Ad

சனி, 31 அக்டோபர், 2020

`வேலை கிடைத்தால் உயிரைக் காணிக்கையாகத் தருகிறேன்!’ - வேண்டுதலுக்காக விபரீத முடிவெடுத்த இளைஞர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த செல்லசுவாமி என்பவரது மகன் நவின் (32). இவருக்கு சிறு வயது முதலே கடவுள் பக்தி அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் இன்ஜினீயரிங் படித்து முடித்தபின்னர் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். வங்கித் தேர்வுகளும் எழுதி வந்துள்ளார். ஆனால், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எனவே, இறைவனிடம் ஒரு வேண்டுதலை முன்வைத்துள்ளார். தனக்கு வேலை கிடைத்தால் தனது உயிரையே காணிக்கையாகத் தருவதாகவும், வேலை கிடைத்த உடன் இந்த நேர்த்தி கடனை செலுத்துவதாகவும் இறைவனிடம் வேண்டுதல் வைத்துள்ளார். இந்த வேண்டுதல் வைத்த பிறகு தொடர்ந்து வேலைக்கு முயற்சித்துள்ளார்.

அவருக்கு, வங்கி உதவி மேலாளராக சமீபத்தில் பணி கிடைத்துள்ளது. மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியில் சேர ஆணை வந்துள்ளது. இதையடுத்து கடந்த 15 நாள்களுக்கு முன்பு மும்பையில் உள்ள வங்கியில் பணிக்கும் சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்து 15 நாள்களுக்கு பின் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்திருக்கிறார். அங்கிருந்து மார்த்தாண்டம் சென்று, தனது நண்பரைப் பார்த்து பேசியிருக்கிறார். அதன்பின் தனது சகோதரருக்கு போன் செய்து, தான் ஊருக்கு வந்துள்ளதாகத் தகவல் கூறியுள்ளார். பின்னர் பேருந்தில் நாகர்கோவில் வந்துள்ளார்.

கடிதம்

பின்னர்,நாகர்கோவிலில் இருந்து புத்தேரி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்குச் சென்றுள்ளார். ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு நவீன் தனது சட்டைப் பையில் தாய், தந்தைக்குக் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள அப்பா, அம்மா நான் பலகாலம் வேலை இல்லாமல் இருந்தேன். அதனால் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே, வேலை கிடைத்தால் என் உயிரையே காணிக்கையாகத் தருவதாக இறைவனிடம் வேண்டினேன்.

Also Read: கரூர்: மூன்று குழந்தைகளுக்கும் விஷம்... தற்கொலை முயற்சி! - பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

தற்போது பல வருடங்களுக்கு பின், எனக்கு வேலை கிடைத்தது. எனவே, என் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடமே நான் செல்கிறேன். இப்படிக்கு சி.நவின்" என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அவரது சட்டைப் பையில் தனது ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் போன்றவைகளும் இருந்துள்ளன. நவீனின் உடலைமீட்ட நாகர்கோவில் ரயில்வே போலீஸார் உடலை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் முதலில் நவீனின் பெற்றோரை தொடர்புகொண்டு விபரத்தைக் கூறியபோது, அவர்கள் அதை நம்பவில்லை.

தற்கொலை செய்துகொண்ட நவின்

பின்னர் மும்பை வங்கி அலுவலகத்தைத் தொடர்புகொண்ட பெற்றோர் மகன் ஊருக்கு வந்ததை உறுதிசெய்துள்ளனர். அதன்பிறகு மகனின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். வேலை கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்யும் முடிவுக்கு வருவதையே முட்டாள்தனம் என்கிறோம். ஆனால், வேலை கிடைத்ததற்கு நேர்த்திக்கடனாக தற்கொலை செய்து உயிரை மாய்த்த இளைஞரின் விபரீத செயல் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/nagercoil-bank-official-commits-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக