Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

சென்னை: போதைக்காக ரூ.5 மாத்திரை ரூ.500-க்கு விற்பனை - மெடிக்கல் உரிமையாளர் சிக்கியது எப்படி?

சென்னை கொடுங்கையூர் பகுதியில் போதையிலிருந்த இளைஞரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. இளைஞரின் போதைக்குக் காரணம், வலி நிவாரண மாத்திரைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. உடனே, கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ், எஸ்.ஐ-க்கள் ஹரிகரன், கன்னியப்பன், சிவசங்கரன் மற்றும் காவலர்கள் சிவக்குமார், சத்யமூர்த்தி, நிர்மல்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட இளைஞரிடம் எங்கிருந்து வலி நிவாரண மாத்திரைகள் வாங்கினாய் என்று விசாரித்தனர். அப்போது அவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வாங்கியதாகக் கூறினார்.

மோகன்

அதனால் மெடிக்கல் கடை உரிமையாளரை கையும் களவுமாக பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதற்காக சம்பந்தப்பட்ட மெடிக்கல் கடையில் போதைக்காக வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை வாங்கிய இளைஞரை அந்தக் கடைக்கு போலீஸார் அனுப்பினர். அதோடு அவரை ரகசியமாக போலீஸார் பின்தொடர்ந்தனர். மெடிக்கல் கடையில் 5 ரூபாய் விலை உள்ள வலி நிவாரண மாத்திரையை இளைஞர், 500 ரூபாய் கொடுத்து வாங்கினார். அப்போது அங்குச் சென்ற போலீஸார், மெடிக்கல் கடை உரிமையாளர் மோகனை மடக்கிப்பிடித்தனர்.

பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, அவர் அதிக விலைக்கு வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை விற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீஸார் மெடிக்கல் கடை உரிமையாளர் மோகனைக் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மெடிக்கல் கடையிலிருந்து 170 வலி நிவாரண மாத்திரைகள், 100 மிலி அளவுள்ள 20 வலி நிவாரண மருந்து பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது

Also Read: சென்னை: திருட்டு செல்போன்களுக்குப் போதை மாத்திரைகள்! - பகீர் பின்னணி

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ``கொடுங்கையூரில் மெடிக்கல் கடை நடத்தி வந்த மோகன் (30), செங்குன்றத்தில் குடியிருந்து வருகிறார். இவர், மெடிக்கல் கடையில் டாக்டரின் பரிந்துரையில்லாமல் சிறுவர்கள், இளைஞர்களுக்கு வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை கூடுதல் விலைக்கு விற்றுவந்துள்ளார். 5 ரூபாய் மாத்திரைகளை 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொடுங்கையூர் பகுதியில் மெடிக்கல் கடை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பவர்களைக் கண்காணித்து வருகிறோம்" என்றனர்.

மெடிக்கல் கடையில் போதைக்காக வலி நிவாரண மருந்து, மாத்திரைகள் விற்ற சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-medical-shop-owner

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக