Ad

புதன், 28 அக்டோபர், 2020

ரஜினியுடன் ராம மோகன ராவ் முதல் பா.ஜ.க-வில் வனிதா விஜயகுமார் வரை! கழுகார் அப்டேட்ஸ்

கடந்த வாரம் உளவுத்துறை ஒரு சர்வே ரிப்போர்ட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்திருக்கிறது. அதில், `சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் அ.தி.மு.க வெற்றிபெற முடியும்’ என்று கூறியிருக்கிறதாம். முதல்வர் பின்னாலேயே எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் கைகளுக்கும் அந்த சர்வே கிடைத்திருக்கிறது. அதில், அந்த எம்.எல்.ஏ-வுக்கு அவரது தொகுதியில் டெபாசிட் கிடைப்பதுகூட கஷ்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

அ.தி.மு.க

`அடுத்த முறையும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தால், எப்படியும் அமைச்சராகிவிடலாம்’ என்ற எண்ணத்திலிருந்த அந்த எம்.எல்.ஏ., ரிப்போர்ட்டைப் பார்த்தவுடன் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். `உங்களுக்கு ஒண்ணுமில்லை சார். வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க. மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காதீங்க’ என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

சத்திய சோதனை!

ரஜினியுடன் கைகுலுக்கத் தயாராகிவிட்டாராம் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்.

ராம மோகன ராவ்

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு `ஆர்.எம்.ஆர் பாசறை’ என்ற அமைப்பைத் தொடங்கிய ராம மோகன ராவ், பல்வேறு சமூகங்களையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்துவந்தார். `தமிழகத்தில் 55 சதவிகித சாதியினர் அரசியல் அதிகாரமில்லாமல் இருக்கிறார்கள்.

ரஜினி

அவர்களுக்கு வரும் தேர்தலில் உரிய அங்கீகாரம் வாங்கித்தருவதுதான் எனது லட்சியம்’ என்று கூறிவரும் ராம மோகன ராவ், சாதிவாரியான புள்ளிவிவரங்களை ரஜினியிடமும் கூறியிருக்கிறாராம்.

அவரு முதல்ல அரசியலுக்கு வரட்டும்!

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம், வீடியோ கான்ஃபரன்ஸில் நடைபெற்றது. அனைத்துத் துறை உயர் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனனின் காட்டமான பேச்சு, அதிகாரிகளை அதிர்ச்சியில் உறையவைத்துவிட்டது.

வீரசேனன்

``அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்ல ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் விவசாயிகள்ட்ட லஞ்சமா வாங்குறாங்க. இப்போ மட்டுமில்ல... கஜா புயல் அடிச்சு டெல்டாவே நிலைகுலைஞ்சு கிடந்த நேரம்... திருச்சியிலிருந்து ஆய்வுக்கு வந்த அதிகாரிங்க சிலர், பட்டுக்கோட்டையில உட்கார்ந்துக்கிட்டு, அதிராம்பட்டினத்துல ஃபேமஸான ஒரு கடையிலயிருந்து பிரியாணி வாங்கிக்கிட்டு வரச் சொன்னாங்க. லோக்கல் அதிகாரிங்க எங்ககிட்ட லஞ்சம் வாங்குற காசுலதான் பிரியாணி வாங்கித் தந்திருப்பாங்க. ஆய்வுக்கு வரக்கூடிய அதிகாரிகள் தயவுசெஞ்சு தங்களோட சொந்தக் காசுல சோறு தின்னப் பழகுங்க” என வெளுத்துவாங்கவும், அனைத்துத்துறை அதிகாரிகளும் `கப்சிப்’ என அமைதியாகிவிட்டனர்.

குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்காதா பின்னே?

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளில், குன்னூர் தொகுதியை மட்டுமே அ.தி.மு.க வென்றது. இந்தத் தேர்தலில் நீலகிரியிலுள்ள அனைத்துத் தொகுதிகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில் அ.தி.மு.க-வினர்‌ காய்நகர்த்திவருகின்றனர்.

ஊட்டி பேருந்து நிலையம்

ஊட்டி தொகுதியின் வேட்பாளராகத் தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு, தேர்தல் வேலைகளை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் வினோத் தொடங்கிவிட்டார். இன்னொரு பக்கம் எதிர்முகாமிலோ, ``அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டுமானால், இந்த முறை‌ ஊட்டி தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுக்காமல், தி.மு.க-வே போட்டியிட வேண்டும்’’ என்று அறிவாலயத்துக்குத் தந்தி அடித்துக்கொண்டிருக்கின்றனர் உடன்பிறப்புகள். இதை மீறி காங்கிரஸுக்கு ஊட்டி தொகுதியை ஒதுக்கினால், உள்ளடி வேலைக்கும் தயாராகிறார்களாம் உடன்பிறப்புகள். இந்தச் சலசலப்பில் குஷியாகியிருக்கிறது அ.தி.மு.க கூடாரம்.

ஊட்டி மலைப் போட்டி... யாருக்கெல்லாம் கிழியப்போகுது வேட்டி!

அரசு தேர்வாணயத்தால் நடத்தப்பட்ட துணை வட்டாட்சியர் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்றுவிட்டதாக, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கு போலியான கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இத்துடன், `10 லட்சம் ரூபாயுடன் உடனே வந்தால் பணியில் சேருவதற்கான ஆணையைப் பெற்றுச் செல்லலாம்’ எனக் கடிதம் அனுப்பப்பட்டவர்களுக்கு ஒரு கும்பல் தூண்டில் போட்டிருக்கிறது.

அதிர்ச்சியளிக்கும் ஊழல் பட்டியல்

இதை உண்மையென்று நம்பிய சிலர், பணத்தைக் கொடுத்து பணி நியமன உத்தரவைப் பெற்றிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் தொடர்புகொண்டபோதுதான், அது போலியான உத்தரவு என்பது அவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த மாவட்ட நிர்வாகம், சத்தமில்லாமல் பஞ்சாயத்துப் பேசி அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, பறிகொடுத்தவர்களிடம் அளித்துவிட்டதாம்.

அப்போ ஆக்‌ஷன் எதுவுமில்லையா ஆபீஸர்ஸ்?

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகராட்சியில், கடவுள் பெயர்கொண்ட அதிகாரியொருவர் பணியாற்றுகிறார். `கையில காசு... வாயில தோசை’ என்பதே அவரது தாரக மந்திரமாம். இடைத்தரகர்களை அருகில் நெருங்கவிடாமல், வீட்டு வரி முதல் கட்டட அனுமதி வரை எல்லாவற்றிலும் நேரடி டீலிங்தான் என்கிறார்கள். இந்தநிலையில், மாவட்ட எம்.எல்.ஏ ஒருவரின் தொகுதி வளர்ச்சி நிதி மூலமாக நகராட்சிப் பணிகளுக்குப் பெரும் நிதி வந்திருக்கிறது. பணிக்கான டெண்டரை எம்.எல்.ஏ-வின் ஆதரவாளருக்கு ஒதுக்காமல், மாவட்டச் செயலாளர் பரிந்துரைத்த ஒருவருக்கு ஒதுக்கியிருக்கிறார் அந்த அதிகாரி.

Also Read: ரஜினிக்கொரு நீதி... நாற்காலியை எடைக்குப் போட்ட தி.மு.க எம்.எல்.ஏ..! கழுகார் அப்டேட்ஸ்

சும்மா விடுவாரா எம்.எல்.ஏ? ஆத்திரமடைந்தவர், ஆட்சி மேலிடத்துக்கு அதிகாரி பற்றிய புகார்களைத் தட்டிவிட, எதிர்முனையிலிருக்கும் மலைக்கு தூக்கியடிக்கப்பட்டார் அதிகாரி. ஒரே வாரம்தான்... கட்ட வேண்டிய கப்பத்தை தலைமையிடத்துக்கே சென்று கட்டிய அந்த அதிகாரி, பணியிட மாறுதலை ரத்துசெய்ய வைத்துவிட்டு, மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிட்டார். அதிகாரியின் வல்லமையைப் பார்த்து ஆளும்கட்சிப் புள்ளிகளே மிரண்டுபோயிருக்கிறார்கள்.

`தண்ணியில்லா காட்டுக்கே தண்ணி காட்டிய அதிகாரி’னு சொல்லுங்க!

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் நடிகை வனிதா விஜயகுமார், விரைவில் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகச் சுற்றும் தகவல்தான் அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கிறது. யாராக இருந்தாலும் துணிச்சலாக எதிர்த்து சவுண்ட் கொடுப்பதில் வனிதா கில்லாடி என்பதால், அவரை எப்படியும் கட்சிக்குள் கொண்டுவர அசைன்மென்ட் கொடுத்திருக்கிறதாம் கமலாலயம். இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். `நாம 100 பேர் கத்தினாலும் ஒரு பய கேட்க மாட்டான்.

வனிதா விஜயகுமார்

வனிதா ஒரு சவுண்ட் விட்டா ரணகளம் ஆகிடும். உதயநிதி ஸ்டாலினை மேடைக்கு மேடை வறுத்தெடுக்க வனிதாவைக் களமிறக்கலாம்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் மாநில துணைத் தலைவர்கள் சிலர் ஆலோசனை வழங்கினார்களாம். இதன் அடிப்படையில்தான், வனிதாவை வளைக்க பா.ஜ.க முட்டிமோதுகிறதாம்.

வசைபாடும் அணிக்கு தலைவியா நியமிப்பாங்களோ!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்றவர் சின்னப்பன். இதே தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க சீட் கொடுக்காத கோபத்தில், கட்சியைவிட்டு விலகி தி.மு.க-வில் இணைந்தவர் மார்கண்டேயன். இதனால், இருவருக்குமிடையே எப்போதும் முட்டல் மோதல்தான்! அண்மையில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தி.மு.க கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்தினார் மார்கண்டேயன். சின்னப்பன் தரப்பினரும் அதே பகுதியில் போட்டியாக அ.தி.மு.க கொடியை ஏற்ற முயல, `அனுமதி பெறாமல் கொடியேற்றக் கூடாது’ எனக் கூறி போலீஸார் தடுத்துவிட்டனர்.

சின்னப்பன்

உடனே, போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டபடியே தன் ஆதரவாளர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டார் எம்.எல்.ஏ-வான சின்னப்பன். `ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டு போலீஸை எதிர்த்து இப்படி ரோட்டுல உட்காரலாமா?’ என்று எம்.எல்.ஏ சின்னப்பனின் ஆதரவாளர்களே புலம்புகிறார்கள்.

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!



source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-on-rajini-bjp-targets-vanitha-and-other-recent-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக