Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

எம்ஜிஆரின் குரலும், கலையரசனின் வாலும், அரசியல் மாயாஜாலமும்... என்ன சொல்கிறது `குதிரைவால்' சினிமா?!

நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் இரட்டை இயக்குநர்கள். எம்ஜிஆர் மரணம், அவரின் குரலில் வரும் வசனம், கலையரசனுக்கு வால், கனவுத்தேடல் என சில நாள்களுக்கு முன் வெளியான 'குதிரைவால்' படத்தின் டீஸருக்கு செம ரெஸ்பான்ஸ். இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் என இருவரிடமும் பேசினேன்.

''ஷ்யாமும், நானும் நல்ல நண்பர்கள். ரெண்டு பேருமே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஒண்ணா படிச்சோம். படிக்கும்போதே ஒண்ணா சேர்ந்து பல வேலைப் பார்த்திருக்கோம். படிச்சு முடிச்சிட்டு, 'கல்யாண சமையல் சாதம்' படத்துல இணை இயக்குநரா இருந்தேன். ஷ்யாம் 'இனம்' படத்துக்கு எழுத்தாளர் மற்றும் உதவி இயக்குநரா இருந்தார். வேற வேற படங்கள்ல வேலைப் பார்த்திருந்தாலும் நானும், ஷ்யாமும் சினிமா பற்றி அடிக்கடி டிஸ்கஸ் பண்ணுவோம்.

குதிரைவால்

அப்படி எங்களுக்கான சினிமா எது என்கிற தேடலின் தொடக்கம்தான் 'குதிரைவால்" என மனோஜ் இன்ட்ரோ கொடுக்க ஷ்யாம் தொடர்ந்தார்.

''இந்தப் படத்துக்காக நாலு வருஷமா உழைச்சிருக்கோம். 'குதிரைவால்' படத்தின் கதை எங்கள் நண்பர் ராஜேஷ் உடையது. ராஜேஷ் எங்ககிட்ட கதை சொன்னப்போ ரொம்ப பிடிச்சிருந்தது. வித்தியாசமான முயற்சியாவும் இருக்கும்னு மனசுல பட்டுச்சு. அதனால, எங்களோட முதல் படமா 'குதிரைவால்' டிக் பண்ணிட்டோம். அரசியல் ரீதியாவும் படத்தில் பேசியிருக்கோம். மேஜிக்கல் ரியாலிச சினிமா ஜானர்ல படத்தை ஆடியன்ஸூக்கு கொடுக்கப் போறோம்" என்றார் ஷ்யாம்.

மனோஜ்

"படத்துக்கான தயாரிப்பாளர்கள் கிடைக்குறது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிச்சதுல இருந்தே பல தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொல்ல முயற்சி பண்ணிட்டு இருந்தோம். ஆனா, கிடைக்குறது சிரமமா இருந்தது. ஏன்னா, இந்தப் படம் வழக்கமான கமர்ஷியல் சினிமா பேட்டன்ல இருந்து கொஞ்சம் வேற மாதிரியிருக்கும். இப்படி போயிட்டிருந்தப்போ பா.இரஞ்சித் சார்கிட்ட கதை சொல்ல வாய்ப்பு கிடைச்சது" என்று மனோஜ் நிறுத்த 'குதிரைவால்' படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைத்த கதையை ஷ்யாம் தொடர்ந்தார்.

"இரஞ்சித் சாரின் உதவி இயக்குநர் ஜெனிக்கு கதை தெரிஞ்சிருந்தது. கதை நல்லாயிருந்ததனால இரஞ்சித்கிட்ட படம் மற்றும் எங்களைப் பற்றி சொல்லியிருக்காங்க. நான், மனோஜ், ராஜேஷ் மூணு பேரும் சேர்ந்து அவர்கிட்ட போய் கதை சொன்னோம். ரெண்டு மணி நேரம் பொறுமையா கேட்டு முடிச்சதும் படத்தைத் தயாரிக்க இரஞ்சித் சார் ஓகே சொல்லிட்டார். நண்பர் விக்னேஷ் சுந்தரேசனும் எங்களுக்கு உதவியா படத்தைத் தயாரிச்சு கொடுத்தார்" என ஷ்யாம் சொல்ல மனோஜ் தொடர்ந்தார்.

ஷ்யாம்

"படத்தோட ஹீரோயினா அஞ்சலி பாட்டில் நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. ஏன்னா, 'With You, Without You' படத்துல அஞ்சலி நடிச்சிருந்தாங்க. ஃபெஸ்டிவல் மூவிஸ்ல இதுக்கு நல்ல ரீச் கிடைச்சிருந்தது. இவங்க நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தனால அஞ்சலியை செலக்ட் பண்ணோம். ரஞ்சித் சார் படத்தோட தயாரிப்பாளரா வந்ததுனால ஈஸியா அவங்களை ரீச் பண்ணி கதை சொல்ல முடிஞ்சது. ஸ்க்ரிப்ட் கேட்டுட்டு ஆர்வமா பண்றேன்னு சொல்லிட்டாங்க. ஹீரோவா கலையரசன் நடிச்சா நல்லாயிருக்கும்னு ரஞ்சித் சார் சொன்னார். எங்களுக்கும் சரியா பட்டுச்சு. இவங்க ரெண்டு பேருமே படத்துக்குள்ள வந்ததுனாலதான் கமர்ஷியல் ஸ்கேல்ல படத்தை பண்ண முடிஞ்சது. இல்லனா, எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்" என மனோஜ் சொன்னதை ஆமோத்தித்து ஷ்யாம் தொடர்ந்தார்.

''இவங்க ரெண்டு பேரோட சேர்ந்து சேத்தன் முக்கியமான ரோல் பண்ணியிருக்கார். நடிகர் ஆனந்தசாமியும் படத்துல இருக்கார். செளமியாங்குற அறிமுக நடிகையும் நடிச்சிருக்காங்க. படத்தோட 80 சதவிகித ஷூட்டிங் சென்னையில நடத்தியிருக்கோம். முழு படத்தையும் ரஞ்சித் சார் பார்த்துட்டார். சாரோட ரியாக்‌ஷன் என்னனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருந்தோம். படம் பார்த்துட்டு 'ரொம்ப நல்லாயிருக்கு... மகிழ்ச்சி'னு பாராட்டினார். படத்தோட கான்செப்ட் புரிஞ்சிக்கிட்டு சப்போர்ட்டா இருந்தார். மேஜிக்கல் ரியலிசத்தின் மேல ரஞ்சித் சார்க்கும் நிறைய ஆர்வம் இருந்தது. படத்துல அரசியல் கொஞ்சம் மறைஞ்சு இருக்கும்'' என்ற ஷ்யாமை தொடர்ந்து மனோஜ் படத்தின் ஒன்லைனை சொன்னார்.

அஞ்சலி பாட்டில்
அஞ்சலி பாட்டில்

"ஒரு பாமரனுக்கு வால் முளைக்குது. இதனால, அவன் என்னனெல்லாம் பண்றான் இதுதான் ஒன்லைன். இந்த ஒன்லைன் கேட்டுட்டு எல்லாரும் சிரிப்பாங்க. ஆனா, இந்த சிரிப்பை தாண்டி படத்துல சுவாரஸ்யமான விஷயமிருக்கு. படத்தோட தேடல் ஆடியன்ஸூக்கு கண்டிப்பா பிடிக்கும். படத்தோட மேக்கிங்காக எங்க டீம் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். VFX வேலைகளுக்கு நிறைய நேரம் எடுத்தது. கலையரசனுக்கு ஒரு முழு சீனையும் ஒரு டேக்ல நடிக்க வேண்டியிருக்கும். அவர் ரொம்ப சூப்பரா பண்ணியிருக்கார்.

மேஜிக்கல் சிஸ்டம் வேலையை சரியா திரையில காட்டணும்ங்குறதுக்காக பெரிய உழைப்பை கொடுத்திருக்கோம். கேமராவுக்குப் பின்னாடி செய்ய வேண்டிய வேலைகள் அதிகமா இருந்தது. காலையில 9 மணிக்கு கலையரசன் செட்டுக்கு வந்திடுவார். ஆனா, அவருக்கான ஷாட் எடுக்குறப்போ சாயங்கலாம் 6 மணி ஆகிடும். அதுவரைக்கும் எல்லாத்தையும் சரியா கவனிச்சுட்டு இருப்பார்" என்றார் மனோஜ்.

கலையரசன்

"ரொம்ப வித்தியாசமா பண்ணியிருக்கோம். தனித்துவமான படமா தெரியும். படத்தை எல்லா மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்கணும்னு ஆசைப்படுறோம். படத்தை ஃபெஸ்ட்டிவலுக்கு அனுப்பிட்டு இருக்கோம். கோவா மற்றும் மாவி ஃபெஸ்ட்டிவலுக்கு படத்தை அனுப்பியிருந்தோம். சினிமால இருக்குற பெரிய ஆட்கள் எல்லாருமே மாவி ஃபெஸ்ட்டிவலுக்கு வர்ற படத்தைத் தவறாம பார்த்திருவாங்க. இந்த லிஸ்ட்டில எங்க படமும் செலக்ட் ஆகியிருக்கு. இதுவே எங்களுக்கு பெரிய சந்தோஷம்'' என்றனர் இரட்டை இயக்குநர்கள் மனோஜ் மற்றும் ஷ்யாம்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-manoj-and-shyam-talks-about-their-magical-realism-movie-kuthiraivaal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக