‘பிக்பாஸ் என்பது மனித உணர்வுகளை பகடையாக வைத்து ஆடப்படும் ஒரு சூதாட்டம்’. இந்த அடிப்படையான விஷயத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள்தான் இந்த விளையாட்டிற்குள் தாக்குப் பிடிக்க முடியும்.
மாறாக எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்களுக்கு இந்த விளையாட்டு லாயக்கில்லை. உள்ளே நுழைவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும். ஆனானப்பட்ட சுரேஷையே அழ வைத்த விளையாட்டு இது. (அதாவது அது அவரது உத்தியாக இல்லாத பட்சத்தில்). எனில் அனிதா போன்ற எளிதான டார்க்கெட்டுகள் பிக்பாஸிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இவரைப் போன்றவர்களின் பலவீனங்களை சுலபமாக வெளியே கொண்டுவந்து விடுவார்கள்.
இன்றைக்கு அனிதாதான் பிக்பாஸின் பெரிய டார்கெட்டாக அமைந்தார்.
என்ன நடந்தது?
‘என்னது சாம்பார்ல பெருச்சாளி இருக்கா... பரவாயில்ல, ரசத்தை ஊத்து... அதுல என்ன இருக்குன்னு பார்த்துடுவோம்’ என்கிற காமெடியாக, வீட்டில் என்ன குடுமிப்பிடி சண்டை நடந்தாலும் காலையில் ஜாலியான பாட்டை போடத் தவற மாட்டார் பிக்பாஸ். ‘பொன்மகள் வந்தாள்...’ என்கிற பாட்டு ஒலித்தது. (புதிய போட்டியாளர் எவரேனும் வருகிறார்களோ?).
மக்கள் நேற்றைய ‘சிறப்பு நிகழ்ச்சி’ களைப்பில் ஸ்லோ மோஷனில் ஆடினார்கள். சாவி கொடுத்த சைனா பொம்மை போல் உலுக்கி உலுக்கி தினமும் ஆடும் அனிதாவிடம் வழக்கமான உற்சாகம் இன்று இல்லை.
கிச்சன் ஏரியாவில் ரியோவும் ஆரியும் பேசிக் கொண்டிருந்தார்கள். “எனக்கு மூடு இல்லை... மத்தியானம் சமையல் செய்யறேன்னு அனிதா சொல்லிட்டாங்க. நேத்து நிகழ்ச்சில பங்கேற்க முடியலை. ஆங்கரா மட்டும் நிற்க வேண்டியிருந்ததுன்னு அவங்களுக்கு வருத்தமாம். இவ்வளவு ஸ்பேஸ் கிடைச்சும் ‘ஸ்பேஸ் இல்லைன்னே’ சொல்லிட்டே இருக்காங்க... காலைல இருந்து மூஞ்சி சரியில்லை என்று ஆரி சொல்ல, “அந்தம்மாவை பிக்பாஸா மாத்தி உக்கார வெச்சா கூட ஏதாவது அனத்திட்டுதான் இருப்பாங்க. ஆளை விடு” என்பது போல் டென்ஷன் ஆனார் ரியோ.
அனிதாவின் பிரச்னைதான் என்ன?
"சுரேஷ் என் மன்னிப்பைக் கேட்காம ஏன் ஓடணும்?” என்று கேட்கும் அதே அனிதாதான் இன்னொரு சமயத்தில், “சுரேஷ் சார் பத்தில்லாம் எனக்கு கவலை இல்லை. வீடு பத்திதான் என் கவலை” என்கிறார்.
"இப்பவும் நான் சொன்ன கருத்தில் ஸ்ட்ராங்காகத்தான் நிற்கிறேன்” என்று சொல்லும் அனிதா அது உண்மையென்றால் மற்றவர்களின் எதிர்வினைக்காக இப்படி கவலைப்படத் தேவையில்லை.
“யாரும் என்னை சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறீங்க...” என்று அனிதா புலம்புவது நிச்சயம் ஓவர் ஆக்ட். பாலாஜி, சனம் உள்ளிட்டவர்கள் நேரடியாக பேசி ஆதரவு தந்தார்கள். ஷிவானி, சம்யுக்தா உள்ளிட்டவர்கள் ‘அனிதா பேசியதில் தவறில்லை’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அனிதாவின் சார்பில் சுரேஷிடம் பஞ்சாயத்து செய்ய நிறைய நேரத்தை செலவிட்டார் ரியோ.
இத்தனை பேரின் அக்கறையையும் கரிசனத்தையும் ஒரே வார்த்தையில் தூக்கியெறிவதின் மூலம் அனிதா அத்தனை பேரையும் அவமானப்படுத்துகிறார். ரியோவிற்கு நியாயமான கோபம் வருவதும் இதனால்தான்.
"அவர் பேரைச் சொன்னதை தப்புன்னு எங்கிட்ட வந்து சொல்றீங்க...” என்று அனத்தும் அனிதாவிற்கு இதுதான் பிரச்னை போல. சுரேஷிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தனக்கு அளிக்கப்படவில்லையே என்பதுதான் அனிதாவின் உண்மையான பிரச்னையாக தெரிகிறது. எனவேதான் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு வெளியில் கேட்பது போல் சத்தமாக அழுது கொண்டிருந்தார். (தனிமையில் அழுபவர்கள் யாரும் பொதுவாக இப்படிச் செய்ய மாட்டார்கள்).
பாவம்… ஆரி. 'உன் நல்லதுக்குத்தான் சொல்றோம்’ என்று ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு அட்வைஸ் செய்தவரின் முகத்தில் அடுத்த நிமிடத்திலேயே கரியைப் பூசினார் அனிதா.
அனிதா தன்னுடைய வீட்டை நினைத்து உண்மையிலேயே கவலைப்படுகிறவர் என்றால் இப்படியெல்லாம் தொடர்ந்து அழுது தனது குடும்ப உறுப்பினர்களை பதற்றத்திலும் துயரத்திலும் ஆழ்த்த மாட்டார். அது மட்டுமல்லாமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டு கதறி அழுது பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களையும் ‘என்னாச்சோ’ என்று பதற்றப்படுத்துவது நிச்சயம் மோசமான விஷயம்.
சுரேஷ் செய்யும் அதே கவனஈர்ப்பு உத்தியை அனிதாவும் இப்போது தன்னிச்சையாக செய்கிறார் என்று யூகிக்கத் தோன்றுகிறது. “எனக்கு சப்போர்ட் செய்து என்னை ஏன் பாசிட்டிவா ஆக்க மாட்டேங்கிறீங்க?” என்று மற்றவர்களின் மீது தொடர்ச்சியாக புகார் சொல்லும் அனிதாவைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. இதற்காகவா மற்றவர்கள் வந்திருக்கிறார்கள்? வீட்டில் தான் போஷிக்கப்படும் அதே சொகுசை பிக்பாஸ் வீட்டிலும் அனிதா எதிர்பார்ப்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை.
புதைகுழியில் தவறி விழுந்து விட்டவர்கள், யாராவது காப்பாற்ற வரும் வரை, அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்தால் பிழைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகம். மாறாக, தன் முயற்சியின் மூலம் அதிகம் அசைந்தால் புதைகுழியால் உள்ளே இன்னமும் ஆழமாக இழுக்கப்படுவதுதான் நேரும்.
அனிதாவின் நிலைமையும் இதுதான். ‘தன் இமேஜ் பாழாகக்கூடாது’ என்று கவலைப்படும் அனிதா அதற்கு எதிரான அத்தனை வேலைகளையும் செய்து தன் நிலைமையை இன்னும் எத்தனை மோசமாக்க முடியுமோ அத்தனையையும் செய்கிறார். சமூகவலைத்தளங்களில் அனிதாவை கடந்த சீஸன் ‘ஜூலியோடு’ ஒப்பிடத் தொடங்கி விட்டார்கள்.
தானும் அதிகம் புலம்பி குழம்பி, அதன் மூலம் மற்றவர்களையும் அதிகம் குழப்பி பதற்றத்திலேயே வைத்திருக்கும் அனிதா போன்ற எமோஷனல்வாதிகளை கையாள்வது மிகச்சிரமம்.
“நீங்க நீங்களா இருங்க... ரம்யாவைப் பார்த்தாவது கத்துக்கங்க” என்று கமல் சொன்ன tip எல்லாம் வேஸ்ட். ‘நான் frank-ஆ இருக்கறதுதான் பிரச்னை... டிப்ளமஸியா நடிக்கணும் போல’ என்றெல்லாம் அனத்தி சுற்றியுள்ளோரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் அனிதா.
இன்னொரு பக்கம் சுரேஷூம் இந்தப் பிரச்னையின் மைலேஜை விடுவதாக இல்லை. "அந்தப் பொண்ணுகிட்ட பேசறதுக்கே பயமா இருக்குடா... ஏற்கெனவே ரெண்டு மூணு முறை பிரச்னையாயிடுச்சு... ஸாரி சொல்ல வந்து இன்னமும் அதிகமாயிடுச்சின்னா... நான் என்ன பண்றது” என்று பாலாவிடம் சொல்லி ஒதுங்கிக் கொண்டார் சுரேஷ்.
கன்ஃபெஷன் அறைக்குள் சென்றவுடன்தான் அனிதாவின் முகத்தில் சற்று புன்னகை வந்தது. (ஹே... பிக்பாஸே என்னை கூப்பிட்டுட்டார்!) நடந்த அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த பிக்பாஸ், ஒன்றுமே தெரியாதது போல், ‘என்னம்மா ஆச்சு?’ என்று கேட்டதும் மறுபடியும் அதே அனத்தல் தொடர்ந்தது. ‘வீட்டில் உள்ளவர்கள் உங்களை விசாரித்தார்கள்’ என்று பிக்பாஸ் ஒரு தகவலை சொல்லியவுடன் மகிழ்ச்சியடைந்த அனிதா, அடுத்த கணமே உடைந்து குழந்தைபோல் தேம்பி அழுதார்.
(அனிதாவை ஆறுதல்படுத்துவதற்காக பிக்பாஸ் சொன்னதுதான் என்றாலும் தம்பதிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் அந்தரங்கமான கொஞ்சல் வார்த்தைகளை பிக்பாஸ் பொதுவில் குறிப்பிட்டிருக்க வேண்டாம் அல்லது எடிட் செய்திருக்கலாம்). ஒரு பக்கம் அனிதாவின் மீது விமர்சனங்களுடன் கூடிய எரிச்சல் வந்தாலும் இன்னொரு பக்கம் அவரைப் பார்க்க பரிதாபமாகவே இருந்தது.
ஒரு போட்டிக்குள் வந்துவிட்ட பிறகு அதைப் பற்றி மட்டும் பிரதானமாக யோசிக்காமல், "வீட்ல என்ன சொல்வாங்க. கணவர் என்கூட இல்லையே... மக்கள் என்னல்லாம் நினைப்பாங்க... என் இமேஜ் என்னவாகும்” என்று யோசித்துக் கொண்டேயிருந்தால் பாயைப் பிறாண்ட வேண்டியதுதான்.
‘இவர்களை விட்டால் இந்தப் பஞ்சாயத்தை இன்று முழுவதும் இழுப்பார்கள்போல’ என்று நினைத்த பிக்பாஸ், ‘இவர்களுக்கு ஏதாவது வேலை தருவோம்’ என்கிற நோக்கில் ‘தங்கச் சுரங்கம்’ என்கிற டாஸ்க் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
அலார்ம் சத்தம் கேட்டதும் நான்கு பேர் கிளம்பி தங்கச் சுரங்கத்திற்குள் சென்று ஒவ்வொருவரும் இயன்ற வரையில் அதிக அளவிலான தங்கத்தைச் சேமிக்க வேண்டும். யார் அதிக அளவில் சேமித்திருக்கிறார்களோ அவர்களுக்கு அதிக பலன் கிடைக்குமாம்.
முதல் அலார்ம் அடித்தது. பிக்பாஸ் தந்திருந்த உபகரணங்களைத் தாண்டி துணியையும் எடுத்துச் சென்றார் பாலா. இதைப் பார்த்த சனம் “ரூல்ஸ்ல இதெல்லாம் இல்லை” என்று பலமாக ஆட்சேபிக்க... அதை அலட்சியமாக உதறி விட்டு உள்ளே சென்றார் பாலா. (ஆனால் இதே சனம்தான் ‘நாடா காடா’ டாஸ்க்கில் ‘அப்படில்லாம் ரூல்ஸ் இருக்கா... என்ன?’’ என்று ஷிவானியிடம் மல்லுக்கட்டினார்).
பாலா அணி திரும்பி வந்ததும் சனத்தின் ஆட்சேபம் பற்றிய பஞ்சாயத்து வெடித்தது. "எனக்கு கருத்து இருந்தா நான் சொல்லுவேன்... என்ன இப்ப?” என்று சனம் எகிற "அதை பிக்பாஸ் சொல்லட்டும்... எல்லாத்திலும் நீ மூக்கை நுழைக்காத. உன்னால எனக்கு அஞ்சு செகண்ட் டைம் வேஸ்ட் ஆச்சு” என்று பாலாவும் பதிலுக்கு எகிறினார். (குஷி படத்தோட கதை மாதிரியே ஆயிடுச்சு).
இதுநாள் வரை சம்யுக்தாவிற்கும் சனத்திற்கும் இடையில் விரோதப் புகை அமுங்கிதான் இருந்தது. இன்று வெடித்தே விட்டது. பாலாவின் பிழையை முதலில் சுட்டிக் காட்டிய சனம், இப்போது அதை விடவும் பெரிய தட்டுக்களை எடுத்துச் செல்ல “எங்களை தப்பு சொல்லிட்டு நீ மட்டும் இப்ப அதை காப்பி பண்றே. நீயும் எங்களை மாதிரி ஒரு போட்டியாளர்தான். எப்பவும் ஏதாவது நொய்... நொய்...ன்னு சொல்லிட்டே இருக்கணுமா..? நீ செஞ்சா கரெக்ட்டு... மத்தவங்க செஞ்சா தப்பா?" என்றெல்லாம் சனத்திடம் பொங்கித் தள்ளிவிட்டார் சம்யுக்தா. இதுவரை அமைதிப்புறாவாக இருந்த சாம், ஆங்ரி பேர்டாக மாறின நாள் இன்று.
“சனம் எது சொன்னா என்ன... அது அவங்க உத்தியாகவும் இருக்கலாம். நீ பாட்டுக்கு உன் கேமை ஆட வேண்டியதுதானே” என்று பாலாஜிக்கு ரம்யாவும் கேப்ரியல்லாவும் பிறகு அறிவுரை சொன்னார்கள்.
முதலில் சென்ற அணிக்கு அதிக அளவில் தங்கம் கிடைக்க பின்னால் வந்தவர்களுக்கு குறைவாகவே கிடைத்தது.
அடுத்ததாக ஒரே சமயத்தில் பதினாறு பேரும் செல்லலாம் என்று ஆட்டத்தில் சூட்டை அதிகப்படுத்தினார் பிக்பாஸ். லாரி குடிநீர் வந்ததும் மக்கள் வீட்டில் இருக்கிற பாத்திரங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு பரபரப்பாக ஓடுவது போல் பிக்பாஸ் வீட்டு மக்களும் கையில் கிடைத்த டப்பாக்களையெல்லாம் தங்கம் அள்ள கொண்டு சென்றார்கள். அவர்களுக்கிடையே போட்டியும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
மனித குலம் நாகரிக வளர்ச்சியை நோக்கி நகர்ந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டன என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் நெருக்கடியான சமயங்களில் நம்முள் உறைந்திருக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் தன்னிச்சையாக வெளியே வருவதைக் கவனிக்கலாம். உதாரணத்திற்கு பேருந்தில் இடம் பிடிக்க ஓடுவது. அதுவரை கனவான்களாக அமர்ந்து பெருந்தன்மையாக பேசிக் கொண்டிருந்தவர்கள், அதற்கான நேரம் வந்ததும் சுயநலமும் பேராசையும் உந்தித்தள்ள, தனது இரையை நோக்கி பாயும் மூர்க்கமான விலங்கைப் போல பாய்வார்கள்.
தங்கச் சுரங்க விளையாட்டிலும் இதுதான் நடந்தது. இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்தி போட்டியாளர்களுக்குள் மோதல் விடுவதுதான் பிக்பாஸின் நோக்கமும்.
நடைமுறையில் எவ்வித உபயோகமும் இல்லாத தங்கம் என்கிற உலோகத்திற்கு எப்படி இத்தனை மதிப்பு வந்தது என்று பார்த்தால் அதற்குப் பின்னால் பெரிய வரலாறே இருக்கிறது. தங்க வேட்டை தொடர்பாக எத்தனையோ மனிதர்கள் இறந்து போயிருக்கிறார்கள். என்றாலும் மனித குலத்திற்கு தங்கத்தின் மீதான மோகம் குறையவில்லை.
பாலாஜி தனது சேகரிப்புகளை பந்தாவுடன் பொதுவில் கொட்டி எண்ணிக் கொண்டிருக்க, அதைப் பிடுங்கலாமா என்கிற தயக்கத்துடன் வந்தார் ரமேஷ். ‘அண்ணே... வேண்டாம்னே... நான் இன்னமும் அசிங்கமா விளையாடுவேன்’ என்று பாலாஜி எச்சரித்தவுடன் விலகிப் போய் விட்டார். இதன் நடுவில் ஷிவானியும் இரண்டு துண்டுகளை எடுத்துக் கொள்ள ‘கொடுத்துடு’ என்று அதையும் திரும்ப வாங்கிக் கொண்டார் பாலா.
‘கொடுத்துதான் ஆகணுமா?’ என்கிற சிணுங்கலுடன் ஷிவானி ஒரு பார்வையைப் பார்க்க, அதற்கு சற்றும் மயங்காமல் ‘அப்புறம் பார்க்கலாம்... இப்ப கொடு” என்ற பாலாஜியின் ஜாக்கிரதைத்தனத்தைப் பாராட்ட வேண்டும். “அடப்பாவி.. பொம்மைக்கு வண்ணம் பூசும் போது ரொமாண்ட்டிக் பாட்டெல்லாம் பாடிவிட்டு இப்போ என் மூஞ்சுல கரியைப் பூசிட்டானே...” என்பது ஷிவானியின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்க வேண்டும்.
அனிதாவிற்கு அட்வைஸ் செய்தே ஓய்ந்து போன ‘ஆரி’ தூக்கத்தில் அயர்ந்து விட அவரிடமிருந்த தங்கப்பையை சுட்டு விட்டார் சுரேஷ். ‘எனக்கும் தாங்க’ என்று பின்னாலேயே சென்று பங்கு கேட்டார் ஆஜித். “பாலாஜி நிச்சயம் திருடுவான். திருடர்களை குறை சொல்லாதே... நீ ஜாக்கிரதையா இரு” என்று முன்பு சுரேஷ் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ததின் காரணம் இப்போதுதான் புரிகிறது. அது அவரோட மைண்ட் வாய்ஸ் போல.
தூங்கி எழுந்து வந்த ஆரி "என் கோல்டை யார் எடுத்தாங்க” என்று கேட்டவுடன் ஷிவானி போட்டுக் கொடுத்து விட்டார்.
அடுத்த பஞ்சாயத்து ‘வீடு பெருக்குதல்’ மூலமாக வந்தது. ஒருவரின் வீம்பினால் ஒரு சண்டை எப்படி மெலிதாக வளர்ந்து அதிகம் பெருகுகிறது என்பதற்கான உதாரணம் இது.
வீடு பெருக்கும் அணியில் இருந்த பாலா, குறிப்பிட்ட நேரத்தில் தனது டீமுடன் சேர்ந்து அதைச் செய்யாமல் உறங்கிக் (?!) கொண்டிருக்க, “நேத்தும் பெருக்கலை. இன்னிக்காவது பெருக்கணுமே?” என்று கேப்டன் பொறுப்பில் இருந்த அர்ச்சனா கேள்வி கேட்டு பாலாவை எழுப்ப முயல அது தோல்வியில் முடிந்தது.
“வேல்முருகன்தானே... ஹவுஸ் கீப்பிங் கேப்டன்... அவர்கிட்ட சொல்லுங்க” என்று ரியோவும் ரமேஷூம் ஐடியா கொடுக்க அதைப் பின்பற்றினார் அர்ச்சனா. "அய்யோ... ஏற்கெனவே இவனுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு இருக்கே... ஆளு வேற தண்டியா இருக்கானே” என்கிற அச்சத்தை மறைத்துக் கொண்டு ‘பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட் வீக்’ மோடில் சென்ற வேல்முருகன், பாலாவை எழுப்ப முயல அவரோ அசராமல் தூங்கினார் அல்லது அது போன்ற பாவனையை செய்து கொண்டிருந்தார்.
பாலாஜியின் அக்கறையின்மையைப் பற்றி அர்ச்சனா கமெண்ட் அடிக்க அந்தச் சமயத்தில் சரியாக எழுந்து வந்தார் பாலா. பிறகு நடந்தது அந்த சூடான வாக்குவாதம். உண்மையில் இது அர்ச்சனாவிற்கும் பாலாவிற்கும் இடையிலான சண்டை மட்டுமே. இந்த கிராஸ் ஃ.பயரில் மாட்டிக் கொண்ட அப்பாவி பலியாடுகள் என்று வேல்முருகனையும் ஆஜித்தையும் சொல்லலாம்.
அவ்வை சண்முகி படத்தில் ஒரு காட்சி வரும். “சண்முகி மாமி வெளியே போயிருக்காங்கோ” என்று மணிவண்ணன் சொல்ல, “அது தெரியுமே” என்று கமல் சொல்ல, எப்படித் தெரியும்?’ என்று மணிவண்ணன் கேட்க, “இப்ப நீங்கதானே சொன்னீங்க..” என்று இடக்கு மடக்காக பேசி மணிவண்ணனை குழப்பிவிடுவார் கமல்.
பாலாவிற்கு இந்த உத்தி நன்றாக வருகிறது. “தூங்கினவங்களை ஏன் எழுப்பினீங்க?” என்று கேட்டு விட்டு ‘அதான் எழுந்து பதில் சொல்லிட்டேனே’ என்று பிளேட்டை திருப்பி திருப்பி போட்டு அவர் பேச வேல்முருகன் திகைத்து நின்றுவிட்டார். தன் அணியின் கேப்டனாக நின்று பேசவேண்டும் என்கிற துடிப்பு வேல்முருகனிடம் இருக்கிறது. அதே சமயத்தில் பாலாஜியின் விதண்டாவாதத்தை எதிர்கொள்ளும் திராணியும் அவரிடம் இல்லை. இரண்டிற்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
"எழுந்து எட்டிப் பார்க்க மட்டும் தெரியுதா” என்கிற அர்ச்சனாவின் கமெண்ட் பாலாஜியை உசுப்பிவிட “கேப்டன்னா கொம்பா முளைச்சிருக்கு..? நான் அடுத்து கேப்டன் ஆனா. எல்லோரையும் அம்மி ஆட்ட வைப்பேன்” என்று அவர் சொன்னது அர்ச்சனா குறித்துதான்.
ஆனால் பொதுப்படையாக சொல்லப்பட்ட அந்த கமெண்ட் ரியோவை கோபப்படுத்தியதில் ஆச்சர்யமில்லை. “என்னா பிரதர்... வீட்டு நடுவுல நின்னு இப்படிப் பேசறீங்க?” என்று ரியோ எகிற ஆரம்பிக்க அவரிடமும் அவ்வை சண்முகி டெக்னிக்கை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார் பாலா.
“எனக்கு உடம்பு முடியலைன்னு சொல்லிட்டு போய் நீங்க படுத்திருந்தா உங்களை யாரு எழுப்பியிருக்கப் போறாங்க?” என்கிற ரியோவின் கேள்வி நியாயமானது. “தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எழுப்ப முடியாது” என்கிற அர்ச்சனாவின் டயலாக் மிகச் சரியானது. அந்த அளவிற்கு வீண் விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தார் பாலா.
ஒருவர் சொன்ன உரையாடலை இன்னொருவர் மேற்கோள் காட்டும்போது எப்படி அதில் தன்னுடைய கருத்தையும் சேர்த்துக் கொள்கிறார் என்பதற்கு பிறகு வந்த ரியோவின் கமெண்ட் உதாரணம். “'பொம்பளைங்களை அம்மி அரைக்க விடுவேன்’ ன்னு பாலா சொல்றாரு” என்கிற புகாரை பொதுவில் வைத்தார் ரியோ. அம்மி அரைப்பது என்றால் அது பெண்கள் வேலை என்கிற ஆண் பொதுப்புத்தியின் வெளிப்பாடு இது.
“நான் பொம்பளைங்கன்னு சொல்லலை... எல்லோரையும்னுதான் சொன்னேன்" என்று பிறகு வந்த பாலா விளக்கம் அளிக்க "இது தப்புங்க பாலா” என்று ‘அவர்ர்ர்... இவர்ர்ர்’ என்கிற பன்மைக்கு மாறினார் ரியோ. ‘வெச்சுக்கங்க” என்று ஜூஸ் குடித்துக் கொண்டே கூலாக பாலா சொல்ல, ரியோ முணுமுணுத்தபடி சூடானார்.
இந்தப் பஞ்சாயத்தை இன்னமும் கொஞ்சம் எடுத்து நாளைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிக்பாஸ் நினைத்தாரோ என்னமோ... ‘இந்த பிக்பாஸ் வீடு பல உணர்வுகளைக் கண்டிருக்கிறது’ என்கிற பாவனையான வாய்ஸ் ஓவருடன் மங்களம் பாடினார்.
ஆக... இந்தப் பிரச்னையை வைத்து நாளைக்கும் ‘பெருக்குவார்கள்’ போலிருக்கிறது.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/balaji-creates-tremors-bigg-boss-tamil-season-4-day-23-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக