Ad

சனி, 31 அக்டோபர், 2020

அனு செய்த `சம்பவம்', அபியின் மைண்ட் வாய்ஸ்... அடுத்து என்ன? #VallamaiTharayo - Episode - 5

அனுவின் இங்கிதம் இல்லாத பேச்சு, பார்க்கும் நமக்கே எரிச்சலை ஏற்படுத்தும்போது, கெளசல்யாவின் குடும்பத்துக்கு எப்படி இருந்திருக்கும்? கெளசல்யா கோபமாகத் தன் கணவருடன் அபி வீட்டுக்கு வந்து, ``சித்தார்த் பத்தி விசாரிக்கணும்னா எங்கிட்ட கேட்டிருக்கலாம்... ஒரு ஆம்பளையைத் தனியா கூப்பிட்டு, அவரை அவமானப்படுத்தி அனுப்புறதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்? என் கணவர் என்பதால் இதைப் பிரச்னையாக்காமல் விட்டுட்டார். வேற யாராவதுன்னா என்ன நடந்திருக்கும்? அபி நல்ல பொண்ணுதான், அவ ஃபிரெண்ட் அனுதான் இப்படியெல்லாம் பண்ணிருக்கா” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அபி வருகிறாள்.

Vallamai Tharayo

``நான் என்ன நாத்தனார் மாதிரியா பழகறேன்? உனக்கு என்ன கேட்கணுமோ என்கிட்ட கேளு. எல்லாத்துக்கும் ஃபிரெண்ட்ஸ்கிட்ட கருத்து கேட்கணும்னு அவசியம் இல்லை. வீட்டிலுள்ளவர்களைவிட யாரும் நமக்கு நல்லது சொல்லிட முடியாது. அபியை யாரும் எதுவும் சொல்லாதீங்க. அவ எங்க வீட்டுப் பெண். நான் இந்த விஷயத்தை சித்தார்த்கிட்ட சொல்ல மாட்டேன். நாளைக்கு அவன் வர்றான்” என்று பரபரவெனச் சொல்லிவிட்டு, கிளம்பிச் செல்கிறாள் கெளசல்யா.

அனுவிடமும் பொற்கொடியிடமும் நடந்த விஷயங்களைச் சொல்கிறாள் அபி. இதனாலாவது கல்யாணம் நின்றால் நல்லதுதானே என்கிறாள் அனு. பொற்கொடி இதை ஆட்சேபிக்கிறாள். அப்போது கார் வரும் சத்தம் கேட்டு, சித்தார்த் வீட்டு எதிர்வீட்டு மொட்டை மாடியிலிருந்து மூவரும் எட்டிப் பார்க்கிறார்கள்.

வேட்டி, மார்பில் துண்டு, கழுத்தில் மாலையுடன் இறங்குகிறான் சித்தார்த். மூவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கோயிலுக்குப் போயிட்டுதான் வீட்டுக்கு வருவேன் என்று சித்தார்த் சொன்னதாக கெளசல்யா விளக்கம் கொடுக்கிறாள்.

``நேரே பார்த்து என்ன சொல்லணுமோ சொல்லிடு” என்கிறாள் அனு.

Vallamai Tharayo

மறுநாள் சித்தார்த்தைச் சந்திக்கிறாள் அபி. மரம், வயல், ஆடுகளின் பின்னணியில் இந்தக் காட்சி ரசனையாக இருந்தது. இருவரும் ஒரே ஊர் என்பதால் சில விஷயங்களை விசாரிக்கிறான். சிறு வயது அனுபவங்களைச் சொல்கிறான்.

``உனக்கு எங்கிட்ட ஏதாவது கேட்கணுமா? அதாவது அக்கா சொல்றதையே கேட்கிறானே, இவன் எப்படி இருப்பான்னு யோசிக்கிறீயா? எங்க அப்பா எப்படிப்பட்டவர்னு நினைக்கறே?” என்று சித்தார்த் கேட்க, `பார்த்தா நல்லவரா தெரியறார்' என்கிறாள் அபி.

``ஆனா, அவர் நல்லவர் இல்ல. எங்க அம்மாவைப் படுத்தி வைச்சார். பெண்களை மதிக்க மாட்டார். அக்காதான் எனக்கு எல்லாமே செஞ்சிருக்காங்க'' என்ற சித்தார்த் அக்காவின் கல்யாணம், அதிலிருந்த தியாகம், அதன் பிறகு அக்காவின் மீதான தன் பாசம் அதிகரித்த பின்னணியைச் சொல்கிறார். ``நீ உங்க குடும்பத்தை அட்ஜஸ்ட் பண்ற மாதிரி எங்க குடும்பத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிப்பேங்கிறதால எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இவன் மாடர்னா இல்லையேன்னு யோசிக்கிறீயா?” என்று சித்தார்த் கேட்கிறான்.

Vallamai Tharayo

``சரி, நீ ஏதாவது பேசு” என்ற சித்தார்த்திடம், ``உங்க குடும்பம் உங்களுக்காக நிறைய செஞ்சிருக்கு. கஷ்டப்பட்டிருக்கு. அதை நான் மதிக்கிறேன். அதுக்காக அவங்களை எல்லாம் நானும் மதிச்சு நடந்தால்தான் உங்க மனைவியாக முடியுமா? எனக்குன்னு ஒரு ஒபீனியன் இருக்கும்னு யோசிக்க மாட்டீங்களா?” என்று கேட்கிறாள் அபி. இல்லை… இல்லை… கேட்பதாக நினைத்துப் பார்க்கிறாள். ஆனால், ஒரு சொல்கூட வாயிலிருந்து வரவில்லை!

விமானம் சென்னைக்கு வருகிறது. சித்தார்த்திடம் இருந்து கால். ``சென்னையில் இறங்கிட்டியா?” என்ற கேள்விக்கு `ஆமாம்' என்கிற ஒற்றை வார்த்தையோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

அடுத்து என்ன என்பதை திங்கள் இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக