Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

``சீமான் தம்பிகள், என்னைத் தரம்தாழ்ந்து விமர்சித்தனர்!'' - கருணாஸ் ஆதங்கம்

கொரோனா பாதிப்புக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ். மருது பாண்டியர் குருபூஜை, முத்துராமலிங்கனார் குருபூஜை என சமூக விழாக்களில் உற்சாகமாக கலந்துகொண்டிருப்பவரிடம் சமீபத்திய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினோம்.

800 திரைப்படம்

''அண்மையில் '800' திரைப்படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியை சில வருடங்களுக்கு முன்பு நீங்களும் சந்தித்திருக்கிறீர்கள்தானே?''

''ஆமாம்.... நான் நடித்த 'இனம்' என்றொரு படம் 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான படம்' என்று பிரச்னை செய்தனர். பிரபாகரனை நான் இன்னமும் தலைவராக மட்டுமே பார்த்துவருகிறேன். அவரை முன்வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் அவசியம் எனக்கு இல்லை.''

''கடந்த காலத்தில், 'இலங்கை செல்லக்கூடாது' என்று உங்களுக்கும் நெருக்கடி தரப்பட்டதே?''

''10 வருடங்களுக்கு முன்பே அப்படியொரு நெருக்கடியை நான் சந்தித்தேன். நான் பிறந்தது புதுக்கோட்டையில்தான். ஆனால், என் முன்னோர் வியாபாரம் தொடர்பாக இலங்கைக்குப் போய்வந்து கொண்டிருந்ததால், அங்கு எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. 2010-ம் ஆண்டில், இலங்கையில் உள்ள தனியார் வானொலி நிலையத்தின் ஆண்டு விழாவுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போது கண்டி கதிர்காமர் முருகர் கோயிலுக்கும் குடும்பத்தோடு சென்றுவரலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.

பிரபாகரன்

ஆனால், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் 'நீங்கள் இலங்கை போகக்கூடாது' என்று சொல்லி மிரட்டினர். 'ராஜபக்‌ஷேவிடம் 10 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, இலங்கைக்குக் குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செல்கிறார் கருணாஸ். இவரை வாழ்த்தி வழியனுப்புங்கள்' என என் போன் நம்பரையும் சேர்த்து பொதுவெளியில் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து என்னையும் என் குடும்பத்தினரையும் சீமானின் தம்பிகள் தரம் தாழ்ந்து விமர்சித்தனர். என் வாழ்க்கையிலேயே அதுபோன்ற வசவுகளை நான் கேட்டதேயில்லை''

Also Read: கார்ட்டூன் சர்ச்சை... தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் - பிரான்ஸில் தொடரும் பதற்றம்!

''விஜய் நடிப்பில், 'கத்தி' திரைப்படம் தயாரானபோது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது தமிழ்த் திரையுலகம். ஆனால், அதன்பிறகு அந்தநிறுவனம் தயாரித்த படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே?''

'''லைகா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன், ராஜபக்‌ஷே சகோதரருடன் இணைந்து பிசினஸ் செய்துகொண்டிருப்பவர். அந்தப் பணத்தில்தான் தமிழ்ப் படம் தயாரிக்கிறார்' என்றெல்லாம் புகார் சொல்லி 'கத்தி' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதன்பிறகு இவர்கள் எல்லோருமே அமைதியாகிவிட்டனர். அரசியலுக்காகத்தான் இவர்கள் எதிர்க்கின்றனர் என்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்ததால், நான் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை''

ராமதாஸ்

''சீர் மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், 'சீர் மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், வன்னியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்' எனச் சொல்லி மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறாரே?''

''சீர் மரபினர் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. சீர் மரபினராகக் குறிப்பிடப்படும் 68 சமுதாயங்களில் கள்ளரும் மறவரும் இருக்கின்றனர். இது தனிப்பட்ட சமுதாயத்தினரின் கோரிக்கை இல்லை. 1979-லிருந்தே 68 சமுதாய மக்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். சீர் மரபினர் என்ற அடையாளம் கிடைத்தால்தான் கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்த சமுதாயங்கள் வளர்ச்சி பெற முடியும். சீர் மரபினருக்கென தனியே இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால், ஓ.பி.சி பட்டியலில் உள்ள தங்களுக்கான இட ஒதுக்கீட்டில், ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ என்று மருத்துவர் நினைக்கிறாரா என்று தெரியவில்லை... ஏன் எதிர்க்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்!''

Also Read: இரவில் இடிந்துவிழுந்த ஸ்லாப்... தூக்கத்தில் அலறிய மக்கள்... ஈரோடு அரசு மருத்துவமனையின் அவலம்!

''அண்மையில், 'என் அரசியல் வாழ்வை சீர்குலைக்க சிலர் நினைக்கின்றனர்' என சசிகலா வருத்தம் தெரிவித்திருக்கிறாரே.... இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?''

''சிறையிலிருந்து 'தான் வெளியே வந்தால், அதன் தொடர்ச்சியாக இங்கே ஏதேனும் தாக்கம் அல்லது சிக்கல் வரும் என்று நினைப்பவர்கள்தான் தனக்கு எதிராக பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள்' எனக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் சசிகலா. அவர் வெளியில் வந்து, இதுகுறித்து வெளிப்படையாகப் பேசும்போதுதான் அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் எனத் தெரிந்து என் கருத்தையும் நான் சொல்லமுடியும்''

சசிகலா

''சசிகலா ஆதரவாளரான நீங்கள், 2021 தேர்தலில் யாருடைய கூட்டணியில் இணைந்து பணியாற்றப் போகிறீர்கள்?''

''எடப்பாடி பழனிசாமி, யாருக்கு எதிராக முதல்வர் ஆக்கப்பட்டார், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றாகத்தானே... அடுத்து சட்டமன்றத்தில் இதே அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களும் ஓ.பி.எஸ் அணியினர்தானே... ஆனால், இன்றைக்கு இரண்டு பேருமே இணக்கமாக இருந்துவருகிறார்கள். சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தவர்களும் இவர்களேதான். ஆக, அரசியலில் இப்படி ஒவ்வொரு மாற்றங்களாக உருவாகிவரும்போது, எதை நீங்கள் அறுதியிட்டுச் சொல்லமுடியும்?''

சுவாரசியமான இந்தப் பேட்டியின் தொடர்ச்சியை இன்று வெளியாகியிருக்கும் ஜூனியர் விகடனில் படிக்கலாம். இணையதளம் வழியே வாசிக்க கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.... “தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை!”



source https://www.vikatan.com/news/politics/karunas-mla-speaks-about-various-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக