Ad

சனி, 31 அக்டோபர், 2020

`வெற்றிவேல்' யாத்திரையின் பின்புலம்: `யுத்தம்' செய்யப்போகிறதா பா.ஜ.க?

நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்கும் பா.ஜ.க தலைவர் எல்.முருகன், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நாளான டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தையும் தொட்டுச் செல்லும் வகையில் இந்த யாத்திரையின் பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், 'இதில் பா.ஜ.க முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்' என வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை தொடர்பாக, கடந்த வாரம் பெருந்துறையில் நடந்த 12 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. 'தி.மு.க-வை மையமாகவைத்து விமர்சனங்கள் இருக்க வேண்டும். யாத்திரைப் பயணத்தின் நடுவே தி.மு.க-விலிருந்து ஏராளமானோரை பா.ஜ.க-வில் சேர்க்க வேண்டும்' என்று கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

யாத்திரையின்போது திருமாவளவனின் மனு சாஸ்திரம் தொடர்பான பேச்சை முன்வைத்து, 'இந்துப் பெண்களை இழிவுப்படுத்திவிட்டார் திருமாவளவன். தி.மு.க-வும் இதற்கு உடந்தை. அவர்களை அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தில் மானமுள்ள இந்துக்கள் கைகோக்க வேண்டும்' என்கிறரீதியில் வார்த்தைத் தீயைப் பற்றவைத்து, பெரும் யுத்தத்தையே நடத்தத் தீர்மானித்திருக்கிறதாம் முருகன் தரப்பு.

ஆனால், தமிழக பா.ஜ.க-விலேயே மூத்த தலைவர்கள் சிலரோ, "யாத்திரைகளை முன்வைத்து அரசியல் செய்துதான் பா.ஜ.க வளர்ச்சி அடைந்தது. அதை மறுப்பதற்கில்லை. 1990, செப்டம்பரில் அத்வானி முன்னெடுத்த ராமர் ரத யாத்திரையே இதற்கு உதாரணம். அதுமட்டுமல்ல... 2011-ல் காஷ்மீர் - ஸ்ரீநகரில் 'ராஷ்ட்ரிய ஏக்தா' யாத்திரையை மேற்கொள்ள முயன்ற அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் காஷ்மீர் எல்லையிலேயே தடுக்கப்பட்டு, கைதாகினர். 2017-ல் கேரளாவில் அமிஷ் ஷா தொடங்கிவைத்த 'ஜன ரக்‌ஷா' யாத்திரையில் உத்தரப்பிரதேச முதல்வர் உட்பட ஐந்து மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டார்கள்.

அதுபோன்ற யாத்திரைகளின்போது மக்களின் மத உணர்வை முன்வைத்து பிரசாரம் செய்யும் யுக்தி வடமாநிலங்களில் வேண்டுமானால் எடுபடலாம். ஆனால், தமிழகத்தில் களநிலவரமே வேறு. இங்கு மதம், கலாசாரம், மொழி, கடவுளர்கள் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, யாத்திரைகளை முன்வைத்து அரசியல் செய்வது இங்கு எடுபடாது. அந்த விஷயத்தில் மக்கள் ஏமாறமாட்டார்கள். முருகன் இதை உணர வேண்டும்" என்கிறார்கள்.

யாத்திரையை முன்வைத்துப் பேசும் அரசியல் பார்வையாளர்களோ, "ரத யாத்திரையை நிறைவு செய்ய இவர்கள் திட்டமிட்டிருக்கும் டிசம்பர் 6-ம் தேதியே பிரச்னைக்குரிய நாளாக இருக்கிறது. போதாக்குறைக்கு, 'யாத்திரையில் பா.ஜ.க-வின் முக்கியமான தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது' என்று அறிவுறுத்தியிருப்பதிலும் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் அச்சப்படுகிறோம்.

தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்து ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. கொரோனா ஊரடங்கு, வேலையிழப்பு என வாழ்வாதாரங்கள் நசிந்துபோயிருக்கும் சூழலில், அது சார்ந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல், மதத்தை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் இது போன்ற யாத்திரைகளின்போது மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்" என்றார்கள் எச்சரிக்கும் தொனியில்.

> ரெய்டு அஸ்திரம்... தூக்கம் தொலைத்த அ.தி.மு.க!

> எம்.ஜி.ஆர் அரசியல்!

> தி.மு.க-வில் பூசலைத் தீர்க்குமா பதவி மாற்றம்?

> "எவன் பார்த்த வேலைடா இது..." - கிரேட் எஸ்கேப் ரஜினி!

- இவை குறித்த விரிவான அம்சங்களுடன் கூடிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3ebDH6a > ரெய்டு... யாத்திரை... கலகம்... எஸ்கேப்... சூடாகும் ஆடுகளம்! https://bit.ly/3ebDH6a

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/politics/-the-reason-behind-tn-bjp-vel-yatra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக