Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

ரஜினி ட்வீட்... ஒரு மணி நேரத்தில், தி.மு.க-வின் `தமிழகம் மீட்போம்' அறிவிப்பு - பின்னணி என்ன?

`ஊடகத்தில் பரவிவரும் அறிக்கை என்னுடையது அல்ல; ஆனால், தகவல்கள் உண்மையே’ என்று ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பது ஒருபுறம் என்றால், `அரசியலில் இறங்குவதற்கு முன்பாக, ஆழம் பார்க்கிறார் ரஜினிகாந்த்' என்றொரு தகவல் ரஜினிகாந்த்தின் நெருக்கமான வட்டாரத்திலிருந்து படபடக்க ஆரம்பித்திருக்கிறது.

`ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா....’ என்ற கால் நூற்றாண்டு கேள்விக்கு, இன்னும் தெளிவான விடை கிடைக்காமல் அவரது ரசிகர்கள் குழம்பித் தவித்துவருகிறார்கள். 2017-ம் ஆண்டு, `நான் அரசியலுக்கு வருவது உறுதி; போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ரஜினிகாந்த். ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் அவரிடமிருந்து அரசியல் குறித்தான சமிக்ஞைகள் எதுவும் தென்படவில்லை.

ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு

இந்தநிலையில், கொரோனா ஊரடங்குக்கு முன்பாக, திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், `மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகே நான் அரசியலுக்கு வருவேன். அப்போதும் முதல்வர் வேட்பாளர் நான் அல்ல' என்ற குழப்பமான பதிலைத் தந்தார். ஆறு மாத ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பிவரும் இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது உடல் நலம் குறித்து கடந்த சில நாள்களாக சமூக ஊடகம் வழியே பரவிய செய்தி பரபரப்பை ஏற்படுத்திவந்தது.

அதில், `கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களைச் சந்தித்து அரசியலில் ஈடுபடுவதை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும்' என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், ரஜினிகாந்த் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையல்ல என்பதால், கூடவே பல்வேறு யூகங்களும் படபடத்தன. அதாவது, அரசியலில் ரஜினிகாந்த் வருகையை விரும்பாத எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே இப்படியொரு பொய்ச் செய்தியை ஊடகம் வழியே கசியவிடுகின்றனர் என்பதுதான் அது.

இந்தநிலையில்தான் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த அறிக்கை குறித்து பதிவிட்ட ரஜினிகாந்த், `என் அறிக்கைபோல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டுவருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`அறிக்கை என்னுடையது அல்ல; அதே சமயம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவத் தகவல்கள் உண்மை' என்ற அவரது பதிவு, பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவத் தகவல்கள் அனைத்தும் உண்மையானவைதான் என்றால், நிச்சயம் ரஜினிகாந்த் தரப்பிலிருந்தேதான் இப்படியோர் அறிக்கை தயாராகியிருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த அறிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிடாமல், ஊடகம் வழியே கசியவிட்டது ஏன் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.

ரஜினிகாந்த்

இந்தநிலையில், ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தென்மாவட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஃப்ரான்சிஸ் பாஸ்டியன், இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``சாதாரணமாக ஒரு திரைப்படத்தை மக்களிடையே விளம்பரப்படுத்த வேண்டுமென்றால்கூட, ட்ரெய்லர், டீசர் என்று பரபரப்பை ஏற்படுத்தியாக வேண்டும். ரஜினிகாந்த், அரசியலில் கால் பதிக்கிறார் என்றால் அதற்கான தகுந்த சூழல் இருக்கிறதா, மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதையெல்லாம் கணிக்க வேண்டியது முக்கியம் அல்லவா...

கடந்த முறை செய்தியாளர்களைச் சந்தித்தபோதே, `ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எழுச்சி மக்களிடையே வரும்போதுதான் நான் அரசியலுக்கு வருவேன். அப்படியொரு ஆற்றல்மிகு மாற்றம் மக்களிடையே வர வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த். அதாவது `மாற்றத்துக்கான ஆற்றல் வேண்டும்' என்று சொல்லாமல், `ஆற்றல்மிகு மாற்றம் வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அந்தவகையில், மக்களிடையே ஆற்றல்மிகு மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் ரஜினிகாந்த். அதற்காக தற்போதைய அரசியல் மாற்றங்களை மிகவும் ஆழமாக கவனித்தும்வருகிறார்.

Also Read: `இந்தியாவுக்கு அஞ்சியே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்!’- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்.பி ஒப்புதல்

எனவே, நிச்சயம் அரசியலுக்கு வருவார் ரஜினிகாந்த். தனது அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாகத்தான் இப்படியொரு ட்விட்டர் பதிவை ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கிறார் என்றே பார்க்க வேண்டும்'' என்கிறார் நம்பிக்கையாக.

ரஜினிகாந்த்

இதற்கிடையே, அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமியிடம், ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பதிவு குறித்து கருத்து கேட்டோம். ``2021 சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதிப்பது நல்லதல்ல. ஏனெனில், அரசியலில் அவருக்கான எதிரிகள் அதிகம். எனவே, இப்போதே களத்தில் இறங்கி தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் அறிவித்துவிட்டாரென்றால், அவரது அரசியல் எதிரிகள் ஒன்றிணைவதற்கான காலத்தையும் வாய்ப்பையும் அவரே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாக அமைந்துவிடும்.

Also Read: மதுரை: `எனது அரசியல் பார்வை தவறாகாது; தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு!’ - திவாகரன்

மாறாக, தேர்தல் நெருக்கத்தில் அதிரடியாக அவர் வந்தால், அது ரஜினியை மையப்படுத்திய தேர்தலாக, 75% செய்திகள் ரஜினிகாந்தைப் பற்றியதாகவே மாறி அவருக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். இப்போதே அவர் தன் முடிவை அறிவித்துவிட்டால், அது அவரது வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிடும். அதனால்தான் `2021-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த் அரசியல் களத்துக்குள் வந்தால் போதும்' என ரஜினிகாந்த்துக்கும் முன்னதாகவே என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்'' என்கிறார்.

இதற்கிடையே, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டங்களை `தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க நடத்தவிருப்பதாக தி.மு.க தரப்பு அறிவித்திருக்கிறது. ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு அரசியல் அரங்கில் ஏற்படுத்தியிருக்கும் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே தி.மு.க தரப்பிலிருந்து சட்டமன்றத் தேர்தல் பொதுக்கூட்ட அறிவிப்பு வெளியாகியிருப்பதை அரசியல் ஆர்வலர்கள் இணைத்துப் பார்த்து, கதைக்க ஆரம்பித்துவிட்டனர். அதாவது, `தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச செய்திகளின் தாக்கத்தை மட்டுப்படுத்தும்விதமாகவே தி.மு.க தரப்பிலிருந்து `தமிழகம் மீட்போம்' குறித்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது' என்பதே அரசியல் ஆர்வலர்களின் கணிப்பு.

ரவீந்திரன் துரைசாமி - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``நீங்கள் நினைப்பது போன்ற அரசியல் பின்னணி எதுவும் இல்லை. ஏற்கெனவே தி.மு.க நிர்வாகிகளோடு மண்டலவாரியாக ஆய்வுக் கூட்டத்தை நடத்திவந்தார் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு மாவட்டவாரியாக கூட்டம் நடந்து முடிந்ததுமே `தமிழகம் மீட்போம் பொதுக் கூட்டத்தை உங்கள் மாவட்டத்தில் எப்போது வைத்துக்கொள்ளலாம்' என்று நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டே வந்தார். அந்த வகையில், ஆய்வுக் கூட்டங்கள் அனைத்தையும் நேற்றோடு நடத்தி முடித்துவிட்டோம்.

ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவு வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில், தி.மு.க இப்படியோர் அறிவிப்பை வெளியிடுவதால் இவையிரண்டுக்கும் இடையே அரசியல் தொடர்பு இருக்கிறதா என்று யோசிப்பதே நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. ஏனெனில், ஒரு மணி நேரத்தில் மாவட்டவாரியாக பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான அனுமதி மற்றும் ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட முடியுமா என்ன?'' என்றார் லாஜிக்கலாக.



source https://www.vikatan.com/news/politics/background-details-about-rajinis-tweet-and-dmks-election-campaign-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக