Ad

புதன், 28 அக்டோபர், 2020

`தேசியத் தலைவர் பிரபாகரன் பயோபிக் எடுக்க நான் ரெடி’ - இயக்குநர் அமீர் அறிவிப்பு!

திரைத்துறையில் பயணித்துவந்தாலும், அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டில் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பவர் இயக்குநர் அமீர். தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவு, மதவாத சக்திகளுக்கு எதிர்ப்பு... எனத் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவரும் அமீரை நேரில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.

`` `தமிழக அரசியலில், ஈழ விவகாரத்தை தி.மு.க-வுக்கு எதிராக தமிழ்த் தேசியவாதிகள் திசை திருப்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

அமீர்

``வரும் 2021 தேர்தலில், வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியமும் ஆர்வமும் எல்லோருக்குமே இருக்கிறது. அதற்காக, சமூக வலைதளங்கள் வழியே அவரவர் சின்னச் சின்ன வேலைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதை இவர்கள்தான் செய்கிறார்கள் என்று யாரையும் ஆதாரபூர்வமாக என்னால் சொல்ல முடியாது.

`வரும் சட்டமன்றத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?’ என்று சின்னக் குழந்தையிடம் கேட்டால்கூட, `தி.மு.க-தான்' என்று சொல்லிவிடும் சூழல் இருக்கிறது. இந்தப் பரவலான பேச்சை வீழ்த்துகிற வேலைகளைத்தான் எதிர்க்கட்சிகள் செய்துவருகின்றன. அந்தவகையில், கடந்த 10 ஆண்டுக்காலமாக தி.மு.க-வுக்கு எதிர்நிலையில் இருக்கக்கூடியவர்கள் ஈழ விவகாரத்தைப் பயன்படுத்திக்கொள்வார்களா என்று கேட்டால், நிச்சயம் பயன்படுத்திக்கொள்வார்கள்தான்.''

``800 திரைப்பட சர்ச்சையின்போது, விஜய் சேதுபதிக்கு எதிராக வெளிப்பட்ட நாகரிகமற்ற விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``விஜய் சேதுபதி எடுத்த நிலைப்பாடு தவறு என்றால், அதைச் சுட்டிக்காட்டலாம், எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, அவரை சர்வதேசத் தீவிரவாதியாகச் சித்திரிப்பதும், மிக மோசமாக விமர்சிப்பதும் கையாலாகாத்தனம். நானும் கண்டித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்.''

விஜய் சேதுபதி

''ஈழத் தமிழர்கள் குறித்து அக்கறை காட்டுகிற அமீர், அங்கிருக்கக்கூடிய மலையகத் தமிழர்களின் பிரச்னைகள் குறித்தும் பேச வேண்டும் அல்லவா?''

``உலகமெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கான பிரச்னையும் ஒன்றாகவே இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். இலங்கையிலேயேகூட மலையகத் தமிழர்கள் - ஈழத் தமிழர்கள் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. மலையகத் தமிழராகத் தனது குடும்பம் இன்னல்களை அனுபவித்ததாகச் சொல்கிறார் முத்தையா முரளிதரன். ஒரு மனிதன் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வந்துவிட்டான் என்பதாலேயே அந்த மனிதனின் வாழ்க்கை அறம் சார்ந்த வாழ்க்கையாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

Also Read: நவம்பர் 30 வரை மீண்டும் ஊரடங்கு என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?! #VikatanPoll

இலங்கையில், இன்னும்கூட மலையகத் தமிழர்கள் தகரக் கொட்டகைகளில்தான் வாழ்ந்துவருகிறார்கள். இலங்கையில், மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அங்கேயிருக்கக்கூடிய ஈழத் தமிழர்களின் காதுகளுக்கே இன்னும் சென்றடையவில்லை. ஆக, அப்படிப்பட்ட அடித்தட்டு நிலையிலிருந்து முன்னேறிவந்த முத்தையா, தனது சாதனையை விளக்கும் படத்தில், தான் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றியும் சொல்ல வேண்டும் அல்லவா...

இலங்கையில் நிலவும் அரசியல் சூழலால் பாதிக்கப்பட்ட அவரே சொல்லாவிட்டால், வேறு யார்தான் சொல்ல முடியும்?

ஆனால், சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக அவர் எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும்விதமாக, அவர் உருவாக்கவிருந்த திரைப்படத்தின் பின்னணியிலுள்ள நுண் அரசியலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.''

முத்தையா முரளிதரன்

``1982-ல் தமிழ்நாட்டில் பிரபாகரன் கைதானபோது அவரை ஜாமீனில் மீட்டெடுத்த தகவல் மற்றும் பிரபாகரனின் குரல் குறித்த உங்களது விமர்சனம் சமூக வலைதளத்தில் சர்ச்சையானதே..?''

``தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவையொட்டி அவரது நினைவாக நான் பேசிய பேச்சு அது. அதைப் பார்த்தவர்கள், கேட்டவர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. அமீரை எந்த அரசியலுக்குள் அமிழ்த்தி வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்பதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களைத்தான் கேட்க வேண்டும்.

Also Read: `800' சர்ச்சை : முத்தையா முரளிதரன்மீது ஈழ ஆதரவாளர்களுக்கு அப்படியென்ன கோபம்?

மறைந்த ஜெ.அன்பழகன், என்னிடம் 10 வருடங்களுக்கு முன்பு சொன்னதைத்தான் நான் அன்றைக்குப் பேசியிருந்தேன். அதில் ஏதேனும் தவறு இருக்குமானால், ஒருவேளை அன்றைக்கு அவர் சொல்லியிருந்ததை நான் சரியாக உள்வாங்கவில்லை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து, ஓர் இயக்குநராக நான் பயோபிக் எடுக்க விரும்பினால், தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றைத்தான் படமாக எடுப்பேன். அந்த அளவுக்கு அவர்மீது எனக்கு மரியாதை இருக்கிறது.''

பிரபாகரன்

``பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவருகிறீர்களே... ஏன்?''

``பா.ஜ.க எனக்கு எதிரியல்ல. அந்தக் கட்சியின் சிந்தாந்தம்தான் எதிரி. சித்தாந்தத்தைத் திருத்திக்கொண்டால் அந்தக் கட்சிக்கே வாக்கு சேகரிக்கவும் நான் தயார்தான்.''

விறுவிறுப்பான இந்த நேர்காணலின் தொடர்ச்சியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்கலாம்... இணையம் வழியே பேட்டியை வாசிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/news/politics/i-am-ready-to-take-a-biopic-of-prabhakaran-says-director-ameer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக