``வரும் தேர்தலில் அரசியல் களம் கண்டிப்பாக மாறும். தே.மு.தி.க நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும்'' என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியிருக்கிறார்.
மதுரையில் இன்று நடந்த தே.மு.தி.க நிர்வாகி இல்லத் திருமண விழாவில் விஜயபிரபாகரன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, ``கேப்டன் உடல்நிலை சீராக உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக உள்ளார்'' என்று தெரிவித்தவர், தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
``தே.மு.தி.க தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. ஏற்கெனவே தனித்து நின்று தேர்தலைச் சந்தித்துள்ளோம். அரசியலில் நண்பரும் இல்லை... எதிரியும் இல்லை. வரும் தேர்தலில் கண்டிப்பாக அரசியல் களம் மாறும். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்று தே.மு.தி.க மட்டுமே என்று ஏற்கெனவே நிரூபித்துக் காட்டியுள்ளோம். தே.மு.தி.க நினைத்தால், மூன்றாவது அணி அமைக்க முடியும்.
தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம். செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி பணிகளைத் தீவிரப்படுத்துவோம். கேப்டனும் பிரேமலாதவும் கட்சித் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள்.
Also Read: வீட்டில் எப்போதும் 20 பேர்; குழப்பிய 2 அறிக்கைகள்! - தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்
வருகின்ற தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் கேப்டன் பிரசாரம் செய்வார். மக்களைப் பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம். கலைஞர், ஜெயலலிதா இல்லாத இச்சமயத்தில் தனித்துவமான தலைவர்கள் இல்லை. இந்தத் தேர்தலை பொறுத்தவரை அனைவருமே புதிய தலைவர்கள். முதல் தேர்தலை சந்திப்பது போலத்தான் அனைவரும் செயல்படுவோம்
மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் கருத்துச்சொல்ல முடியாது. தலைமைதான் சொல்லும். விஜயகாந்த் மகனாக, நான் கருத்து சொன்னால் கட்சிக்குள் குழப்பமாகிவிடும்'' என்றவர், ''நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்களுக்கு வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும்'' என்றார்.
`ஏற்கெனவே அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க அரசுக்கு எதிராக போராட்டம் நடந்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தே.மு.தி.க-வும் அ.தி.மு.க கூட்டணியை விட்டு விலக முடிவெடுத்துவிட்டது என்பதை விஜயபிரபாகரன் பேச்சு எதிரொலிக்கிறது’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
source https://www.vikatan.com/news/politics/dmdks-vijaya-prabhakaran-speaks-about-assembly-elections
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக