Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

`இதோடு நிற்கப்போவதில்லை; தாக்குதல்கள் தொடரலாம்!’ - எச்சரிக்கும் பிரான்ஸ் அமைச்சர்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒரே மாதத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த இரண்டு தீவிரவாதத் தாக்குதல்களால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒருபுறம் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் பத்திரிகையான சாரில் ஹெப்டோவில் (Charlie Hebdo) வெளிவந்த முகமது நபியின் கேலிசித்திரத்தினை மாணவர்களிடம் காட்டி சாமுவேல் பேட்டி(47) என்னும் பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தினார். இதனால், கடந்த 16-ஆம் தேதி ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 18 வயது இளைஞரால் பள்ளி அருகிலேயே தலை துண்டித்து அவர் கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் தாக்குதல்

இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியது சர்ச்சையானது. அவர், இஸ்லாம் மத உணர்வுகளப் புண்படுத்தும்படி பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டினர். இதனால், மேக்ரானுக்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல், பிரான்ஸ் தயாரிப்புப் பொருட்களை புறக்கணிப்பதன் மூலமாகவும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

மேக்ரானின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே பயங்கரவாதிகளால் பாரிஸின் நீஸ் நகரில் தேவாலயத்தில் கடந்த 29-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தகவல் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Also Read: பிரான்ஸ்: தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஆசிரியர்! - கொடூரத்துக்குக் காரணமான கேலிச் சித்திரம்

பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டமர்னின் (Gerald Damarnin) இதுகுறித்து கூறுகையில், ``ஒரே மாதத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ள இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களால், நம் நாடு தற்பொழுது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது.

பிரான்ஸ் தற்போது வெளிநாட்டு எதிரிகளோடு மட்டுமல்லாமல், உள்நாட்டு விரோதிகளோடும் போராடி வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் மேலும் நிகழ வாய்ப்புள்ளது’’ என்று எச்சரித்தார்.

பதற்றமான சூழல் நிலவி வருவதால், அந்நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீவிரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய 21 வயது தீவிரவாதி பிரஹிம் அவுஸௌவ் (Brahim Aouissaoui) வடக்கு ஆப்பிரிக்காவின் துனிசியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர், கடந்த 9-ம் தேதி இத்தாலியிலிருந்து பிரான்ஸ் வந்துள்ளார் என்பதும், அதற்கு முன்னர் கடந்த செப்டெம்பர் மாதம் 20-ம் தேதி இத்தாலி நாட்டின் தீவான லம்பேடுசாவுக்கு சென்றுள்ளார். அங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், அங்கு சில நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பிரான்ஸ் வந்தடைந்துள்ளார்.

போராட்டம்

நைஸ் நகரில் நிகழ்ந்த தாக்குதலின்போது இறந்த மூவரில், 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார். மற்ற இருவர், 55 வயதான தேவாலய ஊழியர் ஒருவர், 44 வயதான பெண்மணி ஆவர். அப்பெண்மனி இறப்பதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்னர், அருகிலிருந்த உணவகத்திற்கு தப்பிச்சென்று போலீஸாரை அழைக்கும் அவசர அலாரம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், கொலையாளியை 14 முறை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கொலையாளி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கொலையாளியுடன் தொடர்பிலிருந்த 47 வயதான ஒருவரையும் பிரான்ஸ் போலீஸார் கைது செய்து விசாரத்து வருகின்றனர்.

இது குறித்து துனிசியாவைச் சேர்ந்த காவல்துறையும் கொலையாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதே நீஸ் நகரில் பொதுமக்கள் மீது கனரக வாகனத்தை மோதச் செய்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பாரிஸில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 130 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/international/france-minister-speaks-about-nice-knife-attack-current-situation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக