Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

வேல் யாத்திரை: எம்.ஜி.ஆர் புகைப்பட சர்ச்சை... முற்றுகிறதா பா.ஜ.க Vs அ.தி.மு.க மோதல்?

நவம்பர் மாதம் 6-ம் தேதி, தமிழக பா.ஜ.க சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் 'வெற்றிவேல் யாத்திரை' நடைபெற இருக்கிறது. இந்த யாத்திரை தொடர்பாக பா.ஜ.க முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது. ''வாறாரு வாறாரு முருகன்வேல் கொண்டு'' என்ற பாடலுடன் ஆரம்பிக்கும் அந்த வீடியோவில், 'பொன்மனச்செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா'' என்ற வரி இடம்பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆரின் புகைப்படமும் பின்னணியில் வருகிறது. அதனைக் கண்ட அ.தி.மு.க தொண்டர்கள், ''எங்கள் தலைவரின் படத்தை பா.ஜ.க எப்படிப் பயன்படுத்தலாம்'' என கடும் கொந்தளிப்புக்கு ஆளாகினர். தங்களின் எதிர்ப்புக்களையும் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேசும்போது,``எம்.ஜி.ஆர் நல்லதுதான் செய்திருக்கிறார். அவரைப்போலவே மோடியும் அவரது வழியில் நல்லது செய்து கொண்டிருக்கிறார். எப்படிப் பெண்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு அதிகப்படியான ஆதரவு இருந்ததோ அதேபோல்தான் மோடிக்கும் தற்பொழுது பெண்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது'' என்று விளக்கம் அளித்தார். ஆனால், முருகனின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை என அ.தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் பேசும்போது, ``எம்.ஜி.ஆர் புகைப்படத்தைப் பயன்படுத்த முழு உரிமை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க-தான். எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சிகள் அவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது'' என்றார். ஆனாலும் பா.ஜ.க-வினர் தங்களின் கருத்தில் இருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

கடந்த ஜூன் மாத இறுதியில், புதுச்சேரி வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்மநபர்கள் காவித்துண்டு போர்த்திய விவகாரத்திலேயே, பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மிகப்பெரிய கருத்து மோதல் வெடித்தது.``எம்.ஜி.ஆர் பத்தி பேசுறதுக்கு பி.ஜே.பி காரருக்கு என்ன தகுதி இருக்கு? ஜாக்கிரதையா இருங்க. அ.தி.மு.க தொண்டர்கள் வெளிய வந்தா நீங்க (பா.ஜ.க-வினர்) நடமாட மாட்டீங்க... ஜாக்கிரதை'' என தொலைக்காட்சி விவாதத்தில் வெளிப்படையாகவே அ.தி.மு.க நிர்வாகி கோவை செல்வராஜ் எச்சரித்தார். இந்தநிலையில் தற்போது, பொன்மனச் செம்மல் எனும் வரியோடு எம்.ஜி.ஆரின் படத்தையே பயன்படுத்தியிருப்பது அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.

நாராயணன் திருப்பதி

இதுகுறித்து, பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

``எம்.ஜி.ஆர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகத்தான தலைவர். தமிழகத்தின் பொற்கால ஆட்சியைக் கொடுத்தவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மறைந்த தலைவர்கள் மக்கள் நலன் சார்ந்து செயல்பட்டிருந்தால், அவர்களின் வழி நடப்போம் என்று சொல்வதிலும் எந்தத் தவறும் இல்லை. எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தவர், பாரத ரத்னா விருது பெற்றவர். அவரைப் புகழக்கூடாது என எப்படிச் சொல்ல முடியும். மக்களிடத்தில் மிக எளிமையாக சில விஷயங்களைக் கொண்டு செல்ல அவரைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

தவிர, கொள்கைகள் அடிப்படையிலும் எம்.ஜி.ஆர் தேசியவாத சிந்தனையோடுதான் செயல்பட்டார். பா.ஜ.க எப்போதும் அவரை விமர்சித்துப் பேசியதே கிடையாது. அவரின் நூற்றாண்டு விழாவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கொண்டாடியது. அதேபோலதான், தற்போதும் எந்த அரசியல் உள்நோக்கங்களும் இல்ல்லாமல்தான் நாங்கள் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்தினோம். ஒரு கட்சியின் நிறுவனரின் புகைப்படத்தைப் போடக்கூடாது என்றால் தி.மு.க-வின் நிறுவனர் யார்?... அதனால், எங்களை எம்.ஜி.ஆர் படத்தை, பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது நியாயம் கிடையாது. நாட்டுக்காக உழைத்த தலைவர்களை ஒரு கட்சிக்குள் சுருக்கிவிடக் கூடாது'' என்றார்.

இன்று எம்.ஜி.ஆர் என்றால் நாளை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் புகைப்படத்தையும் பயன்படுத்துவீர்களா?... எனக் கேட்க, ``அண்ணாவின்மீது நாங்கள் எந்த விமர்சனங்களையும் முன்வைத்தது கிடையாது. அவர்மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது. தவிர, `அண்ணாதுரை மிகச்சிறப்பான தலைவர். அவரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும்’ என எங்கள் தலைவர் வாஜ்பாயே 2004 தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதனால், ஒத்துப்போகிற விஷயங்களில் தேவைப்பட்டால் அவரைப் பயன்படுத்துவோம். ஆனால், கருணாநிதியை எங்களால் பயன்படுத்த முடியாது. அவர் ஈ.வெ.ராவின் உண்மையான சீடனாக கடைசிவரை இருந்தார். ஈ.வெ.ராவின் மீதும், அவர் கடவுள் மறுப்பாளர் என்பதற்காக எந்த வெறுப்புமில்லை. இந்து மதத்திலேயே நாத்திகமும் ஒரு பிரிவுதான். வீரசாவர்க்கரே நாத்திகர்தான். ஆனால், ஈ.வெ.ரா கடவுளை நிந்தித்தார். அதனால், அவரையும் அவரின் உண்மையான சீடரான கருணாநிதியும் எங்களுக்கு நேரெதிரான கொள்கைகளை உடையவர்கள். அவர்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.

கோவை செல்வராஜ்

அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் இந்த விவகாரம் பேசினோம்,

''எம்.ஜி.ஆர் தனி இயக்கம் கண்டு 49 ஆண்டுகள் ஆகிறது. அ.தி.மு.க-வின் நிறுவனர், அவர் அ.தி.மு.க-வின் சொத்து. எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாட எங்களைத்தவிர யாருக்கும் உரிமை இல்லை. அவரின் புகைப்படத்தைப்போட்டு அரசியல் செய்வது மலிவான, இழிவான, முட்டாள்தனமான செயல். எங்களைத்தவிர யாருக்கும் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்தத் தகுதியும், உரிமையும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்தான் பா.ஜ.கவுக்கு உரியவர்கள்.

இல்லையென்றால், ஜெ.பி.நட்டா, அமித்ஷா போன்றவர்களின் புகைப்படத்தை பா.ஜ.க-வினர் பயன்படுத்திக்கொள்ளட்டும். ஆனால், அவர்களின் புகைப்படத்தோடு, பா.ஜ.க-வை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் புறக்கணிப்பார்கள் என பா.ஜ.க-வினர் பயப்படுகிறார்கள். அதனால்தான் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தைப் பயன்படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆரின் புகைப்படத்துடன் எங்காவது கட் அவுட் வைத்திருந்தாலோ வேறு ஏதேனும் வகையில் பயன்படுத்தினாலோ அதை அகற்ற அ.தி.மு.க தொண்டர்கள் ஒவ்வொருவரும் போராடுவோம்.

Also Read: எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு: பா.ஜ.க-வை விளாசிய அ.தி.மு.க... டிவி விவாத வில்லங்கம்!

எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் காங்கிரஸ்காரராக இருந்தாலும், பெரியாரை, அறிஞர் அண்ணாவை ஏற்று, தி.மு.க-வில் பயணித்து, அ.தி.மு.க-வை உருவாக்கி ஆட்சி புரிந்தவர். அவருக்கு மட்டுமல்ல இந்தியாவின் குடிமகன்கள் அனைவருக்கும் தேசியப்பற்று இருக்கத்தான் செய்யும். ஆனால், எம்.ஜி.ஆர் திராவிடப் பாரம்பர்யத்தில் வந்த தலைவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எம்.ஜி.ஆரை வேறுவிதமாக சித்திரிக்க முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.

அவரிடம், தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார், மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தும்போது, பா.ஜ.க-வினர் எம்.ஜி.ஆர் புகைப்படத்தைப் பயன்படுத்தக்கூடாதா எனக் கேட்டோம். ``இந்திய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர். பிரதமரின் படத்தைப் பயன்படுத்துகிறார். அதில் தவறேதும் இல்லை'' என்றார்.

கே.சி.பழனிசாமி

அடுத்ததாக இந்த விவகாரம் குறித்து, எம்ஜி.ஆரின் தீவிர விசுவாசியும் முன்னாள் எம்.பியுமான கே.சி.பழனிசாமி பேசும்போது,``தமிழ்நாட்டு அரசியல் களத்தை திராவிடம் Vs இந்துத்துவா, அதாவது பா.ஜ.க Vs தி.மு.க என மாற்றுவதே பா.ஜ.க-வினரின் திட்டம். கூடுதலாக, எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை பா.ஜ.க-வுக்கு கபளீகரம் செய்ய அவர்கள் போடும் திட்டத்தின் வெளிப்பாடுதான் இது. இப்படியொரு விஷயம் நடப்பது தெரிந்தும் மௌனிகளாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகிய இருவரும் தங்களின் சுயநலன்களுக்காக அமைதியாக இருக்கிறார்கள். ஓ.பி.ரவீந்திரநாத் மோடி படத்தைப் பயன்படுத்துகிறார் என்றால் அவர் பா.ஜ.க-வின் எம்.பியாக, பா.ஜ.க-வின் உறுப்பினராகவேதான் இருக்கிறார், செயல்படுகிறார். ஆனால், எம்.ஜி.ஆர், `என்னை ராமச்சந்திரன் என்று அழைப்பதைவிட எம்.ஜி.ஆர் என்று அழைப்பதைத்தான் நான் விரும்புகிறேன். காரணம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்தில் மத, சாதிய அடையாளங்கள் எதுவும் இல்லை' என்றவர்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி வலுவாக இருக்கும்போது, அவரின் அடையாளங்களைப் பயன்படுத்துவது என்பது பா.ஜ.க-வினரின் தோல்வியையே காட்டுகிறது. `காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம் அமைப்போம்' என்றவர்கள், அந்தக் கழகங்களில் ஒன்றின் வளர்ச்சியில் பங்கெடுத்து, மற்றொரு கழகத்தை உருவாக்கிய எம்ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்தமுடியும். மதவாத, இந்துத்துவ சிந்தாந்த்தைப் பின்பற்றும் பா.ஜ.க, சாதி, மத அடையாளங்களுக்குள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாத எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தவே முடியாது. அவரைப் பெருமைப்படுத்த விரும்பினால், மத்திய அரசின் திட்டங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டிக்கொள்ளட்டும். யாரும் அவர்களைத் தடுக்கப் போவதில்லை'' என்றார் ஆவேசமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mgr-photo-controversy-is-bjp-vs-aiadmk-clash-getting-worse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக