Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

புல்வாமா தாக்குதல்: `நாடே துக்கத்தில் இருந்தபோது..!’ - எதிர்க்கட்சிகளைச் சாடிய பிரதமர் மோடி

குஜராத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, `ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்’ என்ற பெயரில் அனுசரிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். கெவாதியாவில் அமைக்கப்பட்டிருக்கும், `ஒற்றுமையின் சிலை’ என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

பிரதமர் மோடி

அந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ததாகச் சாடினார். அவர் பேசுகையில்,``இன்று வீரர்களின் அணிவகுப்பைப் பார்க்கும்போது, எனக்கு ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. புல்வாமா தாக்குதல் குறித்த காட்சி அது. அந்தத் தாக்குதலை நாடு என்றுமே மறக்காது. தனது மகன்களின் இழப்பை நினைத்து இந்த நாடே துக்கத்தில் இருந்தபோது, சிலர் மட்டும் அதில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. புல்வாமா தாக்குதல் மூலம் அவர்கள் சுயலாபம் அடைய முயன்றனர்.

இப்போது உண்மை என்னவென்பது அண்டை நாட்டு (பாகிஸ்தான்) நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களின் (எதிர்க்கட்சிகள்) உண்மையான முகம் மக்கள் முன்னிலையில் வெளிப்பட்டிருக்கிறது’’ என்று தாக்கினார்.

புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதலின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி கடந்த பிப்ரவரியில் பேசிய காங்கிரஸின் ராகுல் காந்தி, பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே தாக்குதல் நடந்ததாக மத்திய அரசைக் குற்றம்சாட்டியிருந்தார். `புல்வாமா தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மையில் அந்தத் தாக்குதலால் அதிகம் பலனடைந்தது யார்?’ என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

Also Read: `புல்வாமா தாக்குதல்... இம்ரான் கான் அரசின் மிகப்பெரிய சாதனை!’ - பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்

இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அமைச்சர், புல்வாமா தாக்குதல் இம்ரான் கான் அரசின் மிகப்பெரிய சாதனை என்று ஒப்புதல் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், `இந்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அணிவகுப்பில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படையும் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும்நிலையில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/pm-modi-slams-opposition-parties-over-pulwama-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக