சர்வைவர், ஐபிஎல் என சவால்களை சமாளிக்குமா சீசன் 5?!

பிக்பாஸ் சீசன் 5-க்கான அதிகாரப்பூர்வ வேலைகள் இன்றுமுதல் தொடங்குகிறது. சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி-யில் கமல்ஹாசன் நடிக்க ப்ரொமோ ஷூட் இன்று காலை நடைபெறுகிறது.

பிக்பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு எப்போது தொடங்கும் எனத் தெரிந்து கொள்ளும் முன், கடந்த நான்காண்டுகள் பிக் பாஸ் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

தமிழ்த் தொலைக்காட்சி உலகில் 2017-ல் விஜய் டிவியில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் முதன் முறையாகச் சின்னத்திரைக்கு வந்தார்.

பிரபலங்கள் வெளிஉலகத்துடன் எவ்வித தொடர்பும் இன்றி ஒரே வீட்டுக்குள் இருக்கிறார்கள் என்கிறபோது, மக்களிடமும் ஆர்வம் தொற்றிக் கொள்ள நிகழ்ச்சி பெரிய ஹிட் ஆனது.

பிக்பாஸ் ஓவியா

முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆர்மி துவங்கியது முதல் ஆரவ்வுடனான மருத்துவ முத்தம் வரை எங்கும் பிக் பாஸ் பேச்சாகவே இருந்தது. முதல் சீசன் முடிய அதே விறுவிறுப்புடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களும் வந்து போயின.

ஆனால், சென்ற‌ ஆண்டு அதாவது 4-வது சீசனில்தான் பல சிக்கல்களை சந்தித்தது பிக்பாஸ். கொரோனா காரணமாக குறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை.தாமதமாகத் தொடங்கியதால் மழைக்காலத்தில் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழல். மேலும் பிக் பாஸ் டீம் எதிர்பார்த்தது போலவே திடீரென ஒரு நாள் 'பிக் பாஸ்' செட்டுக்கு சில கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட, பிக் பாஸ் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என மூன்று பண்டிகைகளையும் ஹவுஸ்மேட்ஸ் கொண்டாடிய ஒரே சீசன் இதுதான்.

இப்போதும் அதே கொரோனா லாக்டெளனால் ஐந்தாவது சீசனும், நான்காவது சீசன் போலவே பல சிக்கல்களை சந்திக்கத் தொடங்கியது.

பிக்பாஸ் வின்னர் ஆரி

மூன்றாவது அலை வரலாம் என கணிப்புகள் இருந்ததால் நிகழ்ச்சியை எப்போது தொடங்குவது என முடிவெடுக்கமுடியாமல் இருந்தது விஜய் டிவி. இந்த சூழலில் சன் டிவியில் 'மாஸ்டர் செஃப்' தொடங்கப்பட்டுவிட, ஜீ தமிழ் சேனலில் செப்டம்பர் 12 முதல் 'சர்வைவர்' ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இது பிக்பாஸுடன் நேரடியாகப் போட்டிபோடு நிகழ்ச்சி. பிக்பாஸில் ஒரு வீட்டுக்குள் போட்டியாளர்கள் தங்கவேண்டும் என்றால், ‘சர்வைவர்' நிகழ்சியில் ஒரு தனித்தீவுக்குள் போட்டியாளர்கள் தங்கவேண்டும். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

அதனால் பிக்பாஸை செப்டம்பரில் தொடங்குவது என இறுதி முடிவெடுத்துவிட்டது விஜய்டிவி. ''ஆகஸ்ட் 24 ப்ரொமோ ஷூட் நடக்குது. தொடர்ந்து ஓரிரு தினங்கள்ல டீசர் வெளியாகும். மத்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்’' என்கிறார்கள் டிவி தரப்பில்.

மேற்கொண்டு சிலரிடம் பேசிய போது, 'போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கிற வேலைகள் ஏற்கெனவே தொடங்கி நடந்திட்டிருக்கு. பலரையும் அப்ரோச் செஞ்சிருக்கோம். கடந்தாண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு ‘மாஸ்டர் செஃப்’ மற்றும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சிகள் போட்டியாக இருப்பதால் போட்டியாளர்கள் விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டுறோம். அதில்லாமல் ஐபிஎல் கிரிக்கெட்டும் செப்டம்பரில் தொடங்குது. அதனால் அதையும் சமாளிக்கும் வகையில் வலுவான போட்டியாளர்களை இந்த முறை வீட்டுக்குள் இறக்குவோம்'’ என்றார்கள்.

பிக்பாஸ் கமல்

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி தேர்தலில் நின்று அதில் தோல்வியையும் தழுவி இந்த ஐந்து பிக்பாஸ் சீசனுக்குள் ஒரு அனுபவ அரசியல்வாதியாக மாறியிருக்கும் கமல், இந்த சீசனிலும் தன்னுடைய அரசியல் வெடிகளை கொளுத்துவார் என்கிறார்கள். ஆனால், கடந்துமுறை அதிமுக தரப்பை சீண்டியவர் இம்முறை திமுகவை சீண்டவேண்டியிருக்கும். அதனால் சர்ச்சைகள் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிக்பாஸ் இந்தியில், ஓடிடியில் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடங்கி பின்னர் அதை டிவிக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் நேரடியாகவே டிவியில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

''ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'', ''நல்லவர் யார் கெட்டவர் யார்'', ''இது வெறும் ஷோ அல்ல நம்ம லைஃப்'', ''தப்புன்னா தட்டி கேட்பேன்... நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன்'' என ஒவ்வொரு சீசனுக்கும் கமல் சொல்லும் ஒரு பன்ச்லைன் இருந்தது.

பிக்பாஸ் சீசன் 5-ல் கமல் சொல்லப்போகும் பன்ச் லைன் என்னவாக இருக்கும்? நீங்களே சொல்லுங்கள்!


source https://cinema.vikatan.com/television/bigboss-season-5-to-kick-start-today-with-kamal-haasan-promo-shot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக