ரஜினி பெயரில் கடந்த சில நாள்களாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்தநிலையில், அந்த குறித்து ரஜினி இப்போது தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் விளக்கமளித்திருக்கிறார். ரஜினி பெயரில் சமூக வலைதளங்களில் சுற்றும் அந்த அறிக்கையில், ``என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்’’ என்ற தகவல் இடம்பெற்றிருந்தது.
Also Read: ரஜினி: `தாமதமாகும் அரசியல் அறிவிப்பு’ ; சமூக வலைதளங்களில் சுற்றும் கடிதம்! - பின்னணி என்ன?
மேலும், ``கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்’’ என்று ரஜினி தெரிவிப்பது போல் அந்த அறிக்கையில் தகவல் இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில், தனது பெயரில் வெளியான அறிக்கையைத் தாம் வெளியிடவில்லை என ரஜினி விளக்கமளித்திருக்கிறார். இதுதொடர்பாக ரஜினி ட்விட்டரில், ``என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/rajini-explains-over-viral-statement-shared-in-social-media
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக