Ad

புதன், 28 அக்டோபர், 2020

`பிளாஸ்மா சிகிச்சை பயனில்லை' எனச் சொல்லும் ஐசிஎம்ஆர்... தொடரும் ராதாகிருஷ்ணன்... ஏன்?

கொரோனா தீவிரமாகப் பரவத் தொடங்கிய மார்ச்-ஏப்ரல் மாத காலகட்டத்தில் `பிளாஸ்மா தெரபி' கொரோனாவுக்கான முக்கியமானதொரு சிகிச்சை முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) பரிந்துரையின் அடிப்படையில், முதன்முதலாக பிளாஸ்மா தெரபி வழங்கப்பட்டது. இதன் பிறகு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Blood

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை கடந்த மே மாதத்தில், பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்குத் திடீரென தற்காலிகத் தடை விதித்தது. மருத்துவர்கள் அதைச் சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. பின்னர் மருத்துவர்களின் வேண்டுகோள் மற்றும் பிளாஸ்மா தெரபி குறித்த மருத்துவ விளக்கங்களின் பேரில் இந்தத் தடை நீக்கப்பட்டு பிளாஸ்மா தெரபிக்கு முழுவதுமாக அனுமதி வழங்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சையை மத்திய அரசே பரிந்துரை செய்தது.

இதன் பின்னர், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்பட்டு வந்தது. கொரோனாவிலிருந்து மீண்ட பலரும் பிளாஸ்மா தெரபிக்காகத் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்தனர்.

இந்நிலையில், ஐசிஎம்ஆர், இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனை ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டது. அதில் `கொரோனாவால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க பிளாஸ்மா தெரபி எதிர்பார்த்த அளவுக்குப் பயனளிக்கவில்லை' எனக் கூறப்பட்டிருந்தது.

Samples to test for COVID-19

இந்தச் சிகிச்சை முறையை முதன்முதலில் பரிந்துரை செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமே `பிளாஸ்மா தெரபி பலனளிக்காது' என்று கூறிய பின்னர், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்படுமா என்றொரு சந்தேகம் மக்களிடையே எழுந்தது. இந்நிலையில், இது குறித்துப் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ``ஏதோ சில ஆய்வுக் கட்டுரைகளை நம்பி எந்த முடிவும் எடுக்க முடியாது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் இதுவரை தமிழகத்தில் பெரும்பாலானோர் குணமாகியுள்ளனர். இந்தச் சிகிச்சை எதிர்பார்த்த அளவுக்குப் பயனளிக்கவில்லை என்றுதான் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மேலும், இந்தப் பரிசோதனையைத் தொடர்வதற்கான அனுமதியையும் வழங்கியிருக்கிறது. எனவே, தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" எனக் கூறியிருந்தார்.

Also Read: கொரோனா குணமான பின்பும் உடல்நிலை மோசமடைவது ஏன்? `போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம்' அலெர்ட்

இந்த சிகிச்சை முறை குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில், ஐசிஎம்ஆர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தியாவில் இதுகுறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதற்காக, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம்வரை இந்திய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட 464 கொரோனா நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில், 239 பேருக்கு 24 மணி நேர இடைவெளியில் தலா 200 மில்லி லிட்டர் வீதம் இரண்டு முறை பிளாஸ்மா செலுத்தப்பட்டது. ஆனால், மீதமுள்ள 225 பேருக்கு பிளாஸ்மா செலுத்தாமல் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதம் கழிந்த பிறகு, பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களில் 44 பேருக்கு நோய் தீவிரமாகாமல் குறைந்திருந்தது. பிளாஸ்மா செலுத்தப்படாதவர்களில், 41 பேருக்கு நோயின் தீவிரம் தடுக்கப்பட்டிருந்தது.

Plasma treatment

பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படாதவர்களோடு ஒப்பிடும்போது பிளாஸ்மா செலுத்தப்பட்டவர்களின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் தென்படாததால், `கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா தெரபியால் பெரிதாக எந்தப் பயனும் இல்லை' என்று தற்போது மீண்டும் அறிவித்துள்ளது ஐசிஎம்ஆர்.

ஐசிஎம்ஆரின் ஆராய்ச்சி முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். தமிழகத்தில் தொடர்ந்து பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இது குறித்துப் பேசினோம்.

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

``மற்ற மருத்துவ நிறுவனங்கள்போல் ஐசிஎம்ஆரும் ஒரு மருத்துவ நிறுவனமே. அது வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகளை வைத்துக்கொண்டு மட்டும், கொரோனாவுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் ஒரு சிகிச்சையை நிறுத்த முடியாது. கடந்த எட்டு மாதங்களில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் பிளாஸ்மா தெரபியால் முழுவதுமாகக் குணமடைந்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனாவுக்கான சிகிச்சை குறித்து முடிவெடுக்க மருத்துவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான சிகிச்சை முறை தேவைப்படும். நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி தேவைப்படும் பட்சத்தில் அதை வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். தவிர, தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு எந்தவித தடையும் அறிவிக்கப்படாது" என்றார் அவர்.

ஐசிஎம்ஆரின், `கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா தெரபி பலனளிக்காது' என்ற ஆய்வு முடிவு குறித்து ஐசிஎம்ஆரின் முன்னாள் விஞ்ஞானி மாரியப்பனிடம் கேட்டோம்.

விஞ்ஞானி மாரியப்பன்

``ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவரின் ரத்தத்தில் உருவாகியிருக்கும் ஆன்டிபாடிகள், பிளாஸ்மா மூலம் சிகிச்சை தரப்படும் நோயாளிக்கு மாற்றப்படும்போது அந்த நோயிலிருந்து அவர் விரைவில் குணமடைய அதிக வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில்தான் ஆரம்பத்தில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஐசிஎம்ஆர்தான் கேரளாவைச் சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவருக்கு முதன்முதலாக இதைப் பரிந்துரை செய்தது. தற்போது ஐசிஎம்ஆரே இது பலனளிக்காது என்று கூறுவதற்கு காரணம் ஆய்வின் வழியே அதற்குக் கிடைத்திருக்கும் முடிவுகளே. கொரோனா குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுபோல் பிளாஸ்மா தெரபி குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவின் பெரும்பான்மையைக் கொண்டே `கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா தெரபி பலனளிக்காது' என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. தவிர, இந்தச் சிகிச்சையை விமர்சித்துக் குறைகூற எதுவும் இல்லை. பிளாஸ்மா தெரபியில் பலர் குணமடைந்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. தேவைப்படுவோருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை" என்றார் விஞ்ஞானி மாரியப்பன்.



source https://www.vikatan.com/health/healthy/j-radhakrishnan-speaks-about-icmr-study-on-plasma-therapy-and-why-tn-still-continues-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக