Ad

புதன், 28 அக்டோபர், 2020

திருச்சி: `தொகுதி மேம்பாட்டு நிதி; உதயநிதி படம்!’ - நிழற்குடை சர்ச்சையில் மகேஷ் பொய்யாமொழி

கருணாநிதி, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியின் படத்தைப் போட்ட பயணிகள் நிழற்குடையை அன்பில் மகேஷ் திருச்சியில் திறந்துவைத்திருக்கிறார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. ``உதயநிதியின் படத்தை நீக்க வேண்டும் இல்லையென்றால். நீதிமன்றத்தை நாடுவோம்'' என்று எச்சரிக்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தினர். என்னதான் பிரச்னை என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

மகேஷ் பெய்யாமொழி

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ வாகவும், தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் மகேஷ் பொய்யாமொழி. இவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதோடு, குடும்பத்தாரின் குட்புக்கில் இடம்பெற்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதோடு, உதயநிதியின் நெருங்கிய நண்பர். இந்தநிலையில், திருவெறும்பூர் எம்.எல்.ஏ தொகுதிக்குட்பட்ட 63-வது வார்டு, ஆலத்தூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை கடந்த 26-ம் தேதி எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் திறந்துவைத்தார்.

பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த மகேஷ்

அதில் மறைந்த முதல்வர் கருணாநிதி புகைப்படமும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதில் உதயநிதி படம் வைக்கப்பட்டிருப்பதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் செயலைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி வழக்கறிஞர் கிஷோர், அதிகாரிகளிடம் புகாரளித்திருக்கிறார்.

மக்கள் நீதி மையத்தின் வழக்கறிஞர் அணியிலுள்ள கிஷோரிடம் பேசினோம். ``எந்த அரசுப் பொறுப்புகளிலும் இல்லாத, தி.மு.க-வில் இளைஞரணிச் செயலாளராக மட்டும் இருக்கும் உதயநிதியின் படம் அதில் இடம்பெற்றது எப்படி?

வழக்கறிஞர் கிஷோர்

கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படம் இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் அரசுப் பொறுப்புகளில் இருந்தவர்கள். ஆனால், எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒரு நபரின் புகைப்படத்தை எப்படி வைத்தார்கள்... ஸ்டாலின் குடும்பத்தினர் தன் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே மக்கள் பயன்படுத்தும் நிழற்குடையில் புகைப்படம் வைத்திருக்கிறார் மகேஷ்.

உதயநிதி- அன்பில் மகேஷ்- ஸ்டாலின்

இது சட்டப்படி தவறு. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆட்சியரின் பர்சனல் வாட்ஸ்அப்பிலும் வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் புகாராகச் சொல்லியிருக்கிறேன். இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரத்தில் இருந்தால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்று தெரியவில்லை. உதயநிதியின் புகைப்படத்தை நீக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்" என்றார் ஆவேசமாக.

மகேஷ்

இது குறித்து மகேஷ் பொய்யாமொழியிடம் பேசினோம். ``உதயநிதி அரசு பொறுப்புகளில் இல்லாததால் அவருடைய படத்தை போட்டது தவறு என்று சொல்கிறார்கள். இது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறேன். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாகச் சரிசெய்துகொள்கிறேன்" என்றார்.

Also Read: திருச்சி: `அண்ணன் நேருவைக் கேட்டுத்தான் செயல்படுகிறேன்!’ - மகேஷ் பொய்யாமொழி



source https://www.vikatan.com/news/politics/udhayanithi-stalin-image-created-controversy-in-trichy-bus-stop-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக