Ad

புதன், 28 அக்டோபர், 2020

சென்னை: கொரோனா பணியிலிருந்த மருத்துவர் மரணம்... விஸ்ரா ரிப்போர்ட்டுக்காகக் காத்திருப்பு!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பணியில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா வார்டில் ஒருவாரம் பணி செய்தால், அடுத்த வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொள்வது வழக்கம். இவர்கள் வீட்டுக்குச் செல்வதால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க தனியார் ஹோட்டல்களில் தங்கி வருகின்றனர்.

டாக்டர் லோகேஷ்குமார்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கொரோனா வார்டில் முதுநிலை மருத்துவ மாணவர் டாக்டர் லோகேஷ்குமார் (24) பணியாற்றி வந்தார். இவர், தி.நகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். கடந்த 14-ம் தேதி கொரோனா பணி முடிந்து ஹோட்டல் அறையில் தன்னைத் தனிமைப்படுத்தியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவரின் தந்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் லோகேஷ்குமார் பதிலளிக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த லோகேஷ்குமாரின் உறவினர் ஒருவர் ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் லோகேஷ்குமார் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. மாற்று சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது லோகேஷ்குமார் மயங்கிக் கிடந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், டாக்டர் லோகேஷ்குமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேனாம்பேட்டை உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் லோகேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணம்

பிரேத பரிசோதனையில் லோகேஷ்குமார், தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் லோகேஷ்குமார் இறப்புக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய அவரின் உடல்பாகங்கள் ஆய்வுக்கு (விஸ்ரா ரிப்போர்ட்டுக்காக) அனுப்பப்பட்டுள்ளன. அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே அவரின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். டாக்டர் லோகேஷ்குமார் உயிரிழந்த தகவல் அவரின் பெற்றோருக்ந்த் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சேலத்திலிருந்து சென்னை வந்தனர். மகனின் சடலத்தைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

லோகேஷ்குமார் மரணம் குறித்து பாண்டிபஜார் போலீஸார் கூறுகையில், ``சென்னையில் தங்கியிருந்த டாக்டர் லோகேஷ்குமாரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமம். இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கடந்த 14-ந் தேதி பணியில் ஈடுபட்டார். பின்னர் ஹோட்டல் அறை எண் 419-ல் அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தங்கியிருந்தார். கடந்த 25-ந் தேதி லோகேஷ் குமார் அவரது தந்தை நாகராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ்

அதன்பிறகு டாக்டர் லோகேஷ்குமாரை அவரின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், டாக்டர் லோகேஷ்குமார் பதிலளிக்கவில்லை. அதன்பிறகுதான் அவர் தங்கியிருந்த அறையில் வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அவரின் அறையில் சோதனை செய்தபோது எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. அவரின் செல்போனுக்கு வந்த போன் அழைப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். முதற்கட்ட பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் டாக்டர் லோகேஷ்குமார் தற்கொலை செய்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விஸ்ரா ரிப்போர்ட் கிடைத்தபிறகே டாக்டர் லோகேஷ் மரணத்துக்கான காரணம் தெரியவரும்'' என்றனர்.

டாக்டர் லோகேஷ்குமார் மரணம் குறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பதிவான எஃப்.ஐ.ஆரில், ஹோட்டலின் பாதுகாப்பு மேலாளர் கார்த்திக் என்பவர் புகாரளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் எஃப்ஐஆரில், ''டாக்டர் லோகேஷ்குமார் அறை எண் 419-ல் தங்கியிருந்ததார். அவரைப் போல 9 டாக்டர்கள் அன்றைய தினம் ஹோட்டலில் தங்கியிருந்தனர். 25-ம் தேதி ஹோட்டல் ஊழியர் அருணிடம் டாக்டர் லோகேஷ்குமார் உணவு வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றுவிட்டார். 26-ம் தேதி காலை அவருக்கு உணவு கொடுக்கச் சென்றபோது அவர் அதை வாங்கவில்லை. அன்றைய தினம் பிற்பகலில் வரவேற்பறையில் பணிபுரியும் ஊழியர் சாப்பாடு வேண்டுமா என்று டாக்டரிடம் கேட்டுள்ளார். அதையும் டாக்டர் லோகேஷ்குமார் வாங்க மறுத்துள்ளார்.

Also Read: சென்னை :`என் மகனிடமிருந்து தூர்நாற்றம் வருகிறது' - 3 நாள்கள் சடலத்துடன் இருந்த ஹோமியோபதி டாக்டர்!

எஃப்ஐஆர்

அன்றைய தினம் இரவு ஹரிகார்த்திக் என்பவர், தன்னை டாக்டர் லோகேஷ்குமாரின் உறவினர் என்று ஹோட்டலுக்கு போன் செய்து பேசினார். அவர் அளித்த தகவலின்பேரில்தான் டாக்டர் லோகேஷ்குமார் அறைக்குச் சென்று ஊழியர்கள் பார்த்துள்ளனர். அப்போது, மல்லாந்த நிலையில் வாயில் நுரை தள்ளியப்படி படுக்கையில் அசைவற்று டாக்டர் லோகேஷ்குமார் படுத்திருந்தார். டாக்டர் லோகேஷ்குமாரின் நண்பரும் டாக்டருமான தாமோதரன் அங்கு வந்து பரிசோதித்தபோதுதான் லோகேஷ்குமார் இறந்துவிட்டதாகக் கூறினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-medical-college-student-death-in-hotel-room-after-corona-duty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக