கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் 22 இடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். முக்கியமாக, கோவையில் தி.மு.க மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் வீட்டிலும் ரெய்டு நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவரும் பையா கவுண்டர், 2010-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார். சமீபத்தில்தான் அவர் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
Also Read: `4 மாவட்டங்கள்; 22 இடங்கள்!’ - வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு #NowAtVikatan
கவுண்டம்பாளையம் சட்டசபைத் தொகுதி வேட்பாளர் ரேஸிலும் பையா கவுண்டர் முன்னிலை வகிக்கிறார். இதனிடையே, சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த ரெய்டில் அரசியல் நோக்கம் இருப்பதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இதுதொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்ட விளக்கத்தில், ``ஒரு கல்வி நிறுவனம், அவர்கள் சம்பந்தப்பட்ட சிவில் கான்ட்ராக்ட் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் மாணவர்களிடம் வாங்கிய கல்விக் கட்டணத்தை முழுவதுமாகக் கணக்குக் காட்டவில்லை என்ற தகவலின் அடிப்படையில்தான் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டாத ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். சில எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ரெய்டில் கணக்கில் வராத ரூ.150 கோடி பரிவர்த்தனை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தனர்.
Also Read: ரஜினி ட்வீட்... ஒரு மணி நேரத்தில், தி.மு.க-வின் `தமிழகம் மீட்போம்' அறிவிப்பு - பின்னணி என்ன?
புதன்கிழமை மதியம் 2 மணியளவில் பையா கவுண்டர் வீட்டில் தொடங்கிய ரெய்டு, நள்ளிரவு 1 மணிவரை நீடித்தது. இதையடுத்து, நேற்று காலை மீண்டும் தொடங்கிய ரெய்டு நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் ரெய்டு தொடர்ந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக ரெய்டு என்ற பெயரில் டார்ச்சர் செய்ததால், பையா கவுண்டருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க-வினர் கூறுகையில், ``அந்தக் கல்வி நிறுவனத்தை மையப்படுத்திதான் ரெய்டு என்று சொல்கின்றனர். ரெய்டில் பையா கவுண்டரிடமிருந்து இவர்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, டார்ச்சர் செய்ததால் தூக்கம், ஓய்வின்றி அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மதியம் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றனர்.
பையா கவுண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க-வினர் மற்றும் பொதுமக்கள் அந்த மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/politics/it-raid-coimbatore-dmk-official-hospitalized
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக