Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

கோலியின் நோக்கு வர்மம்... ஆனா, இது சூர்யா சார்... உரசாதீங்க! #MIvRCB

நேற்று அபுதாபியில் நடந்த 2020 ஐபிஎல்-ன் 48வது போட்டியில், செம சண்டை. இந்த சீசனின் பலம் வாய்ந்த இரண்டு அணிகளாக மும்பையும் பெங்களூரும் முதல் இடத்திற்காக முட்டி மோதின. காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஹிட்மேன் விளையாடாத காரணத்தினால், பொலார்டு அணிக்கு தலைமைத் தாங்கினார். டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ், பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தது. அந்த அணியின் லெவனில் எவ்வித மாற்றமும் இல்லை. பெங்களூரு அணியில் பெரும் பாசப்போராட்டமே நடந்து, ஃபின்ச்சுக்கு பதிலாக ஃபிலிப் அணியில் இணைந்தார். கையில் ஏற்பட்ட காயத்தினால் சைனியும் அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஹேப்பி ஹிப்பி ஸ்டெய்ன் இணைந்தார். மொயின் அலிக்குப் பதிலாக உள்ளே வந்தார் ஷிவம் துபே!

#MIvRCB

ஃபிலிப்பும் படிக்கல்லும் பெங்களூரின் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீசினார் `தண்டர்' போல்ட். முதல் ஓவரின் 5-வது பந்தை, ஷார்ட் கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் படிக்கல். `படிக்கல்லுக்கு மேட்சுல அடிக்கலைன்னா தூக்கம் வராது போல' என பெங்களூர் வாசிகள் குபுக்கென சிரித்தார்கள். பூம் பூம் பும்ரா, 2-வது ஓவரை வீசவந்தார். அதில், மிட் ஆன் திசையில் ஒரு பவுண்டரியை விளாசினார் ஃபிலிப். 3-வது ஓவரை வீச க்ருணால் பாண்டியாவைக் கூட்டிவந்தார் பொலார்டு. க்ருணாலுக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை. ஆர்வமாக வந்து போட்டார். ஓவரின் 3வது பந்தை, பவுண்டரிக்கு விரட்டினார் படிக்கல். அடுத்த பந்தும், போல்ட் விட்ட கால்வாயில் பவுண்டரியில் போய் விழுந்தது.

4வது ஓவரை வீச பேட்டின்சன் வந்தார். என்ன செய்ய, மேட்ச் என வந்தால் நாலு பேர் நாலு விதமாக பந்து வீசுவார்கள்தான். முதல் பந்திலேயே, மிட் விக்கெட் திசையில் வெல்கம் பவுண்டரி அடித்தார் படிக்கல். இந்தப் பக்கம் ஃபிலிப், லாங் லெக் திசையில் ஒரு பவுண்டரியைப் போட்டார். 5-வது ஓவரை வீச, ஐந்தாவதாக ஒரு பெளலரை இறக்குவார் என பார்த்துக்கொண்டிருந்தால் மீண்டும் போல்ட்டையே கூட்டிவந்தார் பொலார்டு. ஓவரின் 2-வது பந்து, மெதுவாக பறந்து வந்தது. அதை மெதுவடை போல் நசுக்கு நசுக்கென நசுக்கி தூக்கி எறிந்தார் ஃபிலிப். சிக்ஸர்! ஓவரின் கடைசி பந்தில் இன்னொரு பவுண்டரி. பாட்டம் எட்ஜாகி, கீப்பரை கடந்துச் சென்றது.

#MIvRCB

மீண்டும் பேட்டின்சன் வந்தார். லாங் லெக்கில் ஒன்று, ஓவர் கவரில் ஒன்று என ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் படிக்கல். பவர்ப்ளேயின் முடிவில், 54/0 என வலுவான நிலையில் இருந்தது கோலியின் அணி. க்ருணால் பாண்டியா 7-வது ஓவரை வீசினார். பவுண்டரிகள் ஏதும் கிட்டவில்லை. ராகுல் சஹார், 8-வது ஓவரை வீசினார். ஷார்ட் தேர்ட் மேன் திசையில் படிக்கல் ஒரு பவுண்டரியும், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஃபிலிப் ஒரு பவுண்டரியும் அட்டகாசமாக அடித்தனர். `பாம்புக்கு பாயா ஊத்தினாலும் பாயாசம் ஊத்தினாலும் சரி. பகை பகைதான்' என வெறியான ராகுல் சாஹர், அடுத்த பந்திலேயே ஃபிலிப்பை அவுட்டாக்கினார். ஸ்டெம்பிங் செய்தார் டி காக். `வேணாம் பிலிப்ஸே...' என பெங்களூர் ரசிகர்கள் சோகமாயினர். கிங் கோலி, களத்துக்குள் வந்தார்.

9-வது ஓவரை வீசிய க்ருணால் பாண்டியா, 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 10-வது ஓவரை வீச ராகுல் படமெடுத்து வர, கூலாக 2 பவுண்டரிகளை விரட்டினார் படிக்கல். 10 ஓவர்கள் முடிவில் 88/1 என நல்ல நிலையில் இருந்தது பெங்களூர். க்ருணால் தனது கடைசி ஓவரை வீசிவிட்டுப் போக வந்தார். அதன் கடைசிப்பந்தில், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியைக் குத்திவிட்டு, தனது அரைசதத்தை நிறைவு செய்தார் படிக்கல். இட் இஸ் படிக்கல் மிராக்கிள்!

ரொம்ப நேரமாக பிட்சில் பந்தைத் தேடிக்கொண்டிருந்த கோலி, பும்ரா வீசிய 12-வது ஓவரில் கண்டுபிடித்து அடித்து, திவாரியிடம் கேட்ச் ஆனார். பும்ரா வீசிய அரைக்குழி பந்தில், கோலியின் இன்னிங்ஸ் அரைகுறையாக முடிந்தது. இங்கிட்டு டி வில்லியர்ஸ் வந்தார். அங்கிட்டு சஹார் வந்தார். 13வது ஓவரில், வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். படிக்கல்லின் விக்கெட்டைத் தூக்க பேட்டின்சன் வந்தார். கடைசியில், பேட்டின்சன் பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் தூக்கினார் டி வில்லியர்ஸ்.

சஹார் மீண்டும் வந்தார். டமாரென எதிர்பாராத நேரத்தில் சிக்ஸரைக் கொளுத்திவிட்டார் படிக்கல். மும்பை ரசிகர்களின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. அடுத்த பந்தை, ஷார்ட் தேர்ட் மேன் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். அதற்கடுத்த பந்தும், கவரில் நின்றுக்கொண்டிருந்த க்ருணால் மிஸ் ஃபீல்ட் செய்த காரணத்தினால் பவுண்டரிக்கு விரைந்தது. 16 ரன்களைக் கொடுத்துவிட்டு அமைதியாக கிளம்பினார் ராகுல் சஹார். படிக்கல்லின் பேட்டிங்கைக் கண்டு ஆறாத சினம் கொண்ட பொலார்டு, ஆறாவது பெளலராக பந்துவீச வந்தார். அவர் பொதுவாக விரித்த வலையில் டி வில்லியர்ஸின் விக்கெட் மாட்டியது. அடிப்பதற்கென்றே அளவெடுத்து செய்தது போன்ற ஒரு ஃபுல் டாஸ். அதை நங்கென அடித்து டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார் டி வில்லியர்ஸ். அதன்பிறகு, ஆர்சிபி-யின் இன்னிங்ஸ் சரியத்துவங்கியது!

17வது ஓவரை வீசவந்தார் பூம்பூம் பும்ரா. 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்துக்கொண்டிருந்த துபேவை கருணை விக்கெட் எடுத்தார். அதே ஓவரில், படிக்கல்லின் இன்னிங்ஸுக்கும் தடைக்கல்லாக விழுந்தார். 45 பந்துகளில் 74 ரன்கள் எனும் அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இன்னும் அற்புதமான விஷயம் என்னவெனில், பும்ரா வீசிய இந்த 17வது ஓவர், ஒரு டபுள் விக்கெட் மெய்டன்! மீண்டும் வந்தார் `தண்டர் போல்ட்'. மோரிஸின் விக்கெட்டைக் கழட்டினார். இந்தப் பக்கம் வாஷிங்டன் சுந்தர், ஒரு ஆறுதல் பவுண்டரியை லாங் லெக் திசையில் தட்டிவிட்டார். மீண்டும் பும்ரா வந்தார். 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆர்.சி.பி அரண்டுபோனது.

போல்ட் வீசிய கடைசி ஓவரில், டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியும் மிட் ஆஃப்பில் ஒரு பவுண்டரியும் வெட்டிவிட்டார் குர்கீரத். கடைசி ஓவரில், 13 ரன்கள் கிடைத்த நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 164/6 என இன்னிங்ஸை முடித்தது பெங்களூர் அணி. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு இன்னின்ஸைத் துவங்கியது மும்பை. இஷான் கிஷன் - டி காக் ஜோடி ஓப்பனிங் இறங்க, மோரிஸ் முதல் ஓவரை வீசினார்.

#MIvRCB

முதல் ஓவரின், 5வது பந்து. பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரியை கட் செய்தார் கிஷன். 2வது ஓவரை வீசவந்தார் ஸ்டெயின் 2.0. ஒரு சிக்ஸரைப் பொளந்தார் கிஷன். 3வது ஓவரை வீச வாஷிங்டன் வந்தார். அதிலும் ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டார் கிஷன். அப்போது டி காக் என்னதான் செய்துக்கொண்டிருந்தார். இதோ, ஸ்டெய்ன் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸரைப் பொளந்தார். ஸ்டெய்ன் வீசும் வேகம் ஸ்டெயினுக்கு உதவுகிறதோ இல்லையோ, பேட்ஸ்மேனுக்கு நன்றாக உதவுகிறது. `தொட்டால் சிக்ஸ் மலரும்' என தொட்டு மட்டும்தான் விடுகிறார்கள். பந்தும் பவுண்டரியைத் தாண்டி பறக்கிறது.

5வது ஓவரில், 5 ரன் மட்டுமே கொடுத்து `நீ என்ன புலியா' என்றார் வாஷிங்டன். 6 ஓவரை வீசவந்தார் ஆச்சரிய சிராஜ். அதேபோல், டி காக்கின் விக்கெட்டைத் தூக்கி ஆச்சரியமளித்தார். அந்த ஓவரில், மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார் கிஷன். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 6 ஓவர்கள் முடிவில், 45/1 என திருப்பி அடிக்கத் துவங்கியிருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

வாஷி ஓவர்களில் எம்.ஐ வாசிகள் அடக்கி வாசித்தார்கள். 7வது ஓவரில், வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 8வது ஓவரை வீசவந்தார் சஹல். கிஷன் அவுட். மோரிஸிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். அந்த ஓவரின் முடிவில், 72 பந்துகளுக்கு 112 ரன்கள் தேவை எனும் இக்கட்டான நிலையில் முட்டுச்சந்தை நோக்கி நின்றுக்கொண்டிருந்தது மும்பை அணி. மீண்டும் வாஷி வந்தார். 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கேப்டன் கோலி, தோளில் தட்டிக்கொடுத்தார்.

#MIvRCB

10வது ஓவரில் இருந்துதான் சூர்யகுமார் யாதவ்வின் வான வேடிக்கைகள் ஆரம்பித்தது. டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர், லெக் திசையில் ஒரு பவுண்டரி என சஹாலை அதிரவிட்டார். ஆச்சரிய சிராஜ் மீண்டும் வந்து, திவாரியின் விக்கெட்டைக் கழட்டி ஆச்சரியம் சேர்த்தார். சஹால் வீசிய அடுத்த ஓவரில், க்ருணால் ஒரு பவுண்டரியும், சூர்யா ஒரு சிக்ஸரும் விளாசினர். 13 ஓவரை வீச ஸ்டெயின் கன் வந்தார். கையில் மெஷின் கன்னோடு நின்றுக்கொண்டிருந்தார் சூர்யா, ஜில்-ஜங்-ஜக் என மூன்று ரகத்திலும் மூன்று பவுண்டரிகளை விரட்டினார். சஹால் வீசிய 14வது ஓவரில், ஒரு பவுண்டரியை விரட்டி சூர்யகுமார் பயம் காட்டினாலும், க்ருணாலின் விக்கெட்டைக் கழட்டி மாஸ் காட்டினார் சஹால். அடுத்தப்பந்து, க்ருணாலின் சகோதரர் வந்தார் களத்துக்கு...

மோரிஸ் வீசிய 15-வது ஓவரில், டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸரைப் போட்டுவிட்டார் ஹர்திக். `அப்போ இன்னைக்கும் வீடியோ கேம் ஆட்டம்தானா' என பெங்களூர் ரசிகர்கள் அரண்டுபோனார்கள். `டிபன் சொல்லுங்க ராஜேந்திரன்' என சாகவாசமாக சாப்பிட அமர்ந்தார்கள் மும்பை வாசிகள். 30 பந்துகளுக்கு 48 ரன்கள் தேவை, என காற்று மும்பை பக்கம் வீசியது. தன்னை இந்திய அணியில் எடுக்காத அம்புட்டு கோவத்தையும், அதற்கு காரணமான கேப்டன் டீமிடமே காட்டிடலாமென காத்திருந்தார்போல சூர்யகுமார். பாவம், முகமது சிராஜ் வந்து மாட்டிக்கொண்டார். அவர் வீசிய 16வது ஓவரில், முதல் பந்தைய் பவுண்டரிக்கு பறக்கவிட்டு தன் அரைசதத்தைக் கடந்தார் சூரி. அடுத்த பந்து, இன்னொரு பவுண்டரி. பிறகு, சிராஜ் ஒரு பவுன்ஸர் போட்டார். அதையும் கீப்பரின் தலைக்கு மேல் தூக்கிவிட்டார் ஸ்கை. 17வது ஓவரை வீசவந்த மோரிஸுக்கும், ஒரு பவுண்டரியை பையில் போட்டு கொடுத்தனுப்பினார் சூர்யகுமார்.

#MIvRCB

பிறகுதான் ஸ்டெய்ன் வந்தார். தான் வீசும் பந்தில் சூர்யகுமார் அல்ல. யாருமே அடிக்கக்கூடாதென நினைத்து ஒரே ஓவரில் 3 அகலப்பந்துகளை வீசினார். முதல் பந்தும் அகலப்பந்துதான். அந்நேரம், அம்பயர் ஏதோ அண்டம் - பேரண்டம் பற்றிய ஆராய்ச்சில் இருந்ததால் கைகளை அகல விரிக்கவில்லை. ஸ்டெய்னும், தனது ஓவரில் சூர்யகுமார் அடித்துவிடக் கூடாதென எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனாலும், ஒரு சிக்ஸரை அனுப்பிவிட்டார் சூர்யா. இவர் ஆடிய ஆட்டத்தில், கோலிக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. பந்தை எடுத்துக்கொண்டு விறுவிறுவென சூர்யகுமாரிடம் வந்தார். கோபத்தைக் கண்களில் தேக்கிக்கொண்டு, நோக்கு வர்மம் முயற்சி செய்தார் கோலி. ஆனால், `ஏழாம் அறிவு' சூர்யாவைப் போல இந்த சூர்யாவுக்கும் அது வேலை செய்யவில்லை. அமைதியாகப் போய்விட்டார் கோலி.

Also Read: ப்ளேஆஃப்க்குள் போய்விட்டதா மும்பை? பெங்களூருவின் வெற்றியைத் தள்ளிப்போட்டது எது?! #MIvRCB

இந்தப்பக்கம் ஹர்திக் பாண்டியாவுக்கும், மோரிஸுக்கும் தகராறு. மோரிஸ் வீசிய 19வது ஓவரின், 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசினர் ஹர்திக். மோரிஸுக்கு ஆத்திரம் ஆறவில்லை. அடுத்த பந்தே, ஹர்திக்கின் விக்கெட்டும் பறிபோக, உற்சாக கூச்சல் போட்டு பாண்டியாவை வெறுப்பேற்றினார் மோரிஸ். அப்போது, எதையோ சொல்லிவிட்டுப்போனார் பாண்டியா. கேப்டன் பொலார்டு உள்ளே வந்தார். ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டு ப்ரஷரைக் குறைத்தார். `பார்டனர்ஷிப் பில்ட் ஆச்சுனா, விக்கெட்டும் எடுக்குறீங்க. ப்ரஷர் பில்ட் ஆச்சுனா, பவுண்டரியும் அடிக்குறீங்க. யாருங்க நீங்க' என மும்பை ரசிகர்கள் கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டார்கள். 6 பந்துகளுக்கு 3 ரன்கள் மட்டுமே தேவை. சிராஜ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை, பவுண்டரிக்கு விரட்டினார் அந்த வானத்தைப் போல மனம் படைத்த சூர்யா. வின்னிங் ரன்னை அடித்துவிட்டு, `நான் இருக்கேன்ல. எதுக்கு கவலை' என சைகைக் காட்டினார் சூர்யா. இது சூர்யா சார்... உரசாதீங்க!

#MIvRCB

`இன்னும் ஒரு 20 ரன்கள் நாங்க அதிகமா அடிச்சுருக்கணும். அதை தவறிட்டோம். அதற்கான விலைதான் இந்த தோல்வி. மேட்ச் கொஞ்சம் டைட்டாதான் போச்சு. அவங்க நல்லா பேட்டிங் ஆடிட்டாங்க' என்றார் கோலி. `எல்லாப் புகழும் டீமுக்கே. பும்ரா அற்புதமா பந்து வீசினார். சூர்யகுமார் அற்புதமா பேட்டிங் ஆடினார். நானும் ஏபிடி வில்லியர்ஸோட விக்கெட் எடுத்தேன். எல்லாம் டீம் ஒர்க்தான் பிரதர். சூர்யகுமார் இந்த சீசனோட சர்க்கரவர்த்தி. ஆனா, உள்ளுக்குள்ளே மெழுகுவர்த்தி. ஒய்யாஹோ...! இந்த சூர்யா, ஸ்கை ப்ளூ கலர் ஜெர்ஸியை அணியும் நாள் வெகுதூரமில்லை சாரே' என்றார் பொலார்டு. சூர்யகுமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-mumbai-indians-vs-royal-challengers-bangalore-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக