சென்னை தி.நகர், மூசா தெருவில் மொத்தமாகத் தங்க நகைகளை வியாபாரம் செய்யும் ஜுவல்லரி இருக்கிறது. குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஜூவல்லரியை ராஜேந்திரகுமார், தருண், பரிஸ் ஆகியோர் நடத்திவருகின்றனர். 20-ம் தேதி இரவு ஜூவல்லரியைப் பூட்டிவிட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். பின்னர், 21-ம் தேதி காலையில் கடையைத் திறக்க ஊழியர்களும், கடையின் உரிமையாளர்களும் வந்தபோது கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே இருந்த தங்க நகைகள், தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போயிருந்தன.
இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த ஜூவல்லரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 20-ம் தேதி இரவு ஜூவல்லரியின் பின்பக்கத்தில் உள்ள தெருவுக்கு பைக்கில் இருவர் வருகின்றனர். பைக்கை விட்டு இறங்கிய ஒருவர், அதே தெருவில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறார். பைக்கில் வந்த நபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
Also Read: சென்னை: ரூ.2 கோடி தங்கம், வைரம், வெள்ளி திருட்டு - தி.நகரைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்
பைக்கை விட்டு இறங்கிய நபர், ஜூவல்லரியின் பின்பக்க மதில் சுவரில் ஏறிக் குதிக்கிறார். பிறகு கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைகிறார். அவர் செல்லும் போது முகத்தை மறைத்தும் கை உறையும் அணிந்ததோடு பெரிய பை ஒன்றையும் கையோடு எடுத்துச் செல்கிறார். பின்னர் சில மணி நேரத்துக்குப்பிறகு பையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவர் வெளியில் செல்கிறார். அதன்பிறகு ஜூவல்லரியின் பின்பக்கத் தெருவில் காத்திருக்கும் அந்த நபரை பைக்கில் வந்தவர் அழைத்துச் செல்கிறார். இந்தச் சிசிடிவி கேமராப் பதிவுகளின் அடிப்படையிலும் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை செய்தனர்.
போலீஸாரின் விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குறித்த தகவல் தெரியவந்தது. அவர்கள், திருவள்ளூர் பகுதியில் பதுங்கியிருக்கும் தகவல் தெரிந்து, உதவி கமிஷனர் மகிமைவீரன் தலைமையில் போலீஸார், அங்கு விரைந்து சென்றனர். போலீஸார் வருவதைத் தெரிந்து கொண்ட கொள்ளையர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஆனால், அவர் பதுங்கியிருந்த வீட்டில் பெண் ஒருவர் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது அந்தப் பெண், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரின் காதலி எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரித்தனர்.
Also Read: சென்னை: `250 சவரன் நகைகள்; ரூ. 95 லட்சம் பணம்' - வயதான தம்பதியரைக் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை!
அவர் அளித்த தகவலின்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்கிற `மார்க்கெட்’ சுரேஷ் என்பவரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது சுரேஷ், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது ஏற்கெனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. பூட்டுக்களை உடைப்பத்தில் சுரேஷ், கில்லாடி என போலீஸார் தெரிவித்தனர். சுரேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி கொள்ளையடிக்கப்பட்ட சில நகைகளை மீட்டுள்ளனர்.
சுரேசுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவரும் சிக்கினால்தான் கொள்ளையடிக்கப்பட்ட முழு நகைகள், வெள்ளிப் பொருள்களை மீட்க முடியும் என தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கொள்ளைச் சம்பவத்தை விசாரித்துவரும் உயரதிகாரி ஒருவர், ``கொள்ளைச் சம்பவம் நடந்தபிறகு அமைக்கப்பட்ட தனிப்படையினர் இரவு, பகல் பாராமல் ஏன் வீட்டுக்குக்கூட செல்லாமல் விசாரணை நடத்திவந்தனர். அதனால்தான் கொள்ளை நடந்த சில தினங்களுக்குள் கொள்ளையர்களைப் பிடிக்க முடிந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், வெள்ளிப் பொருள்களை மீட்கும் பணி நடந்துவருகிறது. முதற்கட்டமாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மார்க்கெட் சுரேஷ் என்ற பிரபல கொள்ளையன் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவரின் காதலி, திருவள்ளூர் மாவட்டத்தில் பழைய இரும்பு கடை நடத்திவருகிறார். அவரின் வீட்டிலிருந்துதான் சில நகைகளையும் வெள்ளியையும் மீட்டுள்ளோம்`` என்றார்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-one-over-t-nagar-robbery-in-thiruvallur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக