Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

ஆன்லைன் ரம்மி: எதிர்ப்புறம் விளையாடுவது யார் தெரியுமா? - விளக்கும் சைபர்கிரைம் அதிகாரி

சூது என்ற சொல் எவ்வளவு வசீகரமானதோ அதே அளவுக்கு வஞ்சகமானது. விளையாட்டு, சுவாரஸ்யம் என தொடங்கி நெருப்புபோல மெல்லப்படர்ந்து பலரது வாழ்வைக் காவு வாங்குகிறது. சூதால் வாழ்விழந்தவர்களின் கதை அதிகம். முன்பு பொதுமக்களின் பார்வைக்கு ஒதுங்கி மறைமுகமாக பலரும் விளையாடிய சூது விளையாட்டுக்களை, இன்று அவரவர் கைகளிலுள்ள மொபைல்களுக்குள் கொண்டு வந்துவிட்டது இணையம். சமூக வலைதளங்கள், இணையப் பக்கங்கள் என எங்கு திரும்பினாலும் 'ரம்மி விளையாட வாங்க' என அழைக்கின்றன விளம்பரங்கள். ஆன்லைன் ரம்மியில் பணத்தைக் கட்டி வெற்றி பெற முடியாமல் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்கிறார்கள்.

எஸ்.பி பாலு

சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள்வரை பலரும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டனர். ஆட்டத்தில் வெல்ல முடியாமல், பணத்தையும் இழந்து தங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்கிறார்கள். பலர் இந்த விளையாட்டிலிருந்து மீள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மியால் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் அனுப்பிய 'வாட்ஸ் அப்' ஆடியோ இதற்கு உதாரணம். தொடரும் இந்த மரணங்களுக்குத் தீர்வுதான் என்ன?

சைபர் கிரைம் துறையின் ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்.பி பாலு சுவாமிநாதனிடம் பேசினோம்.

``சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் பயந்துதான் மனிதன் தவறு செய்யாமல் இருக்கிறான். ஆனால், ஆன்லைனில் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. தன்னுடைய அடையாளங்களை முழுவதுமாக மாற்றிக்கொண்டு வேறோரு அடையாளத்தில் உலவ முடியும். அப்படியிருக்கையில் ஆன்லைன் கேம்களில் சாதாரண மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம். ஆன்லைன் சூதாட்ட கேம்கள் சாதாரண மனிதனின் ஆசையைத் தூண்டி, கேம் விளையாட வைக்கிறது. எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆன்லைன் சூதாட்ட கேம்களில் அந்தப் பக்கம் நின்று விளையாடுவது மனிதன் இல்லை, இயந்திரங்கள்.

Also Read: “ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா!” - உயிர் குடிக்கும் ரம்மி...

ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் (Artificial intelligence) எனப்படும் தொழில்நுட்பம். ஆரம்பத்தில் மக்களின் ஆசையைத் தூண்டி விளையாடச் செய்கிறது. ஆரம்பத்தில் விளையாடும் நபருக்கு பணம் கிடைக்கிறது. எனவே, மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து விளையாடும்போது தன்னிடமிருக்கும் பணத்தை லாவகமாக எதிர்முனையில் இருக்கும் இயந்திரம் எடுத்துக்கொள்கிறது. இப்படிப் பணத்தை இழந்தவர்கள், இழந்த பணத்தை இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிலேயே சம்பாதிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இந்த ஆன்லைன் கேம்களில் இழந்த பணத்தை மீட்பதென்பது முடியாத காரியம். அதனால், பணத்தை இழந்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பணத்தை மீட்டெடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குச் செல்கின்றனர்.

இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் மூளை சுறுசுறுப்பாக செயல்படும் என்று ஆசையைத்‌ தூண்டுகின்றன விளம்பரங்கள். ஆனால், இந்த கேம் விளையாடுவதால் மூளை சுறுசுறுப்பாக எல்லாம் இயங்குவதில்லை. தெளிவாகச் சொல்லப்போனால், இந்த விளையாட்டுகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, இந்த சூதாட்ட விளையாட்டுகளை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும். மேலும், ஆன்லைன் உலகில் கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருக்கிறது. ஆனால், பாதுகாப்பு மிகக்குறைவு. இந்த மாதிரியான விளையாட்டுகளில் சிக்கி பணத்தை இழந்தவர்களால் ஒருபோதும் பணத்தை மீட்டெடுக்க முடியாது. இது மன உளைச்சலுக்கும், தற்கொலைக்குமே மனிதனை இட்டுச் செல்லும். எனவே இதை முழுவதுமாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும். அதுமட்டுமே இதனால் ஏற்படும் சேதங்களுக்கு ஒரே தீர்வு" என்றார்.

அபி சங்கரி

இந்த விளையாட்டினால் ஏற்படும் மனஉளைச்சலில் இருந்து எப்படி மீள்வது என உளவியல் ஆலோசகர் அபி சங்கரியிடம் பேசினோம்.

"இந்த லாக்டௌன் காலத்தில் ஆன்லைன் ரம்மி பரவலாக விளையாடப்படுகிறது. விளையாடும் எல்லோருக்கும் இந்த ஆன்லைன் ரம்மியில் பணம் சம்பாதிக்கும் போது சந்தோஷம் ஏற்படுகிறது. இந்த லாக்டௌனில் பணம் சம்பாதிக்க முடிகிறது என சந்தோஷம் அடைகிறார்கள். இந்த உற்சாகம் அவர்களை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ரம்மி விளையாட வைக்கிறது. சிறிது நாள்களில் ரம்மியில் சம்பாதித்த பணத்தை இழக்கும்போது தீவிரமாக விளையாட ஆரம்பிக்கிறார்கள். இப்படியாக ரம்மிக்கு அடிமையாகிறார்கள்.

Also Read: பணம் வைத்து சீட்டாடுவது குற்றம்; ஆன்லைன் ரம்மி குற்றமில்லை - ஆன்லைன் சூதாட்டப் பின்னணி !

இதற்கு அடிமையானவர்கள்‌ மற்றவர்களுடன்‌ பேசுவதை குறைத்துக் கொள்வார்கள். அதிக கோபமும், எந்த நேரமும் ரம்மியைப் பற்றிய நினைப்பிலும் இருப்பார்கள்‌. ரம்மி விளையாடுவதை மற்றவர்களிமிருந்து மறைத்துக்கொள்வார்கள். இதில் பணத்தை இழந்தவர்கள் நிம்மதியின்றி, இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்கள். எரிச்சல்,கோபம் அதிகமாகும். எல்லா செயல்களிலும் கவனச்சிதறல் ஏற்படும். யாராவது ரம்மி தவறானது, அபாயகரமானது என்று கூறினால் அவர்கள் மீது அதிகக் கோபம் ஏற்படும். இதனால் தூக்கம், உணவு, அவர்களின் குணாதிசயங்கள் எல்லாவற்றிலும் பிரச்னை வரும். மன உளைச்சல் அதிகரிக்கும். ரம்மிக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கும் செல்வார்கள்.

ஒரு கட்டத்தில் எவ்வளவுதான் முயன்றாலும் இந்த விளையாட்டை அவர்களால் விட முடியாது. இது ஒரு போதையாக மாறிவிடும். இப்படி அடிமையான ஒருவர், ரம்மிக்கு அடிமையானதிலிருந்து வெளிவர சில குறிப்புகள்.

ரம்மி விளையாடுவதற்கு முன் பத்து நிமிடம் அல்லது 20 நிமிடம்தான் விளையாடப் போகிறோம் என்று நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். இரவு தூங்கும்போது செல்போனை அருகில் வைத்துக்கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் விளையாடத் தோன்றும். எனவே இரவு தூங்கும்போது செல்போனைத் தூரத்தில் வைத்துவிட்டுத் தூங்கலாம். மேலும், உங்களிடம் இருக்கும் தனித்திறமைக்கென்று நேரம் ஒதுக்கலாம்.

வாக்கிங்

உடற்பயிற்சி, வாக்கிங், வெளியே சென்று வருதல் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடலாம். இறுதியாக மனநல ஆலோசகரைச் சந்தித்து இந்த ரம்மியிலிருந்து எப்படி விடுபடவேண்டும் என்று கலந்தாலோசிக்கலாம்" என்றார்.

பொழுதுபோக்கு, பணம் என இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடாமல் மக்கள் எச்சரிகையுடன் இருக்க வேண்டும். சாமான்ய மக்கள் சிக்கித் தவிக்கும் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளிலிருந்து அவர்களை உடனடியாகக் காக்க வேண்டியது அரசின் கடமை.



source https://www.vikatan.com/social-affairs/crime/shocking-background-of-online-rummy-games

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக