இந்தியாவில் பல மாநிலங்களில் இயற்கை விவசாய முறைகள் அந்தந்த அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறது காஷ்மீர். அந்த மாநில தலைநகரான ஶ்ரீநகரில், காஷ்மீர் வேளாண்துறை சார்பில் முற்றிலும் இயற்கைக் காய்கறிகள் மட்டுமே விற்பனை செய்யும் 'லால் மண்டி' எனும் இயற்கை விவசாய சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை விவசாய சந்தையில் முழுமையான இயற்கை காய்கறிகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அதேபோல, இடைத்தரகர்கள் இல்லாத நேரடி விவசாயிகள் மட்டுமே இச்சந்தையில் விற்பனை செய்யமுடியும்.
ஏற்கெனவே பல மாநிலங்கள் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்துக்குப் பயிற்சி அளித்து வரும் நிலையில், இயற்கை விவசாயிகளுக்கான சந்தையும் அரசே தொடங்கியுள்ளது, அம்மாநில விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இயற்கை விவசாயப் பயிற்சி அளித்ததோடு நிற்காமல், அதை விற்பனை செய்வதற்கான வழியும் காஷ்மீர் வேளாண்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.
லால் மண்டி இயற்கை சந்தையின் பொறுப்பாளர், முகமது அலி லோன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பூச்சிக்கொல்லி மற்றும் பிற ரசாயன உரங்கள் தவிர்த்து இயற்கையாகவே விளைவிக்கும் பொருள்கள் உடலுக்கு மிக நல்லது. இங்கு விற்பனை செய்வது 100 சதவிகிதம் இயற்கையான பொருள்கள்தான். இதை விற்பனை செய்பவர்களும் 100 சதவிகிதம் இயற்கை விவசாயிகள்தாம். இந்த முயற்சி மாநிலம் முழுவதும் இன்றைய தேவையான இயற்கை விவசாயத்தையும் இயற்கை உணவுகளையும் ஊக்குவிக்க ஏதுவாக இருக்கும். இதுபோக இயற்கை விவசாயத்துக்கான சந்தை பெரிய அளவில் இருக்கிறது. அதை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறோம். நேரடியாக இயற்கைப் பொருள்கள் கிடைப்பதாலும் நம்பிக்கைக்குரியதாக இயற்கை விவசாய பொருள்கள் இருப்பதாலும், காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை தரும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பெரும்பாலானோர் இயற்கை விவசாயப் பொருள்களை அதிகமாக விரும்புகிறார்கள். இந்நிலையில் காஷ்மீர் வேளாண்மைத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/kashmir-agriculture-department-starts-the-first-organic-vegetable-market-in-srinagar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக