கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். ஐந்து குழந்தைகளும் ஒரே பிரசவத்தில், சில நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஓர் ஆண் குழந்தை, நான்கு பெண் குழந்தைகள் என நிகழ்ந்த ரமாதேவியின் பிரசவம், கேரளாவில் கொண்டாடப்பட்டது. ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள் என கேரள மீடியாவில் அது முக்கியச் செய்தியானது.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்த தன் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிட்டு வளர்த்தனர் பிரேம்குமாரும் ரமாதேவியும். தன் ஐந்து குழந்தைகளையும் ஐந்து ரத்தினங்கள் என்று கொஞ்சிய பெற்றோர், அவர்களை 'பஞ்சரத்னம்' என ஆசையுடன் அழைத்தனர்.
ஐந்து குழந்தைகளுக்கும் பிறந்தநாள், அவர்களை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நாள், அவர்களுக்குப் பொதுத்தேர்வு முடிவு வரும் நாள் என்று எல்லாமே அந்தக் குடும்பத்தில் அதிக மகிழ்ச்சியுடனும் உலகத்துக்கு ஆச்சர்யத்துடனுமே நடந்தது.
இதற்கிடையில், ரமாதேவிக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவச் செலவு கையை மீறிச் சென்றது. சிறு வியாபாரியான பிரேம்குமார், கடன் பிரச்னையால் மனமுடைந்து 2004-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். ஐந்து குழந்தைகளுடன் கஷ்டப்பட்ட ரமாதேவிக்கு கேரள அரசு, கூட்டுறவு வங்கியில் வேலை வழங்கியது. அதன்பிறகு குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார் ரமாதேவி.
ஐந்து குழந்தைகளையும் உடை முதல் பழக்கவழக்கங்கள் வரை அனைத்திலும் ஒரே மாதிரியாக வளர்த்த ரமாதேவி, அவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்காகக் கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்.
ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ள உத்ராவிற்கு ஆயூரைச் சேர்ந்த, தற்போது மஸ்கட்டில் ஹோட்டல் மேலாளராக இருக்கும் அஜின் குமார் நிச்சயக்கப்பட்டார்.
கொச்சி அமிர்தா மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் டெக்னீஷியனாகப் பணிபுரியும் உத்ரஜாவுக்கு, பத்தணம் திட்டாவைச் சேர்ந்த மயக்கவியல் டெக்னீஷியன் ஆகாஷ் நிச்சயக்கப்பட்டார்.
ஆன்லைன் ஊடகத்தில் செய்தியாளராகப் பணிபுரியும் உதாராவிற்குக் கோழிக்கோடைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகேஷ் நிச்சயக்கப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீஷிசியனாகப் பணிபுரியும் உத்தமாவிற்கு மஸ்கட்டில் அக்கவுன்டன்டாகப் பணிபுரியும் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த வினீத் நிச்சயக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் ரமாதேவியின் நான்கு மகள்களின் திருமணமும் ஒரே நாளில் குருவாயூரில் நடக்க இருந்தது. கொரோனா ஊரடங்குக் காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி தன் 'பஞ்சரத்னங்களில்' மூன்று பேருக்கு குருவாயூர் கோயிலில் திருமணத்தை முடித்துள்ளார் ரமாதேவி. உத்ரஜாவிற்கு நிச்சயக்கப்பட்ட வரன் குவைத்தில் பணிசெய்துவருகிறார். கொரோனா காலம் என்பதால் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் அவரால் ஊர்திரும்ப இயலவில்லை. எனவே, அவர்களது திருமணம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களது திருமணம் நடக்கும் என்கிறார் ரமாதேவி.
இந்த 'பஞ்சரத்ன' குடும்பத்தின் திருமணப் புகைப்படங்கள், அழகு!
source https://www.vikatan.com/news/three-sisters-from-quintuplets-get-married-on-the-same-day-in-kerala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக