Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

கனிமொழிக்குக் கல்தா..?! அறிவாலய மண்டலப் பொறுப்பு பாலிடிக்ஸ்!

2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சியை அமைப்புரீதியாக நான்கு மண்டலங்களாகப் பிரித்து, மண்டலத்துக்கு ஒரு நிர்வாகியை நியமிக்க தி.மு.க முடிவெடுத்திருக்கிறது. முதலில், ஆறு மண்டலங்களாகப் பிரிக்கலாம் என ஆலோசித்துவந்தவர்கள், தற்போது நான்கு மண்டலங்களாகப் பிரித்தால் போதும் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். இதன்படி, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என நான்கு மண்டலங்களாகக் கட்சி பிரிக்கப்படவிருக்கிறது. தென்மண்டலத்துக்கு பொறுப்பாளராக எ.வ.வேலு நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின் - எ.வ.வேலு

தென்மண்டலப் பொறுப்புக்கு கனிமொழியின் பெயர் பரிசீலனையில் இருந்தநிலையில், அவர் பெயரை எடுத்துவிட்டு எ.வ.வேலுவின் பெயரை ‘டிக்’ அடித்திருக்கிறது கட்சித் தலைமை. ``தென்மண்டலத்திலுள்ள நாடார் சமூக மக்கள் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்கிற கோபம் அந்தச் சமூகத்தினரிடம் இருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள். கனிமொழி மீது நாடார் சமூகப் பிரதிநிதி என்கிற பிம்பம் இருக்கிறது. அவரை மண்டலப் பொறுப்பாளராக நியமித்தால், மற்ற பெரும்பான்மை சமூகங்கள் அதிருப்தி அடையலாம். தவிர, கனிமொழி இருந்தால்தான் நாடார் வாக்குகள் தி.மு.க-வுக்கு கிடைக்கும் என்கிற நெருக்கடியும் இல்லை. இதனால், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவரான எ.வ.வேலுவை தென்மண்டலப் பொறுப்பாளராக நியமிப்பதற்கு ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார்” என்கிறது அறிவாலய வட்டாரம்.

Also Read: `கொங்கு வியூகம்; ஆதரித்த எ.வ.வேலு!' -ராஜ்ய சபாவுக்கு எப்படித் தேர்வானார் அந்தியூர் செல்வராஜ்?

``சரி, நாடார் அல்லாத சமூகத்தினர் அதிருப்தியடைவார்கள் என்பதற்காக, கனிமொழிக்கு தென்மண்டலப் பொறுப்பு வழங்கவில்லை. மீதி ஏதேனும் ஒரு மண்டலத்தில் பொறுப்பு வழங்கியிருக்கலாமே..?” என்ற கேள்விக்கு பதில்தான் அறிவாலயத்தில் இல்லை. ``வேட்பாளர் தேர்வில் மண்டலப் பொறுப்பாளர்களின் பங்கு முக்கியமானது என்பதால், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கனிமொழி சீட் பெற்றுத் தந்துவிடக் கூடாது என்பதற்காகவும், எதிர்காலத்தில் உதயநிதிக்குப் போட்டியாக ஒரு சக்தி கட்சிக்குள் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவும் கனிமொழிக்கு மண்டலப் பொறுப்பு வழங்க பயப்படுகிறார்கள்” என்று பொருமுகிறது கனிமொழி ஆதரவு வட்டாரம்.

கனிமொழி

`கட்சியின் பொருளாளர் பொறுப்பை எதிர்பார்த்திருந்த எ.வ.வேலு, அந்தப் பொறுப்பு டி.ஆர்.பாலுவுக்கு அளிக்கப்பட்டதால் சில மாதங்களாக வருத்தத்தில் இருந்தார். அறிவாலயத்தில் பெருமளவு தலைகாட்டாமல் திருவண்ணாமலைக்குள்ளேயே சுற்றிவந்தார். அவரைச் சமாதானப்படுத்தும்விதமாகத்தான் மண்டலப் பொறுப்பாளர் பொறுப்பு அளிக்கப்படவிருக்கிறது’ என்கிறார்கள். நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் எ.வ.வேலு தயாராகிவிட்டாராம்.

Also Read: மிஸ்டர் கழுகு: சீனியாரிட்டி படிதான் பதவியா? - கொந்தளிக்கும் கனிமொழி ஆதரவாளர்கள்...

மேற்கு மண்டலப் பொறுப்பாளராக தி.மு.க கொறடா அர.சக்கரபாணியின் பெயர் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. கவுண்டர் சமூதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதிநித்துவம் தந்தால்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியின் கவுண்டர் பாலிடிக்ஸை உடைக்க முடியும் என்று சக்கரபாணியின் பெயர் `டிக்’ செய்யப்பட்டதாம். கிழக்கு மண்டலப் பொறுப்பு, தொழிலாளர் அணி பொதுச்செயலாளர் மு.சண்முகத்துக்கு அளிக்கப்படவிருக்கிறது. வேளாண் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தைப் பெரிதாக்கி, வாக்கு வேட்டையாட சண்முகத்தைக் களமிறக்கியிருக்கிறதாம் அறிவாலயம். ஆனால், `அவரால் தீவிரமாகக் களப்பணி ஆற்ற முடியுமா?’ என்கிற கேள்வியையும் அறிவாலயத்தில் உள்ளவர்களே எழுப்புகிறார்கள்.

ஆ.ராசா

வடக்கு மண்டலப் பொறுப்பு ஆ.ராசாவுக்கு அளிக்கப்படவிருக்கிறது. தி.மு.க-வில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மேடைக்கு மேடை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறிவந்தார். இதை உடைக்கும்விதமாக, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான விழுப்புரம் லட்சுமணனுக்கு மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பும், பொன்முடியால் ஓரங்கட்டப்பட்டிருந்த ஏ.ஜி.சம்பத்துக்கு தீர்மானக்குழு உறுப்பினர் பொறுப்பும் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதேபோல, அன்னியூர் சிவாவுக்கு மாநில விவசாயி அணி துணைச் செயலாளர் பொறுப்பை அளித்தது கட்சித் தலைமை. கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வன்னியர்களுக்குப் போதுமான பிரதிநித்துவம் அளித்துள்ளபடியால், வடமாவட்டங்களிலுள்ள பட்டியலின வாக்குகளைக் குறிவைத்து ஆ.ராசாவை களமிறக்கியிருக்கிறார்களாம்.

இந்த மண்டலப் பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வந்துவிடும் என்கிறார்கள். அதற்குள், மண்டலப் பொறுப்பாளர் பட்டியலில் சில மாற்றங்களைப் புகுத்துவதற்கான லாபியும் நடைபெறுகிறதாம். இந்த நியமன அறிவிப்புக்குப் பிறகுதான், மாவட்டங்களைப் பிரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. நவம்பர் மாதத்துக்குள் அமைப்புரீதியாக எல்லா மாற்றங்களையும் செய்துவிட்டு, தேர்தல் வேலையைச் சூட்டோடு ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறது அறிவாலயம்.



source https://www.vikatan.com/news/politics/dmk-zonal-districts-in-charge-list-will-be-out-soon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக