Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

சித்தார்த்தின் என்ட்ரி, சிக்கலை உண்டாக்கிய அனு... அடுத்து என்ன நடக்கும்? #VallamaiTharayo

வெளியே சென்றிருந்த அபி வீட்டுக்குள் நுழையும்போது அவளுடைய அண்ணன், ``என்ன நடக்குதுன்னு தெரியுமா? நீயே உள்ளே போய்ப் பாரு” என்று எரிச்சலுடன் சொல்கிறான். குழப்பத்துடனும் தயக்கத்துடனும் வீட்டுக்குள் செல்கிறாள் அபி.

அங்கே வீடு நிறைய மனிதர்கள் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அபியைக் கண்டவுடன் ஒரு பெண் ஓடிவந்து, ``நான்தான் சித்தார்த் அக்கா, கெளசல்யா” என்று தன்னையும் தன் குடும்பத்தையும் அறிமுகம் செய்கிறார். சித்தார்த் ஒவ்வொன்றையும் தன்னிடம் கேட்டே செய்வான், தினமும் பத்து தடவை போன் செய்துடுவான், குடும்பத்துடன் அன்பாக இருப்பான் என்று பெருமையாகப் பேசுகிறார். அதைக் கேட்டு அபியின் குடும்பமும் சந்தோஷத்தில் திளைக்கிறது.

Vallamai Tharayo

வீடியோ காலில் அமெரிக்காவில் இருக்கும் சித்தார்த்தைத் தொடர்புகொள்கிறார்கள். அறிமுகம் நடக்கிறது. இறுதியாக அபி வருகிறாள். இருவரும் ஹலோ சொல்லிக்கொள்கிறார்கள். `எப்படி இருக்கீங்க?’ என்ற அபியின் கேள்விக்கு, `நீங்கதான் சொல்லணும்’ என்ற சித்தார்த் பதில் செம! நேரில் வரும்போது பேசலாம் என்பதுடன் இணைப்பைத் துண்டிக்கிறார்கள்.

அனு, பொற்கொடியிடம் நடந்த விஷயங்களைச் சொல்கிறாள் அபி.

``இந்த மாதிரி நாத்தனார்கள் டேஞ்சரானவர்கள். உங்களுக்குக் கல்யாணம் ஆனால்கூட, ஃபர்ஸ்ட் நைட்டில் ரெண்டு பேருக்கும் நடுவில் வந்து உட்கார்ந்துடுவாங்க. இப்படி எதுக்கெடுத்தாலும் அக்கா சொல்வதைக் கேட்டு நடக்கும் ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்காதே அபி. எங்க அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு, நான் ஹாஸ்டலில் வளர்ற கஷ்டம் எனக்குத்தான் தெரியும். எங்க பேரன்ட்ஸ் பிரிஞ்சதுக்கு ஃபேமிலி தலையீடுதான் காரணம்” என்கிறாள் அனு.

Vallamai Tharayo

``நீ சும்மா இரு அனு. குடும்பத்தை நேசிக்கிறவன், உன்னை எப்படி நேசிக்காமல் இருப்பான்? சித்தார்த் நல்ல மாதிரிதான் தெரியறான். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்காவில் இருக்கப் போறீங்க. என்ன பிரச்னை வரப் போகுது? யோசிச்சு முடிவெடு” என்று பொற்கொடி சொல்கிறாள்.

இப்படி நிதானமாக, விஷயத்தின் இன்னொரு பக்கத்தையும் யோசித்துப் பார்க்கச் சொல்லும் பொற்கொடி மாதிரி தோழிகள் கிடைப்பது வரம்!

சித்தார்த் பற்றி இன்னும் தெரிந்துகொள்வதற்காக கெளசல்யாவின் கணவரைச் சந்திக்கிறார்கள். அவர், சித்தார்த் பெண்களை மதிப்பவன், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அவனை எப்படியோ அமெரிக்கா வரை கொண்டு வந்துவிட்டோம் என்கிறார்.

உடனே அனு, ``உங்க முகத்தைப் பார்த்தாலே சோறு இறங்காது. நெருப்புக்கோழி முட்டை மாதிரி வழுக்கைத் தலை” என்றெல்லாம் பேச, கெளசல்யாவின் கணவர் அதிர்ச்சியடைகிறார்.

Vallamai Tharayo

பெண்கள் துடுக்காக, குறும்பாகப் பேசலாம். அதற்காக இங்கிதம் இன்றி, நாகரிகம் இன்றி பேசுவதை `துடுக்குத்தனம்’ என்று காட்டுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கெளசல்யாவின் அப்பாவைவிட, அவர் கணவரை வயதானவராகக் காட்டுகிறார்களே என்று யோசித்ததற்கு, அடுத்த சீனில் இப்படி உருவக் கேலி செய்வதற்காக அவரைக் கொண்டுவந்தது போல தோன்றுகிறது. இது காமெடி இல்லை... இதுபோன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாமே டைரக்டர்?

அனுவின் செயலுக்கு அபியும் பொற்கொடியும் மன்னிப்பு கேட்கிறார்கள்.

கெளசல்யாவின் கணவர் வீட்டில் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அபியும் பொற்கொடியும் கவலைப்படுகிறார்கள்.

என்ன நடக்கப் போகிறது?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக