Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

``துரோகம் செய்துவிட்டார் குஷ்பு'' - பீட்டர் அல்போன்ஸ் காட்டம்!

2021 சட்டமன்றத் தேர்தலில், 'மு.க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவோம்' என்ற உறுதியோடு களப்பணியாற்றிவரும் தமிழகக் காங்கிரஸ் கட்சிக்கு, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் சிறு முன்னோட்டம்.இந்த நிலையில், குஷ்பு விலகல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நடப்பு அரசியல்கள் குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினேன்...

பீட்டர் அல்போன்ஸ்

''காங்கிரஸ் கட்சியில், தலைமைக்கு எதிராகப் பேசும்போக்கு அதிகரித்து வருகிறதே...?''

'' 'ஒரு கிராமத்தில் கொடியேற்றுவதாக இருந்தால்கூட, சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைவரிடம் தகவல் சொல்லிவிட்டு கட்சிப் பணி ஆற்றுங்கள்' என்றுதான் கே.எஸ்.அழகிரியே சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் போன்ற மிகப்பெரிய கட்சியில், எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அவரவர் தனிப்பட்ட கருத்துகளும் இருக்கும். அதேநேரம் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் யாருக்கும் எந்தவித முரண்பாடும் இருக்கக்கூடாது.''

''ஆனால், 'காங்கிரஸில் இருந்தபோதே, நான் பா.ஜ.க திட்டங்களை ஆதரித்திருக்கிறேன்' என்று தனது தனிப்பட்ட கருத்தை, தற்போதைய சூழலுக்கு சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறாரே குஷ்பு?''

''அந்த ஒரு வார்த்தையிலேயே, தன்னுடைய வார்த்தையை அவரே தோற்கடித்துவிட்டார். அதாவது, காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே, 'புதிய கல்விக் கொள்கை'யை அவர் ஆதரித்தபோதும்கூட 'ஏன் இப்படிப் பேசினீர்கள்' என்று அவரைக் கேள்வி கேட்காமல், பெருந்தன்மையோடு நடந்துகொண்டது காங்கிரஸ். ஆனால், கட்சி அவர்மீது வைத்திருந்த அந்த மரியாதைக்கு அவரே துரோகம் செய்துவிட்டார்.''

குஷ்பு

''குஷ்புவை பா.ஜ.க-வுக்கு அழைத்துச்சென்றவர் அவரது கணவர் சுந்தர்.சி-தான் என கோபண்ணா கருத்து தெரிவித்திருக்கிறாரே?''

''நான் அப்படிச் சொல்லத் தயாராக இல்லை. ஆனால், இன்றைக்கு பெரிய பிரபலங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆக, யாரெல்லாம் தங்களை எதிர்க்கிறார்களோ, யாருடைய வார்த்தைகளுக்கு ஊடகம் மதிப்பளிக்கிறதோ அவர்களது வாயை அடைக்கும் வேலையை பா.ஜ.க தொடர்ந்து செய்துவருகிறது என்பது என் அனுமானம்.

Also Read: `திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும்வரை விடப்போவதில்லை!’ - குஷ்பு

மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்றதும் நடிகை கங்கணா ரணாவத்துக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதேபோல் ஊடகத் துறையச் சேர்ந்த அர்னாப் கோஸ்வாமியை விவித பாரதியின் மெம்பர் ஆக்குகிறார்கள். அதேநேரம் தங்கள் வழிக்கு வராதவர்கள் என்றால், அவர்களது வீட்டுக்கு வருமான வரித்துறையை அனுப்புவார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

அண்மையில், போதைப் பொருள் பயன்படுத்தியதாக வரிசையாக நட்சத்திரங்களைக் கைது செய்கிறார்கள். ஆனாலும் இதுகுறித்து திரைத்துறையைச் சேர்ந்த மூத்த கலைஞர்களேகூட வாய் திறக்கப் பயப்படுகிறார்கள். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில், இந்த விவகாரத்தை கண்டித்துப் பேசிய ஜெயாபச்சனை, திட்டமிட்டு ட்ரோல் செய்ததையும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்!''

சூர்யா

''மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக, வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துவரும் நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரை யாரும் மிரட்டியதாகத் தெரியவில்லையே?''

''சூர்யாவின் மனைவி ஜோதிகா பேசிய எதார்த்தமான ஒரு பேச்சை எடுத்துவைத்துக்கொண்டு, பிரச்னை செய்தார்கள்; அதேபோல், அவரது தந்தை சிவகுமார் எப்போதோ பேசிய ஆன்மிக பேச்சைக்கூட திரித்துப் பேசினார்கள். ஆனாலும்கூட சூர்யா போன்று எதற்கும் பயப்படாதவர்கள் வெகுசிலரே.

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து அவர் மீது போதைப் பொருள் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்பிறகு, 'மோடி தலைமையில் மிகச்சிறந்த ஆட்சி நடைபெறுகிறது' என்று ட்வீட் போட ஆரம்பித்துவிட்டார் அவர். ஆக சூர்யா ஒரு வகை; கரண் ஜோஹர் மற்றொரு வகை''

Also Read: `ஆரோக்கிய சேது ஆப் உருவாக்கியது யார் என்று தெரியாது' - அதிர்ச்சி தரும் மத்திய மின்னணு அமைச்சகம்!

''நடிகர் ரஜினிகாந்த், இதில் எந்த வகை?''

''ரஜினிகாந்த் இதுவரை யூகமாகத்தான் இருக்கிறாரே தவிர, எதார்த்தமாக வெளிவரவில்லை. எனவே, ரஜினிகாந்தின் அரசியல் தளம் என்னவென்றே தெரியாத அளவில், யூகமாக இருக்கிறவரை அதுபற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை!''

ரஜினிகாந்த்

'' 'காவிக்குள் நான் சிக்கமாட்டேன்' என்று கூறிய ரஜினிகாந்தின் அடுத்தடுத்த நிலைப்பாடுகள் அவர் கூறிய கருத்துக்கு நேர்மாறாக இருந்ததாக சர்ச்சைகள் கிளம்பியதே?''

''இன்றைய சூழலில், மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிற திறமையான நடிகர் ரஜினிகாந்த். எந்தவிதமான அரசியல் கருத்தையும் கூறுவதற்கு அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அவரது கருத்தை ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கும் எனக்கும் சுதந்திரம் இருக்கிறது.

இந்த நிலையில், என்றைக்கு அவர் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரோ அன்றைக்குத்தான் அவரது கருத்தை விமர்சனம் செய்யக்கூடிய கடமை எனக்கு இருக்கிறது. எனவே, அந்தத் தளத்துக்கு ரஜினிகாந்த் வருகிறவரை நான் காத்திருக்கத்தான் வேண்டும். அப்படி அவர் வருவாரா அல்லது வராமலேயே இருந்துவிடுவாரா என்பதெற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!''



source https://www.vikatan.com/news/politics/congress-senior-leader-peter-alphons-speaks-about-various-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக