Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

`பண்டைய பழங்குடி சமூகத்திலிருந்து முதல் மாணவி!' - CLAT தேர்வை வென்று அசத்திய ராதிகா

காட்டுயிர்களும் பழங்குடிகளும் இயைந்து வாழும் கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்தவர் 17 வயதான ராதிகா. வயநாட்டின் கல்லூர்குன்னு காட்டு நாயக்கர் கிராமத்தில் வாழ்ந்துவரும் ராதிகாவின் தந்தை கரியன், தினக்கூலித் தொழிலாளி. தாய் பிந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் தொழிலாளி.

தாய் பிந்து மற்றும் உறவினர்களுடன் ராதிகா

காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியின் மூத்த மகளான ராதிகா வறுமையான சூழலில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தாலும், கல்வி ஒன்றையே நம்பிக்கையாகக் கொண்டிருந்தார்.

ஆசிரியர் மற்றும் சட்ட வழிகாட்டிகள் சிலரின் உதவியுடன், மனம் தளராத நம்பிக்கையில் பயின்று இன்று, தேசிய சட்ட சேர்க்கை தேர்வில் (CLAT - Common Law Admission Test) வெற்றிபெற்று, நாட்டிலேயே இந்தத் தேர்வில் வெற்றிபெறும் தங்கள் இனத்தின் முதல் நபர் என்ற சாதனையை தன்வசமாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள 22 சட்டப் பல்கலைக்கழக அட்மிஷனுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு இது.

இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா, "என் வழிகாட்டி ஆசிரியர் வினீதா சொல்லித்தான் இந்தத் தேர்வில் நான் சாதித்தது எனக்குத் தெரிந்தது. சட்ட ஆலோசகர்களின் அறிவுரையால் எனக்கு சட்டத்தின் மீது விருப்பம் ஏற்பட்டது. எனது கல்வி இந்தச் சமூகத்துக்குப் பயனளிக்க வேண்டும். ஒதுக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்வேன். இந்த வெற்றி எனக்கு ஓர் அடித்தளமாக அமையும் என நம்புகிறேன். பலரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். என் அம்மா பிந்து மிகவும் பக்கபலமாக இருந்தார்" என்றார்.

தேர்வில் வெற்றி பெற்ற ராதிகா

வயநாடு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட (ஐ.டி.டி.பி) அதிகாரி செரியன், "ஒதுக்கப்படும் பிரிவு மக்களை சமூகத்தின் மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வயநாட்டில் ஒன்பது பண்டைய பழங்குடி மாணவ, மாணவிகளுக்கு மூன்று மாதப் பயிற்சி அளித்தோம். ஆறு மாணவிகள் தேர்வெழுதினர். இதில் ராதிகா மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்" என்றார்.



source https://www.vikatan.com/latest-news/wayanad-student-radhika-cleared-clat-as-a-first-student-from-her-community

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக