Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

இடிந்து விழுந்த மருத்துவக் கல்லூரி கான்க்ரீட் தளம்! - நாமக்கல் அதிர்ச்சி

நாமக்கல் நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இன்று அதிகாலை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்பு ஆய்வுசெய்தபோது

மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, நாமக்கல்லில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் ரூ. 336 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

Also Read: நாமக்கல்:`அரசுப் பணிகள் தரமாக நடக்கணும்!’- வைரல் வீடியோவின் பின்னணி பகிர்ந்த சின்ராஜ் எம்.பி

கடந்த மார்ச் மாதம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் பூமி பூஜை போடப்பட்டு, கட்டடம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நேரடியாக விசிட் அடித்த முதல்வர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கும் பணியினை பார்வையிட்டு, ஆய்வுசெய்தார்.

இடிந்து விழுந்த கான்க்ரீட் தளம்

`வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்துவிடவேண்டும்' என்று அமைச்சர் தங்கமணியிடம், முதல்வர் உத்தரவிட்டு சென்றதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானp பணிகளில் இரவு, பகலாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு, இந்த விபத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.

Also Read: ஹைதராபாத் வெள்ளம்: கனமழை; இடிந்து விழுந்த கட்டடம்! குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு, ஸ்பாட்டுக்கு வந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், போர்டிகோ தளம் இடிந்து விழுந்ததை பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``போர்டிகோ அமைப்பதற்காக கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அதற்காக, முட்டு கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கம்புகள் சரியான முறையில் வைக்கப்படவில்லை. அதனால், பொறியாளர்களே அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதனால்தான், அந்த கான்க்ரீட் இடிந்து விழுந்துள்ளது. மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இல்லை. இதனால், ஒரு தொழிலாளிக்குகூட சிறுகாயம்கூட இல்லை" என்றார்.

மெகராஜ் (நாமக்கல் கலெக்டர்)

ஆனால், இந்த சம்பவத்தில் சில தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியது. அதனை மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதை மறுத்துள்ளார். கட்டுமான நிலையில் இருக்கும்போதே, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் போர்டிகோ போர்ஷன் இடிந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/concrete-floor-fell-down-in-namakkal-medical-college-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக