Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

புதுச்சேரி: `திருமாவளவனின் முழு பேச்சையும் கேட்க வேண்டும்!’ முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``தற்போது மனுநூல் குறித்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது முழு பேச்சையும் கேட்காமல், அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருமாவளவனின் பேச்சைத் திரித்து, களங்கம் விளைவிக்கவும், அவர் மீது பழிபோடவும் பா.ஜ.க பொய்ப் புகார்களை அளித்திருக்கிறது. சொல்லப்படும் கருத்துகளை திசைதிருப்பி பழி சொல்லும் வேலையை பா.ஜ.க சாதுரியமாகச் செய்யும்.

திருமாவளவன்

அதனால், திருமாவளவனின் முழு பேச்சையும் கேட்டுவிட்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். அதேபோல பொய்ப் புகார் தந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் மீது பழி சுமத்துவதை பா.ஜ.க வாடிக்கையாக வைத்திருப்பதைக் கண்டிக்கிறேன்.

புதுச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 மாதங்களாக ஊதியம் போடாததற்கு நானோ, கல்வியமைச்சரோ காரணமல்ல. மாதந்தோறும் ஊதியம் தருவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருக்கிறோம். ஆனால், அவர்களுக்கு அந்தப் பணத்தைத் தர பல கேள்விகள் எழுப்பி ஆளுநர் கிரண்பேடி கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் காலியாக இருக்கும் அரசுப் பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக போலீஸ் நியமனம் தொடர்பாக ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. நவம்பர் 4 முதல் அதற்கான தேர்வு நடக்கிறது. ஆய்வாளர் பதவியை நிரப்பவும், மின்துறையில் பொறியாளர் நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கிறோம்.

Also Read: புதுச்சேரி: `வரலாற்று துரோகம்’ - இட ஒதுக்கீடு விவகாரத்தில் கொதிக்கும் முதல்வர் நாராயணசாமி

எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை நிரப்ப கோப்புகளை தயாரிக்கும்படி தலைமைச் செயலரிடம் கூறியிருக்கிறேன். புதுச்சேரியில் அரசு பணிகளில் 30 ஆயிரம் பேரும், தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களில் 2 லட்சம் பேரும் பணிபுரிகின்றனர். தனியார் நிறுவனத்தோடு இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த இருக்கிறோம். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 5,000 பேருக்கு மேல் வேலை கிடைக்கும். மொத்த மக்கள் தொகையில் ஆறு சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பில் இருப்பார்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-cm-narayanasamy-speaks-about-thirumavalavan-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக