Ad

சனி, 31 அக்டோபர், 2020

24,000 ஸ்லோகங்கள்... லாகூர் முதல் தமிழகம்வரை ஆலயங்கள்! வால்மீகி ஜயந்தி - சில சுவாரஸ்ய தகவல்கள்!

ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவரின் அவதார தினம் இன்று. வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’ எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். மகரிஷியை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது, அந்த முனிவர், "யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?” என வினவினார். "என் குடும்பத்துக்காகத்தான்” எனப் பதில் அளித்தார் ரத்னாகர்.

வால்மீகி சிலை

"உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் குடும்பத்தினர் உனது பாவத்தில் பங்கு போட்டுக் கொள்வார்களா?” என வினவினார் மகரிஷி.

ரத்னாகர் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகர், திரும்பவும் நாரத மகரிஷியிடம் வந்து தாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி பிரார்த்தித்துக்கொண்டார்.

நாரதர், அவரை ராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால், ரத்னாகருக்கு நாரதர் கூறிய ராம மந்திரத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. எனவே, நாரதர் அருகிலிருந்த ஒரு மரத்தைக் காட்டி, அந்த மரத்தின் பெயரைக் கூறும்படிக் கேட்டார். ரத்னாகர் அந்த மரத்தின் பெயர் 'மரா' என்று கூறினார். அந்தப் பெயரையே ஜபிக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார் நாரதர். ரத்னாகரும், 'மரா, மரா' என்று தொடர்ந்து உச்சரிக்க, அதுவே ராம, ராம என்று மாறி ராமநாம ஜபமாகிவிட்டது. காலப்போக்கில் அவர் மீது புற்று வளர்ந்துவிட்டது. அதன் காரணமாக அவருக்கு 'வால்மீகி' என்ற பெயர்.

வால்மீகி என்பதற்குப் புற்றிலிருந்து தோன்றியவர் என்ற பொருள். தவம் கலைந்து புற்றிலிருந்துப் புதுப் பிறவி எடுத்ததால் இந்தப் பெயர் அவருக்குப் பொறுத்தமானது.

இவர் எழுதிய ராமாயண காவியம் 24,000 ஸ்லோகங்களையும் 7 காண்டங்களையும் உடையது.

வால்மீகி முனிவர் ராமர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த மகான். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு சிலகாலம் கழித்து அன்னை சீதா தேவியை ஸ்ரீராமர் பிரிய நேரிட்டது. அப்போது கர்ப்பமாக இருந்த தேவி சீதைக்குத் தன் ஆஸ்ரமத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்தவர் வால்மீகி முனிவர். புண்ணிய கதையான ராமனின் கதையை அப்போதுதான் அவர் எழுதினார். அதைத் தன் மாணவர்களுக்கும் லவன் - குசன் ஆகிய ராமரின் பிள்ளைகளுக்கும் போதித்தார்.

மருந்தீஸ்வரர் திருக்கோயில்

சிவனார் அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதரும் திருத்தலம் திருவான்மியூர்.`வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என வரலாறு கூறுகிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனை தரிசித்து சுயம்புலிங்கத்தைப் பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் எனும் ஊரில், பழைமை வாய்ந்த ஸ்ரீவால்மீகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் ஸ்தலவிருட்சம் எட்டி மரம்.

ஆற்காட்டையட்டி ஓடுகிறது பாலாறு. இந்த ஆற்றின் வடகரையிலும் தென்கரையிலும் உள்ள 6 தலங்களை, ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் என்பர். இவை, அகத்தியர், கெளதமர், வசிஷ்டர், காசிபர், பரத்வாஜர், வால்மீகி ஆகியோர் வழிபட்ட தலங்களாம். இவற்றில் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் எனும் ஊரில், விஷ மரக்காட்டுப் பகுதியில், வால்மீகி முனிவர் வழிபட்ட ஸ்ரீவடிவுடையம்மன் சமேத ஸ்ரீவால்மீகீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தத் தலத்தின் விருட்சம் எட்டி மரம்! ரிஷிகள் கடும் தவம் புரிந்து, அம்மையையும் அப்பனையும் மணக் கோலத்தில், கண்குளிரத் தரிசித்த இந்தத் தலங்களை, மகாசிவராத்திரி நாளில், வலம் வந்து வணங்கினால், திருக்கயிலாயத்தை வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்; பாபங்கள் நீங்கி, சாபங்கள் விலகி, நிம்மதியாக வாழலாம் என்பர்.

திருநீர்மலை

திருநீர்மலை திவ்வியதேசத்தை தரிசிக்க வந்த வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து, ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம்.

வால்மீகி முனிவருக்குப் பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் கோயில் அமைந்துள்ளது. அதில் 8 அடி உயரமும் 800 அடி எடையும் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட வால்மீகியின் திருவுருவ சிலை அமைந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வால்மீகி முனிவருக்குக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயில் 1,200 ஆண்டுகள் பழைமையானது. பாகிஸ்தானில் செயல்பாட்டில் இருக்கும் இரு கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயிலை பாகிஸ்தான் இந்து கவுன்சில் நிர்வகிக்கிறது.

இவைதவிர இந்தியா முழுவதும் பகவான் வால்மீகிக்குக் கோயில்கள் அமைந்துள்ளன.

இந்தப் புண்ணிய தினத்தில் ராமாயண ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வது புண்ணிய பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

வால்மீகி ஜயந்திக்கு பிரதம மந்திரி மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் வால்மீகி தன் காவியங்களில் வலியுறுத்தும் சமூக ஒற்றுமை, சமத்துவம், நீதி ஆகியன இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக உத்திரப்பிரதேச ஆலயங்களில் வால்மீகியின் அவதார தினம் விமர்சையாகக் கொண்டாடப்படும். தற்போது கோவிட் பரவல் காரணமாக இந்த ஆண்டு மிகவும் எளிமையாகக் கொண்டாடப்படுகிறது.



source https://www.vikatan.com/spiritual/functions/valmiki-jayanti-significance-special-day-article

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக