Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

கூட்டு பாலியல் வன்கொடுமை; போதைப்பொருள்! - உ.பி-யில் 22 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உத்திப்ரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அதே உ.பி-யில் மற்றொரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம்பெண்ணுக்குப் போதைப்பொருள் கொடுக்கப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து பேசிய அந்தப் பெண்ணின் தாய், ``என் மகள் கல்லூரி சேர்க்கைக்காகச் செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். அவள் நேரத்தோடு திரும்பவில்லை. அதன்பிறகு நாங்கள் தேட ஆரம்பித்தோம். அவள் இரவு 7 மணிக்கு ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பினாள். அவளுக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அவர்கள், எனது மகளின் காலையும் முதுகெலும்பையும் உடைத்துவிட்டனர். ரிக்ஷா ஒட்டுநர்தான் அவளை வீட்டில் கொண்டுவந்து சேர்த்தார். என் குழந்தையால் நிற்க, பேசக்கூட முடியவில்லை. அவள் அழுதுகொண்டே, `என்னை காப்பாற்றுங்கள். நான் உயிரிழக்க விரும்பவில்லை' என்று கதறினாள்.

கொலை

அவள் வீடு திரும்பிவுடனே வயிறு அதிகமாக வலிப்பதாகக் கூறினாள். அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கிருந்த மருத்துவர் என் மகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால், செல்லும் வழியில் பால்ராம்பூருக்கு அருகிலேயே என் மகள் உயிரிழந்தாள்" என்றார் கண்ணீருடன்.

Also Read: உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

காவல்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரது உடல் புதன்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது. அதிகாரிகள் பரிசோதனை அறிக்கையில் கால், கை எலும்புகள் எதுவும் உடைந்ததாகக் கூறப்படவில்லை என்றனர்.
பாலியல் வன்கொடுமை

பால்ராம்பூர் காவல்துறை தரப்பில், ``போலீஸார் விரைந்து செயல்பட்டதால், இரண்டு குற்றவாளிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு கை, கால்கள் உடைந்ததாக வெளிவந்த தகவல் உண்மையல்ல. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில்,``அப்பெண்ணின் கையில் குளுக்கோஸ் சிரிஞ்ச் ஏற்றப்பட்டதற்கான தடம் இருந்தது. அப்பெண் மோசமான நிலையில் இருந்ததுபோல் தெரிந்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் உ.பி ஆளும் கட்சியான பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துள்ளான் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி. இதுகுறித்து அவர் கூறுகையில், ``உத்திரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை எனில் யோகி ஆதித்யநாத், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமல் கோயில் கட்டும் பணியைச் செய்யலாம்'' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/up-shock-22-old-gang-raped-injected-drugs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக