Ad

சனி, 31 அக்டோபர், 2020

சென்னை: இந்த வருடம் வெள்ளம் உறுதியா... உண்மை நிலவரம் என்ன?

சென்னை பெருவெள்ளம்

கடந்த 2015-ம் ஆண்டு, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தைச் சென்னை மக்கள் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள யாருமே அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். காரணம், அந்த வெள்ளம் ஏற்படுத்திச் சென்ற காயம் அப்படிப்பட்டது. அதன் வடு பல இடங்களில் இன்னும் மறையவே இல்லை. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதான் பிரதான காரணமாகக் கூறப்பட்டது. அரசுத் தரப்பில், ``தண்ணீர் திறந்துவிடப்பட்டது உண்மைதான். இல்லையென்றால், அணை மொத்தமும் உடைத்திருக்கும்'' என்று கூறப்பட்டது. அதோடு, ``ஏரியில் தண்ணீர் திறந்துவிட்டது வெள்ளத்துக்குக் காரணம் இல்லை. திறந்துவிடப்பட்ட தண்ணீரோடு பெய்த மழைநீரும் ஒன்றாகச் சேர்ந்து வெள்ளமாக மாறியது'' என்று ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டது.

சென்னை பெருவெள்ளம்

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உண்ண உணவில்லாமல், உறங்க இடமில்லாமல், உடுத்த உடையில்லாமல் அவதிப்பட்டனர். அது நடந்து முடித்த கதை. தவிர, அது குறித்து நிறைய பேசிவிட்டோம். ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழையில், சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை உட்பட பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நின்றது.

Also Read: சென்னை மழை: வெள்ளக்காடான சாலைகள்.. மூழ்கிய மைதானம்.. மிதந்த வாகனங்கள்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே இந்தநிலையென்றால், தொடர்ச்சியாக மழை பெய்தால் சென்னை என்ன ஆகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் பொருளாதாரத்தை இழந்து மிகவும் இக்கட்டான சூழலில் வாழ்ந்துவரும் சென்னை மக்களுக்கு மற்றுமொரு அபாயத்தைச் சந்திக்கும் வலிமை இல்லை. மழைக்காலம் வருவதை முன்கூட்டியே சிந்தித்து, இந்நேரம் அரசு மழைநீர் வடிகால்கள் திட்டத்தைச் செயல்படுத்தி முடித்திருக்க வேண்டும். தாமதத்துக்கு, `கொரோனா பேரிடர் காரணம்’ என்று சொல்வார்கள் அரசு அதிகாரிகள்.

சென்னை அண்ணா சாலை

ஆனால், 2015-ம் ஆண்டு ஒரு பெரும் வெள்ளத்தைச் சந்தித்த பின்னர் அது போன்று இன்னொரு நிகழ்வு தலைநகரில் நடக்கக் கூடாது என்று 12-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்கொண்ட குழுவை உருவாக்கினார்கள். வெள்ள பாதிப்பு , வெள்ளத்துக்கான காரணம் என அனைத்தும் கண்டறியப்பட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தது அந்தக் குழு. அதில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் இல்லாததும், இருக்கும் கால்வாய்களும் செயலிழந்திருப்பதும் கண்டறியப்பட்டது. செயலிழந்துள்ள கால்வாய்களைச் சீரமைக்கவும். அதோடு, சென்னையில் புதிதாக 334 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டவும் அரசுக்குப் பரிந்துரை செய்தது அந்தக் குழு. அதன்படி, 290 கோடி ரூபாய் செலவில் புதிதாக மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக 200 இடங்களிலும், அதற்குப் பின்னர் மீதமுள்ள இடங்களிலும் என 2019-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டது.

அதன்படி பார்த்தால் தற்போது சென்னை முழுவதும் புதிதாக மழைநீர் வடிகால்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் கட்டியிருந்தால், மழை பெய்தபோது அந்த வடிகால்கள் மூலம் மழைநீர் வடிந்து ஓடியிருக்கும். ஆனால், நடந்தது என்னவோ அதற்குத் தலைகீழாக. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் முடிந்திருக்க வேண்டிய பணி, தற்போதுவரை நடந்துகொண்டேயிருக்கிறது. எப்போது நிறைவடையும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சென்னை வெள்ளம்

மேலும் 2015-ம் ஆண்டு அந்தக் குழுஅளித்த அறிக்கையில் முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது, 'நீர்நிலை ஆக்கிரமிப்புகள்.’ அவைதான் வெள்ளத்துக்கான முக்கியமான காரணமாகக் கூறப்பட்டது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சி, அடிப்படையிலேயே ஒரு நீர் பிடித்தமுள்ள பகுதி. சென்னையில் மட்டும் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. ஏரிகள், குளங்கள், குட்டைகள் என எண்ணற்ற நீர்நிலைகள் இருக்கின்றன. பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீரோட்டப் பாதைகளும் உள்ளன. ஒரு நகரம் விரிவாக்கம் செய்யப்படும்போது அங்கிருக்கும் எந்த நீர்நிலையையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், சென்னையின் பெரும்பாலான விரிவாக்கம் அனைத்துமே நீர்நிலைகளின் மீதுதான் செய்யப்பட்டிருக்கின்றன. `ஹவுஸிங் போர்டு' என்ற பெயரில் நீர்நிலைகளின் மீது அரசே ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.

முன்பிருந்த சென்னை மாநகரத்தின் நீர்நிலைகளும், தற்போதிருக்கும் அதன் அளவையும் கீழே உள்ள படத்தில் காணலாம். நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் கோட்டை முன்னும் பின்னும் இழுத்தால், அன்றிருந்த நிலைமையையும், இன்றிருக்கும் நிலைமையையும் நீங்கள் காணலாம்.

வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கம் ஏரி

கொன்னூர் குளம்

கொடுங்கையூர் ஏரி

கட்டேரி

வியாசர்பாடி

பெரிய ஏரி

கொரட்டூர் ஏரியின் பரப்பளவு 900 ஏக்கருக்கும் அதிகம். தற்போது, அதில் கிட்டத்தட்ட 600 ஏக்கர் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ராமாபுரம் ஏரியின் பரப்பளவு 27 ஏக்கர். இப்போதிருப்பது ஒரு ஏக்கருக்கும் குறைவு. வில்லிவாக்கம் ஏரியின் அளவு 214 ஏக்கர். தற்போது இருப்பது 30 ஏக்கருக்கும் குறைவு. சிட்லபாக்கம் ஏரியின் பரப்பளவு 80 ஏக்கர், இப்போது இருப்பது 40 ஏக்கர். மதுரவாயல் ஏரி 120 ஏக்கர். தற்போது 25 ஏக்கர் மட்டுமே இருக்கிறது. இவை தவிர ஏரிகள் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் கட்டடங்களாக மாறியிருக்கின்றன.

ஐஐடி-யின் வெள்ள அபாய எச்சரிக்கை:

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கார்பன் வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால், 2015-ம் ஆண்டு பெய்த கனமழையைவிட அதி தீவிரமான மழை இந்த ஆண்டு பொழிய வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அதாவது 2015-ம் ஆண்டு பெய்த மழையைவிட 17.37 சதவிகிதம் மழை அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

நீர் மேலாண்மை:

பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை நம்மை ஆச்சர்யப்படுத்தும். ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று வகைப்படுத்தி நீர் மேலாண்மையைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள் அவர்கள். ஆனால், இன்று நாம் செய்வது என்ன?

புதிதாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளை உருவாக்கவில்லையென்றாலும் சரி. ஏற்கெனவே இருக்கும் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டடங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். கால்வாய்களைக் கழிவுநீர் கால்வாய்களாக மாற்றிவிட்டோம். ரசாயனக் கழிவுகளைவிட்டு நீர்நிலைகளையும், ஏரிகளையும், ஆறுகளையும் நாசம் செய்துகொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் நீர் நிலைகள்

இதற்குத் தீர்வு, சரியான நீர்நிலை மேலாண்மை மட்டுமே. மழைநீர் வடிகால்களைச் சரியாகக் கட்டி முடித்து அவற்றைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய்களைச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அது நிரம்பியதும் உபரிநீர் அதுவாகவே வடிந்து வெளியேறிவிடும். இவை அனைத்தையுமே நாம் புதிதாகச் செய்யப்போவதில்லை, ஏற்கெனவே செய்திருந்ததை மீண்டும் இன்றைய தொழில்நுட்பங்களைக் கொண்டு செயல்படுத்தப்போகிறோம். இந்த அனைத்தையும் சரியாகப் பின்பற்றினால், சென்னையில் வெள்ளமும் வராது; வறட்சியும் வராது. இது சென்னைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் பொருந்தும்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/what-is-the-real-situation-in-chennai-about-flood

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக