Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

`சிறைசென்றும் திருந்தவில்லை!’ - மக்களின் உயிரோடு விளையாடிய போலி பெண் மருத்துவர்

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள பிரம்மபுரம் திருவள்ளுவர் தெருவில், போலி பெண் மருத்துவர் ஒருவர் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்குத் தவறான சிகிச்சை அளிப்பதாக காட்பாடி தாசில்தார் பாலமுருகனுக்குப் புகார் வந்தது. இதையடுத்து, தாசில்தார் பாலமுருகன், மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினரும், திருவலம் போலீஸாரும் சம்பந்தப்பட்ட அந்த கிளினிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர்.

கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

கிளினிக்கில், விஜயகுமாரி (50) என்பவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஹோமியோபதி படித்துள்ள அவர் அலோபதி மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் விஜயகுமாரியைக் கைது செய்தனர். அவர் நடத்திவந்த கிளினிக்கில் இருந்து மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்த மருத்துவத்துறை அதிகாரிகள் கிளினிக்கையும் மூடி சீல் வைத்தனர்.

Also Read: கரூர்: சைல்டு ஸ்பெஷலிஸ்ட்; தனி மருத்துவமனை! - அதிர்ச்சி கொடுத்த போலி மருத்துவர்

விஜயகுமாரி ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்றும் ஜாமீனில் வந்த அவர், திருந்தாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்ததும் தெரியவந்துள்ளது. மருந்து, மாத்திரைகளை விஜயகுமாரி எங்கு வாங்குகிறார்? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.

மருத்துவர்களின் கல்வித் தகுதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் ஆகிய விவரங்களைப் பலகையில் எழுதி கிளினிக் அல்லது மருத்துவமனை முன்பு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

போலி பெண் மருத்துவர் விஜயகுமாரி

மாற்று மருத்துவமான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய தரப்பினரும், தங்கள் துறைசார்ந்த சிகிச்சைகளை மட்டுமே அளிக்க வேண்டும். அலோபதி சிகிச்சை அளிக்கக் கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர். ஆனாலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் முன்பு மருத்துவர்களின் விவரங்கள் அடங்கிய பலகை வைக்கப்படவில்லை.

`மருத்துவத்துறை அதிகாரிகளும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. யாரேனும் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறார்கள். அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால்தான் போலி மருத்துவர்களும் பெருகி பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கிறார்கள்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.



source https://www.vikatan.com/social-affairs/crime/fake-doctor-arrested-in-katpadi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக