Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

`இனி லஞ்சம் வாங்கமாட்டேன்; ஒருமுறை மன்னிச்சி விட்டிடுங்க!’ - கதறிய அதிகாரி

வேலூர் மாவட்டம், திருவலம் பேரூராட்சியின் செயல் அலுவலராக இருப்பவர் வெங்கடேசன். இவர் வரிவிதிப்பு, கட்டட அனுமதி ஆகியவற்றுக்கு அதிகப் பணம் வசூலித்து குறைந்த அளவுக்கு பில் போடுவதாகப் புகார் எழுந்தது. அதுமட்டுமின்றி, இல்லாத கம்பெனிகளிலிருந்து பேரூராட்சிக்குத் தேவையான பல்வேறு பொருட்களை வாங்கியதாகப் போலி கணக்குக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டுவந்ததாகவும் அடுக்கடுக்காகப் புகார்கள் குவிந்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலர் வெங்கடேசன் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை

ஆனால், பணம் செலவழித்து சிபாரிசு மூலமாக மீண்டும் திருவலத்துக்கே வந்துவிட்டார் என்கிறார்கள். செயல் அலுவலர் வெங்கடேசன் மீது மீண்டும் முறைகேடுப் புகார் கூறப்பட்டதால், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் எழுத்தர் துரை ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத சுமார் 52,000 ரூபாய் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

Also Read: வேலூர்: `வீடு முழுக்க கட்டுக்கட்டாகப் பணம், தங்க நகைகள்!’ - மலைக்கவைத்த லஞ்ச அதிகாரி

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டபோது, ``பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்மீது தொடர்ச்சியான புகார்கள் வந்ததால், இந்த சோதனையை நடத்தியுள்ளோம். கணக்கில் வராத பணமும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதற்கான நிறைய ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறோம். விசாரணையின்போது,`இனி லஞ்சம் வாங்கமாட்டேன், தெரியாமல் தப்பு பண்ணிட்டேன். இந்த ஒரு முறை மன்னிச்சி விட்டிடுங்க சார்..’ என்று செயல் அலுவலர் வெங்கடேசன் கையெடுத்து கும்பிட்டுக் கெஞ்சினார். அவர்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என்றனர்.

டாஸ்மாக் கடையில் நடத்தப்பட்ட சோதனை

இதேபோல், வேலூரில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதிகளவில் வருமானம் ஈட்டக்கூடிய வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பென்னாத்தூரில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் நேற்றிரவு 9 மணி முதல் இன்றுகாலை வரையில் சோதனை நடத்தினர். அரசு விடுமுறைக்கு முந்தைய நாளில், பிளாக் மார்க்கெட்டில் மதுபானங்களை மொத்தமாக விற்பதும், நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று டாஸ்மாக் கடைகளிலிருந்தும் கணக்கில் வராத 61,000 ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி சோதனைகளால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. டாஸ்மாக் கடை ஊழியர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/vellore-dvac-raid-in-town-panchayat-office-tasmac-shops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக